Skip to content
Post Views: 2
“குறிஞ்சி – தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
என்பது, இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு ‘மெய்தொட்டுப் பயிறல்’ முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது.
-இறையனார்”
வழக்கத்தைவிட சீக்கிரமே குடோனுக்கு வந்த நண்பனை கேள்வியாய் நோக்கினான் முத்து.
“என்னல மாப்ள இம்புட்டு சீக்கிரம் வந்துருக்க. . யாரு என்ன சொன்னா?”
“எல்லாம் வீட்டுல உள்ள பெருசுக தான். . சாதகம் கல்யாணம்னு கழுத்தருக்குதுக. . எத்தன தடவ தான் சொல்றது இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு. . எரிச்சல கெளப்பிக்கிட்டு. . ”
“மாப்ள இப்போ வேணாங்றியா இல்ல எப்பவுமே வா. ”
“எலேய் நீயுமா டா. . ஏன் டா இப்படி. . எல்லாம் தெரிஞ்சும்…”
“சரி விடுல. . எப்படியும் சாப்டுருக்க மாட்ட. . மெஸ்ல சாப்பாடு சொல்றேன் சாப்டு வா. . ”
முத்துவும் எழிலமுதனும் விவரம் தெரிந்த காலத்திலிருந்தே நண்பர்கள். . சொல்லப் போனால் எழிலின் ஒரே நண்பன் அவன் மட்டுமே. . 28 வருட நட்பு. . நட்பையும் தாண்டி குடும்பத்தில் ஒருத்தன் எனுமளவு நெருக்கம். . . அதனாலேயே படிப்பை முடித்த கையோடு எழிலோடு சேர்ந்து தொழிலுக்கு வந்துவிட குடோனின் மொத்த பொறுப்பும் அவனிடமே. அதுமட்டுமின்றி கணக்கு வழக்கையும் பார்த்துக் கொள்கிறான்.
அவனுக்கே திருமணம் முடிந்து இரு பிள்ளைகள் இருக்கின்றனர். அப்படியிருக்க எழிலை கட்டாயபடுத்தாமல் இருக்கும் காரணம் அவனும் எழிலும் மட்டுமே அறிந்தது.
இருவரும் அமைதியாய் சாப்பிட்டு கொண்டிருக்க முத்துவின் போன் அலற ஆரம்பித்தது. அதியன் தான் அழைத்திருந்தார்.
“இந்தா என்னை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுடாய்ங்கல. . உன் சித்தப்பாருதேன். . ”
“ஹலோ சித்தப்பூ என்ன காலையிலேயே போன் பண்ணிருக்கீக. . ”
“எலேய் ரொம்ப நடிக்காத. . அதான் உன் எதிர்த்தாப்புல உக்காந்து ஒரு கள்ளூளிமங்கன் சாப்டுதானே அவன் சொல்லிருப்பானே எல்லாத்தையும். அப்பறம் எதுக்குலே நடிக்குத. . ”
“என்ன சித்தப்பூ பக்கத்துல உக்காந்து பாத்தாப்புல புட்டு புட்டு வைக்குறீக. . ”
“ம்ம் நீ வீட்டுபக்கம் போயிறாத உன்னை புட்டு புட்டா ஆக்கிருவாக. . ஒழுங்கு மருவாதையா என்ன விசயம்னு என்கிட்ட வந்து சொல்ற. . இல்ல மகனே உன்னதான் மொதல்ல உப்புகண்டம் போடுவேன். புரியுதாலே. . ”
“இதெல்லாம் அநியாயம் சொல்லிப்புட்டேன். . எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தானுல இருக்கு. . உங்கமவன்கிட்ட கேட்டு அவனே சொல்லலனா எனக்கு மட்டும் என்ன தெரியும். . ”
“ஏலேய் மொச பிடிக்குற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதா. . அவனைப் பத்தி உனக்கு தெரியாதுனு சொன்னா நேத்து பொறந்த பச்ச பிள்ளை கூட நம்பாதுல. . பக்கத்துல அவன் இருக்க தைரியதுல தான வாய் பேசிகிட்டு இருக்க தனியா என் கையில சிக்காமயா போய்ருவ. . இருக்குலேய் அன்னைக்கு உனக்கு. . ”என்று வசைபாடிய வாறே போனை கட் செய்தார்.
“சரியான கொலகாரப் பய குடும்பம் டே உன்னோடது. சம்மந்தபட்டவன விட்டுட்டு வேடிக்க பாக்க வந்தவன கொடையுறாய்ங்க. . ஆக மொத்தம் உன் வீட்டுபக்கம் இப்போதைக்கு போக கூடாதுனு மட்டும் புரியுது.
நீயும் தான் இம்புட்டு அநியாயம் பண்ண கூடாதுல. . ஏழுகழுத வயசாகுது இன்னுமா அந்தபுள்ளையவே நினைச்சுட்டு இருக்க இந்நேரம் அந்த புள்ளைக்கே எத்தன புள்ளயிருக்குமோ. . ”
“ஏலேய் ஆத்திரத்தை கிளப்பாம போய்ரு. . ”
“எழிலு புரிஞ்சுக்கோல. . பதினாரு வயசுல வந்ததெல்லாம் தெய்வீக காதலால. . இப்போ இம்புட்டு பீல் பண்றவன் அப்போ அந்த புள்ளைகிட்ட லவ்வை சொல்லிருக்கனும் அதுவுமில்ல. . அவ ஊரைவிட்டு போறவர வாய மூடிட்டு இருந்துட்டு இப்போ வந்து கழுத்தருக்குறியேல. . ”
“புரியுது மாமா ஆனாலும் எனக்கே இதுல இருந்து வெளில வர முடியலையே. . என்ன பண்ண சொல்ற. . மனசுல ஒருத்தியை வச்சுகிட்டு இன்னொரு பொண்ணோட எப்படி வாழ முடியும் சொல்லு. . அது மட்டுமில்லாம எனக்கென்னவோ அவ திரும்ப என்கிட்டயே வந்துருவானுதான் தோணிட்டேயிருக்கு. . இன்னும் ஒரு வருஷம் போட்டும் மாமா அப்பறம் நீங்க எல்லாம் என்ன சொல்றீகளோ அப்படியே கேக்குறேன். நீயாவது புரிஞ்சுக்கோல. . ”
“ம்ம் வருவா வருவா புருசன் புள்ள குட்டியோட வருவா. . எதாவது சொல்லிரப் போறேன்ல. . அப்படி என்ன இழவெடுத்த காதலோ மண்ணாங்கட்டியோ. . எக்கேடோ கெட்டு போனு விட்டுத் தொலையவும் முடில. . இங்யேரு இன்னும் ஒரே வருசம் தான் அதுக்கு மேல நீயே நினைச்சாலும் உன் கல்யாணத்தை நிறுத்த முடியாது சொல்லிட்டேன். . பாத்துக்க. . ”
“ஆமா அந்த புள்ள பேரு என்னலே. . இன்னமும் உனக்கு அவ முகம் நியாபகமிருக்கா?”
“சாகுற வர மறக்காது மாமா. . பொழிலரசி பேருக்கு ஏத்த மாதிரி அரசியேதாம்ல. . அம்புட்டு கம்பீரமா இருக்கும் அது பேச்சும் நடையும். . எல்லாத்துக்கும் மேல அந்த புள்ள இல்லைனா இந்நேரம் என்னை பொதச்ச இடத்துல புல்லு முளைச்சுருக்கும்ல. . ”
“இந்த ஒரு காரணம் தாம்லே என்னையும் உனக்காக யோசிக்க வைக்குது. . அந்த வயசுல காதல் வர ஆயிரம் காரணம் இருக்கும் வயசு கோளாறு அழகு பணம்னு இப்படி எத்தனையோ ஆனா உன்னை ஆபத்துல காப்பத்தினதை மனசுல வச்சு உன் விருப்பத்தை சொல்லி படிக்குற பிள்ளை மனச கெடுக்க கூடாதுனு இருந்துட்டு உன் படிப்பையே தொலச்சுட்டு இருக்கியேல.
உன் நல்ல மனசுக்காகவே அவ உனக்கு கிடைக்கணும்ல. . சரி விடு மனசை போட்டு குழப்பிகாத நடக்குறது தான் நடக்கும். சரி மாப்பிள நீ கடைக்கு கிளம்பு. . ”
அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவன் அதியனை அழைத்தான்.
“சித்தப்பூ நாதேன் பேசுறேன். . ”
“சொல்லுலே உன் நம்பர்ல நீ பேசாம நம்ம சி எம்மா பேசுவாரு. . சொல்ல வந்தத சொல்லி தொல. . ”
“ஆனா சித்தப்பூ இந்த வயசுலயே இந்த போடு போடுறியே வாலிப காலத்துல என்னலெல்லாம் பண்ணிருப்ப. . சரி சரி எழிலுகிட்ட பேசிட்டேன். . இன்னும் ஒரு வருசம் போகட்டும்னு சொல்லுதான். ”
“ஏன் அதுகுள்ள அந்த பிள்ளையை தேடி கண்டுபிடிக்க போறானாமா??”
“ஏது!!!!!சித்தப்பூ எந்த பிள்ளைய சொல்லுதீக. . ”
“ம்ம் எந்த பிள்ளனு தெரிஞ்சா நா ஏம்ல உன்னோட இப்படி உக்காந்து மொக்கைய போட்டுட்டு இருக்க போறேன். . ”
“அப்பறம் எப்படி சித்தப்பூ?”
“ஏலேய் இந்த வயசுல ஒருத்தன் கல்யாணம் வேணாம்னு சொல்ல வேற என்னல காரணமா இருக்க முடியும். அவனை பார்த்தா சாமியாரா போறவன் மாறியும் தெரில அப்போ கண்டிப்பா காதல் கத்திரிக்காயா தான இருக்கும்?”
“நீங்க ஒரு கிராமத்து விஞ்ஞானி சித்தப்பூ. . பின்றீயளே. . சரி அத விடுங்க. . இன்னும் ஒரே வருசம் கொஞ்சம் விட்டுப் புடிப்போம். . பய ரொம்ப பீல் பண்ணி பேசுறான் பாவமா இருக்கு சித்தப்பூ. . ”
“ம்ம் புரியுதுல இப்போதைக்கு இவ்ளோ இறங்கி வந்ததே பெரிய விஷயம் தான் 32ல கல்யாணம் பண்ணாலும் 33 ல பண்ணாலும் அரை கிழவன் கிழவன் தானல. .
ஆனாலும் உன்கூட எல்லாம் சுத்திட்டு அவனுக்கு எப்பபடி காதல் கருமமெல்லாம் பூத்துச்சு அதான்ல என்னால ஏத்துக்கவே முடில. . ”
“ஏன் பேசமாட்ட. . பதினொன்னாவது படிச்சப்போ மஞ்சகாமால வந்து ஒரு நாலு மாசம் நா பள்ளிகூடத்துக்கு போகாம இருந்தேன். அந்த கேப்ல தான் கடா வெட்டிருக்கான் உன் மவன். ”
“அதச் சொல்லு. . நீயெல்லாம் கூட இருக்குற வர அவன் எப்படி உருப்புடுவான் சொல்லு. . நீ இன்னும் ஒரு நாலு மாசம் லீவ் போட்டுருந்தனு வை. . அந்தபிள்ளையோட அவனுக்கு இந்நேரம் கல்யாணமே ஆய்ருக்கும். எல்லாம் விதி டே. . ”
“உன் காட்டுல மழை நீ நடத்து சித்தப்பூ. . வீட்டுப்பக்கம் போனா சித்தி கிட்ட நல்லா பெருமையா உன்னபத்தி போட்டு கொடுக்கிறேன். . ”
“போ போ அப்படியாவது அவகிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடைச்சா சரி. . அந்த நல்லதெல்லாம் எங்கனல நடக்குது. . வெட்டிக் கதை பேசாம போய் பொழப்பை பாருலே. . ”
வீட்டிற்கு வந்தால் மறுபடியும் யாரேனும் எதாவது பேச்சை ஆரம்பிப்பார்கள் என தென்காசியிலிருந்து தாமதமாகவே கிளம்பினான். வழக்கமாய் மாலை ஒருமுறை வீட்டிற்கு வருபவன் அன்று வராமல் எட்டு மணிக்கு தான் வந்தான்.
அவனது வீடு தெருவிலிருந்து ஒரு கார் செல்லும் பாதைபோல் சற்று உள்ளே சென்று வலதுபுறம் திரும்பினால் பெரிய முற்றத்தை தாண்டி கம்பீரமாய் நிற்கும் சிறு அரண்மனை போன்று இருக்கும். அனைத்தும் அந்த காலத்து கதவுகளாய் கம்பீரமாய் இருக்கும் எத்தனை வசதி வந்தாலும் தரை இன்னும் அந்தகால வழுவழுப்பான செங்கல் தரையாய் தான் இருக்கும். தரையின் நிறத்தை பராமரிப்பதற்காகவே மருதானி மரம் வளர்த்து மருதானி நீர் கொண்டே தரையை மொழுகுவார்கள்.
முற்றத்தை தாண்டி வராண்டா போன்ற நீளமான அமைப்பு அங்கே ஓர் ஓரத்தில் அமர்ந்து பேசும்படி திண்டும் அதன் அருகிலேயே சோபா டீபாயும் போடப்பட்டிருக்கும். வராண்டாவின் மறு கோடியில் மாடிக்குச் செல்வதற்கான படிகள் பிள்ளைகள் நால்வருக்கும் தனித் தனி அறைகள் அவரவர் இஷ்டப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
கீழே பெரிய ஹாலில் டைனிங் டேபிளும் டீவியும் பொருத்தப்பட்டிருக்க நடுநாயகமாய் அந்த பெரிய மர ஊஞ்சல் அசைந்தாடும். அதை தொடர்ந்து ஹாலை ஒட்டினாற் போன்றே மகேந்திரநாதன் பாக்கியத்தின் அறையிருக்க அதைத் தொடர்ந்து சற்று பின்புறம் பெரியவர்கள் மூவருக்குமான அறைகள் அதை கடந்து சமையலறையும் சாமான்களுக்கான அறைவீடும் பின்புறம் தோட்டத்திற்குச் செல்வதற்கான பாதையுமாய் அம்சமாய் இருந்தது.
மகேந்திரநாதன் அந்த காலத்திலேயே பார்த்து பார்த்து கட்டியிருந்தார் இல்லை இல்லை செதுக்கியிருந்தார் என்று தான் கூற வேண்டும்.
எழில் உள் நுழையும் போதே வழக்கமான அரட்டை கச்சேரி வாசலில் ஆரம்பமாகியிருந்தது.
ஆச்சி தாத்தாவோடு முகிலமுதனும் அங்கயர்கண்ணியும் கதையளந்து கொண்டிருக்க அப்பா சித்தப்பாக்கள் தொழில் விஷயமாய் ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
மலரொளியும் பூம்பாவையும் கோவிலுக்குச் சென்றிருக்க வெற்றிச் செல்வி சமையலறையில் ஏதோ வேலையாய் இருந்தார்.
வீட்டை பெருக்கித் துடைப்பதிலிருந்து தோட்டவேலை வரை அத்தனை ஆட்கள் இருந்தாலும் சமையல் மட்டும் வீட்டுப் பெண்கள் தான் என்பது பழக்கம்.
வண்டியை நிறுத்தியவன் யாரையும் கண்டுகொள்ளாமல் உள்ளேசெல்ல எத்தனிக்க அதியனே அவனை அழைத்து நிறுத்தினார்.
“என்ன எழிலு இன்னைக்கு லேட்டா. . வா இங்கன வந்து உக்காரு. . ”
“ம்ம் இருக்கட்டும் சித்தப்பா. . ஒரே அசதியா இருக்கு வரேன். . ”,என பிடிக் கொடுக்காமல் உள்ளே சென்றுவிட அடுத்த பத்தாவது நிமிடம் அங்கயர்கண்ணி அவனது அறைக்குள் நுழைந்தாள்.
“அண்ணே ஒரு வழியா ஒரு வருசத்துல கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டியாமா?!எனக்கு காஸ்ட்லி பட்டுபுடவை தான் வேணும் இப்போவே சொல்லிட்டேன். ”
“அதுக்குள்ள யாருட்டீ சொன்னா. . அவன் இருக்கானே சரியான ஓட்ட வாய் நாராயணண். . எல்லாத்துலயும் அவசரம்…”
“முத்தண்ணண எதுக்கு ஏசுற இப்போ. . அவரு பேசுனதுனால தான இப்போ உன்னை யாரும் எந்த கேள்வியும் கேட்கல. . ”
“ம்ம் அதென்னவோ சரிதேன். . ”,என்றவன் அயர்வாய் கட்டிலில் கையூன்றி அமர்ந்தான்.
மெதுவாய் அவனருகில் வந்தவள்,”அண்ணே எனக்கு மட்டும் சொல்லு அந்தபொண்ணு யாரு??”
“என்னது???!!!!!”
“ஷ்ஷ்ஷ் ஏன்ணே கத்துத. . நானே அப்பா ரகசியமா அம்மாகிட்ட பேசும் போது ஒட்டு கேட்டு வந்துருக்கேன். கத்தி நீயே காட்டி கொடுத்துருவ போலயே. . எனக்கு மட்டும் சொல்லேன். அவுக பேரு என்ன. . இப்போ எங்க இருக்காக. . நீ ப்ரப்போஸ் பண்ணியா?”
காதைப் பிடித்து திருகியவன்,”ஏட்டீ இந்த அறிவை படிப்புல காட்டலாமில்ல. . பெரியவுக பேசும் போது ஒட்டு கேட்டதே தப்பு அத தைரியமா என்ட்டயே வந்து சொல்லுதியே. . உன்ன என்ன பண்ணலாம். . ”
“அண்ணே சும்மா சும்மா காதை திருகாத நாளப் பின்னே வர்ற மாப்ள காது வளைஞ்சுருக்குனு என்னைய வேணாம்னு சொல்லிரப் போறான்.
எப்பவும் இப்படி கேக்கெல்லாம் மாட்டேன். . உன் பேரு அடிபட்டுது என்னனுபாத்தா லவ் ஸ்டோரி வேற. . விரைப்பா பட்டாளத்தான் மாதிரி திரியுற உனக்கு இப்படி ஒரு கதையானு ஆர்வத்துல தான் கேட்டேன். ”
நல்ல ஆர்வம் போ போய் படிக்குற வேலைய பாரு. . ”
“அண்ணே ப்ளீஸ் ப்ளீஸ் உன் லவ் ஸ்டோரியை சொல்லேன். . அவுகள எங்க பாத்த. . பேசிருக்கியா. . இப்போ எங்க இருக்காக?”
“தலைவலிக்குது கண்ணி கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன். காலையில இருந்து அம்மாகிட்ட பேசவேயில்ல. . எங்க இருக்காக?”
“ம்ம் சரி சரி சாப்பாட்டுக்கு அப்பறம் கண்டிப்பா சொல்லணும் சொல்லிட்டேன். . பெரியம்மா சமையகட்டுல தான் இருக்காக. . நீ போ நா அப்பறமா கண்டிப்பா வருவேன். . ”
ஒரு வழியாய் அவளை கிளப்பியவன் சமையல் கட்டிற்குச் செல்ல வெற்றிச் செல்வி அடுப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.
“யம்மா. . ”
“வா எழிலு என்ன லேட்டு எதாவது சாப்டுதியா?”
“அதெல்லாம் வேணாம். . என் மேல கோவமா காலையில உன்கிட்ட பேசாமயே போய்ட்டேன். . ”
“அம்மா என்னைக்குல கோவபட்டுருக்கேன். . எல்லாரும் உன் நல்லதுக்கு தான சொல்றாவ. . ஆனா இளையவரு வந்து ஒரு வருசம் கழிச்சு நீ கல்யாணம் பண்ணிக்குறனு சொன்னப்பறம் தான் மலருக்கும் பூவுக்கும் அம்புட்டு சந்தோசம் தெரியுமா. . ”
“அப்போ உனக்கு??”
“எனக்கும் தாம்லே. . என் மருமவள பார்க்கணும்னு எனக்கு மட்டும் ஆசையிருக்காதா. . ”
“ம்ம்”
“என்ன டே ஏதோ சொல்ல வந்து தயங்குற மாதிரி இருக்கு. . அம்மைகிட்ட என்ன தயக்கம்?”
“இல்லம்மா. . இந்த ஒரு வருஷத்துக்குள்ள தமிழு கல்யாணத்தை முடிச்சுருவோமே. . ”
“அப்படியென்னலே அவன் கல்யாணத்துக்கு அவசரம்?”
“அப்படியில்லமா நாம குடும்பத் தொழிலு பாத்துக்குறோம் நம்ம பழக்க வழக்கம் பாதிக்கு மேல நம்ம ஊர்காரகளோடயே போய்ரும். யாரும் என்னைய பாத்து கேள்வி கேக்க போறது கிடையாது…
ஆனா தமிழு அப்படியா உத்யோகம்னு நாலு இடத்துக்கு போறவன் நாலு பேரை பாக்குறவன். . அதுவும் அவனுக்கு ஸ்நேகிதனுங்க அதிகம் வரிசையா ஒவ்வொருத்தனுக்கா கல்யாணம் ஆகுது. . இவன் மட்டும் இப்படியே இருந்தா நல்லாவா இருக்கு. . புரிஞ்சுக்கோமா. . ”
“ம்ம் இதுல நா சொல்ல ஒண்ணுமில்ல எழிலு. . நீயாச்சு உன் தம்பியாச்சு. . ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வாங்க. . வாய்யா சாப்டலாம். . நா போய் எல்லாரையும் கூட்டியாறேன். . ”
பிடிக் கொடுக்காமல் பேசிப் போனவரை பார்த்து அதிருப்தியாய் தலையசைத்தவாறு தானும் டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.
அனைவரும் அமைதியாய் உணவை உண்ண ஆரம்பிக்க எழிலமுதனே பேச்சை ஆரம்பித்தான்.
“அகத்தி சித்தப்பா. . நம்ம தமிழுக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு. . சேரன்மாதேவியில பாத்திரகடை வச்சுருக்காகளாம். பொண்ணும் எம் எஸி படிச்சுருக்காம். . நம்ம அம்பாசமுத்திரத்துல தான் ஸ்கூல் டீச்சரா வேலை பாக்குதாம். என்ன சொல்றீக. . ”
“என்னலே காலையிலே தான் ஜாதகம் கொடுக்க போறேன்னு சொன்னியாம் அதுக்குள்ள பொண்ணே பாத்துட்டியா. . ”
“அது ஏதோ கோவத்துல சொன்னது . . தற்செயலா நம்ம ஆவுடயப்பன் அண்ணே இருக்காருல அவரு பாத்தாரு. . அப்போ தான் தமிழு கல்யாணத்தை பத்தி சொன்னேன். அவரு பொண்ணு வீட்டுக்கு நெருக்கம் போல. . ஜாதகம் கையோட வச்சுருந்தாரு. விசாரிச்ச வர திருப்தியாவும் இருக்கு நீங்க எல்லாரும் பேசி முடிவுக்கு வாங்க காலையிலே ஜாதகத்தை தரேன். . ”
“ஏன்ணே இப்படி பண்ற உனக்கு முடிக்காம இப்போ எனக்கு என்ன அவசரம்?”
“ஏலேய் நல்லாயிருப்ப இப்போதான் அத்தனையும் வாய மூடிருக்குக நீ மறுபடியும் ஆரம்பிக்காத டே. . நாதேன் சொல்லிட்டனே ஒரு வருசம் போகட்டும் கட்டாயமா பண்ணிக்குறேன்னு அப்பறம் என்னலே. . ”
“ம்ம் இங்கன எல்லாம் துரை முடிவு பண்றது தான. . பெரியவுக பேச்சுக்கு மதிப்பு இல்லாம போச்சு. . ”,என மகேந்திரநாதன் சந்தடியில் அவனை வறுக்கத் தயாராக தட்டோடு எழுந்தவன்,
“தாத்தா போதும் நா வீட்ல உருப்படீயா சாப்புடுறதே நைட் சாப்பாடு மட்டும்தேன். . அதையும் கரிச்சு கொட்டி ஒட்டாம ஆக்காதீக. . ஆச்சி உன் வூட்டுகாரர்ட்ட கொஞ்சம் சொல்லி வை. . ரொம்பதேன் சூடா ஆகுறாரு. . ”,என்றபடி மாடிக்கு சென்றுவிட வெற்றிச் செல்வி தான் முகம் வாடிப் போனார்.
“கொஞ்சமாச்சும் உங்களுக்கு எதாவது இருக்கா சாப்டுத பிள்ளையை இப்படி எழுப்பி விடுதீகளே. . அவன்தேன் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டானே அப்பறமும் என்ன. . நாளைக்கு அவன் ஜாதகம் கொடுத்ததும் அதைபத்தி முதல்ல விசாரிங்க. . ”
“ம் எல்லாரும் இப்படியே அவன தலைல தூக்கி வச்சு ஆடுங்க அவன் அப்பறம் திமிரெடுத்து அலையாம என்னத்த பண்ணுவான். ”,என்று அவர் பிடியிலேயே நின்றார்.
சாப்பிட்டு முடித்து அனைவருமாய் அவரவர் அறைக்குச் செல்ல அங்கயர்கண்ணி மட்டும் மெதுவாய் எழிலின் அறைக் கதவை தட்டினாள்.
“அண்ணே உன் கதைய சொல்றேன்னு சொல்லிட்டு கதவை பூட்டிகிட்டு உள்ள என்ன பண்ணுத. . என் கூட பொறந்த குரங்கு மோப்பம் பிடிச்சு வர்றதுக்குள்ள உள்ள போண்ணே. . ”
“ஐய்யய்யே சின்ன புள்ளையா லட்சணமா இருக்குறத விட்டுட்டு அண்ணன்கிட்டேயே வந்து இதெல்லாம் கேக்குறீயே உன்னை என்ன பண்ணலாம்?”
“அண்ணே இதெல்லாம் இப்போ முக்கியமா நீ விஷயத்தை சொல்லு. . ”
“ஏட்டீ என்ன தெரியணும் உனக்கு இப்போ?”
“அவுக பேரு என்ன?”
“பொழிலரசி. . ”
“எழிலு – பொழிலு அடி செம பொருத்தம்ல. . ”
“கண்ணி இதெல்லாம் தப்பு இப்படி பேசாத. . இப்போ அவளுக்குனு ஒரு குடும்பம் இருக்கும். . ”
“சரி சரிண்ணே சரி சொல்லு அவுகள எப்போ பாத்த. . நீ லவ் பண்ணணு அவங்களுக்கு தெரியுமா. . ”
“ம்ம் அவ என்ன விட மூணு வயசு சின்னவ. . ஒரே பள்ளிக்கூடம் தான். எனக்கும் அவளுக்கும் ஏக பொருத்தம். எப்பவுமே சண்டை தான் போடுவோம். .
அதுக்கப்பறம் நம்ம தாத்தாவோட உடன்பிறப்பு பண்ண காரியம் தான் ஊருக்கே தெரியுமே சொத்துக்காக என்னை ஆளைவச்சு கடத்தி… அப்போ அவ தான் நா தப்பிக்க உதவி பண்ணிணா. .
அப்போ அந்த நிமிசம் மனசுல உக்காந்துட்டா ஆணி அடிச்ச மாதிரி. . ஆனா அவ நல்லா படிக்குற புள்ள அதனால கண்டதையும் பேசி அவ மனச குழப்ப வேண்டாம்னு அமைதியாவே இருந்தேன்.
இதுக்கு நடுல அவ பத்தாவது படிச்சப்போ அவங்கம்மா உடம்பு சரியில்லாம தவறிட்டாக. . அந்த வருசத்தோட இங்க படிப்பை முடிச்சு வேற ஊருக்கு போய்டா. .
எங்க போனானு தெரியாது. . தெரிஞ்சுக்கவும் தோணல. . ஆனா எப்பவும் எங்க இருந்தாலும் அவ நல்லாயிருக்கணும்னு மட்டும் நினைச்சுட்டேயிருக்கேன். ”
வாய் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது விழியும் மனமும் மொத்தமாய் வேறுலகத்தில் இருந்தது.
“அண்ணே. . ”
“சட்டென உணர்வு பெற்றவனாய் முகத்தை அழுந்த துடைத்தவன்,”ஏட்டீ போதும் எல்லாம் கேட்டாச்சுல போ போய் தூங்கு. இன்னொரு விசயம் இதெல்லாம் யாரு காதுக்காவது போச்சு உன் ரெண்டு ஜடையையும் சன்னல்ல கட்டிவச்சு வெளுத்து விட்டுருவேன். . புரியுதா?”
“ம்ம் இந்த சண்டியருக்குள்ளேயும் ஒரு காதல் மன்னன் இருக்கான் பாரு அததேன் என்னால இன்னுமும் நம்ப முடியல. . ”,என்றவள் அவன் பிடிக்க வருவதற்குள் சிட்டாய் பறந்திருந்தாள்.
கட்டிலில் விழுந்தவனுக்கோ விட்டம் முழுவதும் அவள் முகமே தெரிந்து கொண்டிருந்தது.
error: Content is protected !!