நெய்தல் தலைவி கூற்று(குறுந்தொகை(6)

               நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்

தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று

நனந்தலை யுலகமுந் துஞ்சும்

ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே.

என்பது வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது.

பதுமனார்

செய்தி

திருமண நாளைத் தள்ளிப்போட்டுவிட்டு அவன் பிரிந்தான்.  தலைமகள் தன் கவலையைத் தோழியிடம் சொல்கிறாள்.

யாம வேளையாகிய நள்ளிரவு எந்த ஆரவாரமும் இல்லாமல் நள்என்று இருக்கிறது.  மக்கள் பேசாமல் அடங்கிக் கிடக்கிறார்கள். உலகமும் சினம் இல்லாமல் தூங்குகிறது.  இந்த அமைதி வேளையில் நான் மட்டும் தூக்கம் வராமல் இருக்கிறேன்.

நிச்சயம் நல்லபடியாய் முடிந்து அனைவரும் வீட்டிற்கு திரும்பியிருக்க முகில் யாருக்கும் கேட்காத வண்ணம் தமிழிடம்,

“ஏன்ணே அண்ணிகிட்ட நம்பர் கொடுத்துட்டு வந்துருக்கலாம்ல. . பெருசுங்கதான் ஒண்ணும் சொல்லலனா நீயும் இப்படி இருக்கியே. . ”

“ஏலே எல்லாத்தையுமே இப்போவே பேசிட்டு நேர்ல வாழப் போறப்போ என்னத்த பண்ண போறோம். அதெல்லாம் அவகிட்ட சொல்லிட்டேன். இன்னும் ஒரு மாசம் தானே அப்பறம் பேசலாம்னு. . ”

“அடப்பாவி இதை எந்த கேப்ல பண்ண. . உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சுட்டனே. . ”

“போ போ நாங்கெல்லாம் அப்போவே அப்படி டே. . . ”

அனைவருமாய் சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்க எழில் அங்கிருந்து கிளம்பியவன் இப்போதுதான் வீட்டிற்கு வந்தான்.

“என்னடே கடைக்கும் போகலனு சொன்னாங்க எங்க போய்ட்ட?”

“இல்ல சித்தப்பா ஒரு சின்ன பஞ்சாயத்து அம்பாசமுத்திரத்துல தான் இருந்தேன். ”

“ம்ம் சரி சரி போலே போய் சாப்டு…”

அவன் உள்ளே சென்றபோது தமிழும் முகிலும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இவனைக் கண்டதும் முகில் குரலை தாழ்த்திக் கொண்டான்.

“என்னலே அண்ணணும் தம்பியும் என்னை பார்த்தவுடனே வாயை மூடிக்குறீக. . ”

“அதெல்லாம் ஒண்ணுமில்லணே. . ”

“ம்ம் என்ன புது மாப்பிள்ள எல்லாம் திருப்தி தான?”

“அதெல்லாம் உன் ஏற்பாட்டை குறை சொல்ல முடியுமா. . ரொம்பவே நல்லாயிருந்தது. . ”

“ம்ம் உங்க பேர் பொருத்தம் மாதிரியே சோடி பொருத்தமும் கண்ணுக்கு நிறைவா இருக்குலே. . பொண்ணும் நல்ல அமைதியா குணமா தெரியுதா. . உன் மனசுபோல நல்ல வாழ்க்கை அமையும் சந்தோஷமா இரு. . ”

இதுதான் எழில் முரடன் கள்ளுளிமங்கன் என எப்படி இருந்தாலும் மனதளவில் நல்லவன். பொறாமையோ வன்மமோ பாராட்டத் தெரியாதவன். தமிழுக்குமே அவனது இந்த பேச்சு மனதிற்கு இதமாய் இருந்தது. அவனுக்கு முன் திருமணம் செய்கிறோமே என்ற சிறு குற்றவுணர்ச்சி அவனுக்கு இருந்து கொண்டேதான் இருந்தது. இப்போது அதையும் அவன் பேச்சால் துடைத்தெடுத்துவிட்டான்.

மறுநாள் காலை முத்து வீட்டிற்கு வந்திருக்க பூம்பாவை அவனை சாப்பிட வருமாறு அழைத்து அமர வைத்தார். அதியனும் அப்போது தான் உணவருந்திக் கொண்டிருந்தார்.

“வாலே என்ன நேத்து நிச்சயத்துல ஆளக் காணோம்?”

“இல்ல சித்தப்பூ சின்னதா ஒரு வேலை அதுவுமில்லாம பிள்ளைக்கு உடம்பு சரியில்ல அதான். . ”

“ம்ம் கல்யாணத்துக்கும் இப்படி சாக்கு போக்கு சொல்லிட்டு அலையாத சொல்லிட்டேன். . ”

“என்ன சித்தப்பு கல்யாணத்துக்கு மூணு நாளும் குடும்பத்தோட டேரா போட்ராலாம்னு இருக்கேன். . நீங்க வேற. . ”

“அதானே. . அது சரி அந்த பிள்ளையை கண்டுபிடிச்சுட்டேம்ல. . சந்தேகம் தான் இன்னும் உறுதியாகல. . ”

“எந்த பிள்ளையை சொல்லுதீக?”,என்றவாறு தண்ணீரை எடுத்து அருந்த ஆரம்பித்தான்.

“அதான் அந்த பொழிலரசியதேன் சொல்லுதேன்”,என்ற நொடி முத்துவிற்கு அப்படியே புரையேற ஆரம்பித்திருந்தது.

“சந்தேகம் இப்போ உறுதி ஆய்டுச்சுல. . பாத்து பாத்து தலையில தட்டு. . ”

“சித்தப்பூ அது கல்யாணம் ஆன புள்ள. . என்ன பேசுதீக. . ”

“ஏலேய் இப்போ கல்யாணம் ஆயிருந்தாலும் 16 வயசுல உன் சிநேகிதன் மனசுல ஜம்னு உக்காந்தவளுக்கு கல்யாணம் ஆகலயே. . அதுக்கு யாரையும் தப்பு சொல்ல முடியாது. . ”

“நீங்களா எதையாவது ஒளறாதீக சித்தப்பூ. . சும்மா இருக்குறவன ஏத்தி விடாதீக. . ”

“ம்ம் நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்லுற நிலைமை நேரம்தேன். . நா ஒண்ணும் அவன்ட்ட இதைபத்தி கேக்க போறதில்ல டே. . ஆனா ஒருவிதத்துல என் புள்ள முகத்தை பார்க்க கஷ்டமா இருந்துச்சு. .

அதனால உன்ட்ட சொன்னேன். . நீயும் எதையும் அவன்ட்ட காட்டிக்காத. . நல்லவுகளுக்குத்தேன் சோதனை நிறைய வருது என்ன பண்ண. . அவன் விதி. . ”,என்றவாறு அவர் எழுந்து சென்று விட முத்துவுக்குமே அவன் நிலை நினைத்து கவலை எழுந்தது.

அதன் பின்னும் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் இல்லாமலே போக எழில் ஓரளவு நிம்மதியாய் உணர்ந்தான். அவனது மனம் அவள் வேறொருவனின் மனைவி என்பதை உணார்த்திக் கொண்டே இருந்தது. அந்த காரணமே அவனை அவள் பற்றிய சிந்தனையை வளர விடாமல் தடுத்து நிறுத்தியது.

இப்பாடியான சூழ்நிலையில் இருபத்தைந்து நாட்கள் கடந்திருக்க இன்னும் நான்கு தினங்களில் திருமணம் என்ற நிலையில் வீடே திருவிழா போன்று காட்சியளித்தது. சொந்தபந்தங்கள் வீட்டை நிரப்ப ஆரம்பித்திருக்க யாருக்கும் மூச்சு விடவும் நேரமின்றி பொழுது கழிந்தது.

பெண்வீட்டு திருமணம் என்பதால் இவர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பது துணிமணி எடுப்பது தவிர மற்ற வேலைகள் இல்லாமல் போனது. அதையுமே எழிலே பார்த்துக் கொண்டான்.

பத்திரிக்கை அச்சடித்து வாங்குவது யார் யாருக்கு அனுப்ப வேண்டும் யாருக்கு நேரில் கொடுக்க வேண்டும் எனப் பிரித்து வருபவர்களுக்கு தங்குமிடம் உணவு போன்ற ஏற்பாடுகளை கவனித்து என பெரியவர்களை முடிந்தளவு சுமை தாங்க விடாமல் பார்த்துக் கொண்டான்.

திருமணத்திற்கு முந்தைய நாளே பொழில் வீட்டிற்கு வந்துவிட்டாள். அங்கயர்கண்ணியின் தோழிகள் சொந்தகார பெண்கள் என ஒருபுறம் களைகட்ட,தமிழ் மற்றும் முகிலின் நண்பர்கள் மண்டபத்தை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர்.

மலர் பொழிலரசிக்கும் சேர்த்தே புடவை எடுத்திருந்தார். ”என்ன அத்தே எதுக்கு இதெல்லாம். . ”

“நல்லா இருக்கு உன் கேள்வி. . ஊருக்கே எடுத்துக் கொடுக்குறோம் நம்ம வீட்டு புள்ள உனக்கில்லாமயா…வாய் பேசாம வாங்கிக்கோ. . ”

முந்தைய நாள் மாலை நிச்சயதார்த்த சடங்கிற்கே மண்டபத்திற்கு வந்துவிட இருவருமே ஊரில் மதிப்புமிக்க குடும்பம் என்பதால் கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனால் எழில் மட்டும் கண்ணில் படவேயில்லை.

“ஏன் கண்ணி எங்க உன் பெரிய அண்ணணை காணவே காணும். . ரொம்ப தான் சீன் போடுறானே. . ”

“அண்ணணை நீ வானு தான் கூப்புடுவீங்களா??!!”

“ஐயோ நானும் இதை மாத்தனும்னு ரொம்ப முயற்சி பண்றேன். . மாத்திக்கவே முடில. . ஏனோ அப்போ இருந்து இப்படியே பழகிடுச்சு. . ”,எனும்போதே எழில் முத்துவோடு உள்ளே நுழைந்தான்.

“அதோ அண்ணணே வந்தாச்சே. .  “,நேராய் அவர்களிடம் வந்தவன் முத்துவை அறிமுகம் செய்து வைத்தான்.

“அண்ணா எப்படியிருக்கீங்க. . எங்க வைஃப் பசங்களையெல்லாம் வரலையா?”

“ம்ம் வந்துட்டே இருக்காங்க மா. . நாங்க ஒரு வேலையா போய்ட்டு அப்படியே வந்துட்டோம். . ”

“ஓ சரி சரி ஏன்டா அமுதா வீட்டுக்கு மூத்த புள்ளையா பொறுப்பா இங்க இருக்க கூடாதா. . ஏற்கனவே ரொம்ப கலரு இன்னும் இப்படி நல்லா அலைஞ்சுட்டு வா பொண்ணு கிடைச்சுரும் சீக்கிரம். . எப்படி வந்து நிக்குற பாரு. . போ போய் முதல்ல ரெடி ஆய்ட்டு வா. . ”

“ஏன் இதுக்கென்ன எல்லாம் நல்லாதேன் இருக்கு. . எனக்கா கல்யாணம். . ?!”.

“ம்ம் வக்கணையா வாய் மட்டும் பேசு தடிமாடா வளர்ந்தா பத்தாது கொஞ்சமாவது யோசிக்கணும். ஊருக்குள்ள பெரிய ஆளுனு சொல்லிக்குறாங்க. . இப்படியா இருப்ப பாரு இப்போவே உன்னை தான் எல்லாரும் பாக்குறாங்க போடா போய் அத்தை கொடுக்குற புதுத் துணியை போடு போ. . ”

“எதுக்குதேன் இப்படி எல்லாரும் உசுர வாங்குறீகளோ போய் தொலையுறேன். முத்து இங்க நீ சோலியை பாத்துக்கோ நா இப்போ வந்துரேன். . ”

என்றவன் செல்ல அங்கயர்கண்ணி வாய்பிளந்து அவர்களின் சம்பாஷனையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் பொழிலை பூம்பாவை அழைக்க அவள் சென்றவுடன் முத்துவிடம்,

“அண்ணே என்ன நம்ம சண்டியர்ட்டயே இந்த போடு போடுதாக?”

“ம்ம் அந்த சண்டியரே கொஞ்சம் அடங்கிப் போற ஆளு இவதேன். . அப்போ இருந்தே இப்படிதேன். . இரண்டும் எப்போ பாரு முறைச்சுட்டு நிக்கும்ங்க. . ”,என்றவாறு அவனும் சென்றுவிட அங்கயர்கண்ணிக்கு இவர்கள் இணைந்திருக்கலாமோ என்ற எண்ணமே மனதை ஆக்கிரமித்திருந்தது.

சற்று நேரத்தில் வெளியே வந்தவன் தூரமாய் நின்ற அரசியை பார்க்க அவளும் திருப்தியாய் ஒரு புன்னகையை அவனிடத்தில் பதித்துச் சென்றாள்.

மறுநாள் கல்யாணமும் இதைப் போன்றே ஆரவாரத்தோடு நல்லபடியாய் முடிந்தது. எப்போதும் போல் திருமணம் என்றாலே மணமக்களை விட இளம் வயதினருக்குத் தான் இன்னும் கொண்டாட்டம் என்பதற்கேற்ப இளவட்டங்களின் ஆர்பார்ட்டமே அதிகமாய் இருந்தது.

அதிலும் முந்தைய நாளிலிருந்தே அங்கயர்கண்ணி தன்னையே நோட்டமிடும் ஒரு வாலிபனை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். இருந்தும் எதுவும் பிரச்சனை செய்யவில்லை என்பதால் அமைதியாய் இருந்துவிட்டாள்.

இப்போது வேனில் இருந்து அவளை ஏதோ எடுத்து வரச் சொல்லி அவள் தந்தை அனுப்பியிருக்க வாசலுக்கு வந்தவளை தொடர்ந்து வந்தவன் அவள் பெயர் சொல்லி சத்தமாய் அழைத்தான்.

“ம்ம் யாரு நீங்க என் பேரு எப்படிதெரியும்?”

“ம்ம் வேணி அக்காவோட தம்பி பேரு ஆதித்யன். . ”

“ஓ நல்லது. . ”

“ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணுமே. . ”

“என்கிட்ட பேச என்ன இருக்கு. . இதெல்லாம் எனக்குபிடிக்காது வழியை விடுங்க. . ”

“ஆனா எனக்கு உன்னை பிடிச்சுருக்கே. . உன்னை காதலிக்குறேன்னு   நினைக்குறேன். . ”

“பாத்து முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள லவ்வா. . நல்ல காமெடி பண்றீங்க. . அவ்ளோ தானே நா வரேன். . ”

“நில்லு கண்ணி. . நிஜமாவே எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. . விளையாட்டெல்லாம் இல்ல. . இப்போவே உன் முடிவை சொல்லணும்னு இல்ல. . பொறுமையா யோசிச்சு சொல்லு. . ”

“இங்கேருங்க இதுல யோசிக்க ஒண்ணுமில்ல. . எங்க எழில் அண்ணனை பத்தி தெரியும்ல. . சும்மா குடைச்சல் குடுத்தீங்க போய் சொல்லிக் கொடுத்துருவேன் சொல்லிட்டேன். . வழியை விடுங்க. . ”

“உங்க அண்ணணுக்கு பயந்து போறேன்னு நினைச்சுறாத இந்த பொண்ணு பின்னாடி சுத்துறதெல்லாம் எனக்கு பிடிக்காத வேலை. . இப்பவும் நா உன்னை தான் விரும்புறேன் உன் படிப்பு முடியுற வரை காத்திருப்பேன். என்னைக்கா இருந்தாலும் நீ எனக்குதான். . வரேன். . ”என்றவன் விறுவிறுவென சென்றுவிட்டான்.

”சரியான லூசா இருப்பான் போல. . அவனா வந்தான் பேசினான் போய்ட்டான். . சரியான க்ராக்கா இருக்கும் போலயே. . நம்மளை விட்டா சரி. . ”,என்றெண்ணியவள் அவள்போக்கில் உள்ளே சென்றாள்.

சிறிது நேரத்தில் கூட்டம் ஓரளவு குறைந்திருக்க சாப்பிட்டு வெளியே வந்த எழிலிடம் மலரொளி பொழிலை பற்றி விசாரித்தார்.

“எய்யா எழிலு நம்ம பொழிலை பார்த்த?”

“இல்லையே சித்தி என்னாச்சு இங்கதேன் எங்கேயாவது இருப்பா. . ”

“நானும் முடிஞ்சவரை தேடினேன் எங்க போனானே தெரில. . சாப்பிடவும் இல்ல. . அக்காகிட்டேயும் சொல்லிட்டு போல. . ”

“ஓ. . இங்கதேன் இருப்பா நா பாக்குறேன் நீங்க போய் சாப்பிடுங்க சித்தி. . ”,என்று அவரை அனுப்பியவன் ஒரு இடம் விடாமல் தேட ஆரம்பித்தான்.

எங்கும் அவளை காணாமல் போக தற்செயலாய் மொட்டை மாடிக்குச் சென்று பார்க்க தலையை இறுக்கிப் பிடித்தவாறு ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

“அரசி ஏய் என்னாச்சு!!”,உச்சகட்ட பதட்டத்தில் அவளருகில் சென்றவன் செய்வதறியாமல் நின்றான்.

“டேய் ஏன்டா இப்படி கத்துற. . தலைவலி அடிக்கடி இப்படி வரும். . இந்த சத்தமெல்லாம் சேர்ந்து ரொம்ப வலிக்குது. . என்னை இங்கிருந்து யார் கண்லயும் படாம வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போய்றேன் ப்ளீஸ். . ”

“இப்போ எப்படி நீ இன்னும் சாப்பிட கூட இல்லையாமே. . கொஞ்சமா சாப்ட்டு பாரு தலைவலி கேக்கும். . ”

“இல்ல அமுதா இது அப்படியெல்லாம் கேக்காது ப்ளீஸ். . புரிஞ்சுக்கோயேன். . ”

“சரி இரு வரேன். . தன் வண்டியை எடுத்து பின்புறமய் நிறுத்திவிட்டு வந்து அவளை அழைத்துச் சென்றான். மண்டபத்தின் பின் வாசல் வழியே சென்று வண்டியை கிளப்பியவன் ஆற்றங்கரையில் சென்று வண்டியை நிறுத்தினான்.

ஒரு நொடி அந்த இடத்தை பார்த்தவள் ஒன்றும் பேசாமல் இறங்கிச் சென்று ஆற்று நீரில் காலை விட்டு அமர்ந்துவிட்டாள். தலை குனிந்தவாறு கழுத்தில் இரு கைகளையும் வைத்து அழுத்தியவாறு அமர்ந்திருந்தாள்.

காற்றோட்டமாய் இருக்குமே என அவன் வண்டியை நிறுத்த அவள் செய்ததெல்லாம் பார்த்து குழம்பிப் போனான்.

சரியாய் பதினைந்து நிமிடம் கழித்து அங்கிருந்து எழுந்தவள் அவனருகில் வரும்போது மிகச் சாதாரணமாய் இருந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் அமுதா. . நீ தெரிஞ்சு பண்ணியோ தெரியாம பண்ணியோ ஆனா இப்படி தலை வலிக்குற நேரத்துல தண்ணியில காலைவிட்டு உக்காந்தா கொஞ்சம் தேவலனு இருக்கும். . ”

“நீ சொல்றத பார்த்தா இது ரொம்ப நாளா இருக்குற பிரச்சனை போல?டாக்டர்கிட்ட காட்டலையா?”

“ம்ம் அப்பா இறந்த அப்பறமே இந்த பிரச்சனை இருக்கு. . ரொம்ப உணர்ச்சிவசப்பட்டா இந்த மாதிரி ஆய்டும். எல்லா டெஸ்டும் எடூத்து பார்த்தாச்சு ஒரு பிரச்சனையும் இல்லனு சொல்றாங்க. . ”

“ம்ம் நேத்துல இருந்து எதையாவது நினைச்சு உன்னை நீயே கஷ்டபடுத்திக்குறியா?”

“ச்சசச்ச அதெல்லாம் இல்லையே ரொம்ப நாளுக்கு அப்பறம் இவ்ளோ சத்தம் இத்தனை பேரோட பேச்சு சிரிப்புனு ஓவர் சந்தோஷமா இருந்தேன்ல அதனால கூட அதிக சந்தோஷமானாலும் இப்படி இருக்கும்னு இன்னைக்கு தான் புரியுது. . ”

“நா ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?”

“என்னடா ஏதோ வெளி ஆள்கிட்ட பேசுற மாதிரி கேக்குற. . என்ன கேளு?”

“இல்ல உன் கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கு. . எதையோ நீ எங்ககிட்ட மறைக்குறியா?”

“அட அதெல்லாம் ஒண்ணுமில்ல எதுக்கு இவ்ளோ யோசிக்குற. . நா தான் சொன்னனே அவரு கப்பல்ல வேலை பாக்குறாருனு. . ”

“அதை தாண்டி எதுவுமே சொல்ல மாட்டுறியே அதான் சந்தேகமே. . சரி அவரு போட்டோ காட்டு பாப்போம். . ”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு. . . நா போட்டோ எல்லாம் கையில வச்சுக்க மாட்டேன். . ”,முதல்முறையாய் குரலில் சிறு தடுமாற்றம் அவளிடம்.

“அரசி ஒரு பொய்யை மறைக்க பொய் மேல பொய் சொல்லாத. . எல்லாத்தையும் உன் மனசுக்குள்ளயே வச்சு ஏன் தவிக்குற. . மனசுவிட்டு பேசு. . ”

ஆற்றை நோக்கி திரும்பியவள் இலக்கின்றி எங்கோ வெறிக்க அவளிடம் விஷயத்தை தெரிந்தே ஆக வேண்டும் என்பவனாய் அமைதி காத்து நின்றிருந்தான்.

“முடில அமுதா. . எல்லாத்தையும் மறக்கணும்னு தான் முயற்சி பண்றேன் எதுவுமே முடில. . ரொம்ப பலகீனமா ஆய்ட்டேன். . யாருக்கும் எந்த கெடுதலும் நினைச்சதில்ல டா நா ஆனா ஏன் இத்தனை சோதனைனு புரியவேயில்ல.

மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கேன்னு வந்து சொன்னாரு. எனக்கு பெருசா எந்த விருப்பு வெறுப்பும் இல்லாததால உங்க விருப்பப்படி பண்ணுங்கப்பானு சொல்லிட்டேன்.

வேலையெல்லாம் ரொம்ப வேகமா நடந்தது. மாப்பிள்ளை கப்பல்ல வேலை பாக்குறதுனால கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கணும்னு சொன்னாங்க அப்பாவும் சரினு ஒத்துகிட்டாரு. இருபதே நாள்ல கல்யாணம். அவரை முதன் முதல்ல பார்த்ததே எங்க கல்யாணத்தன்னைக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல தான்.

கண் இமைக்குற நேரத்துல எல்லாம் நடந்து முடிஞ்சுது. கல்யாணத்தன்னைக்கு நைட் தான் முதல் இடியை என் தலையில இறக்கினாரு என் கழுத்துல தாலி கட்டினவர்.

அவருக்கும் ஒரு பொண்ணுக்கும் காதல் இருந்ததாகவும் அவ வேற ஜாதினால அவங்க வீட்ல ஒத்துக்காததாகாவும் இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணதாகவும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாம சாதாரணமா சொன்னார்.

அந்த விஷயத்தை உள் வாங்கவே கொஞ்ச நேரம் எடுத்தது எனக்கு. அதுக்கப்பறமும் மனசை தேத்திகிட்டு சரி நடந்தது நடந்துருச்சு எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம வாழ்க்கையை பார்ப்போம்னு சொன்னேன்.

எத்தனை கேவலமா பேச முடியுமோ அத்தனை மோசமா பேசினார். என்ன சொன்னாலும் சட்டப்படி அவ தான் என் முதல் மனைவி நீ முறைதவறி வந்தவ தான் அது இதுனு. . எனும் போதே துக்கம் தொண்டையை அடைக்க தன்னை நிதானப்படுத்தியவளாய் தொடர்ந்தாள்.

அதுக்கு மேல என் கையில எதுவும் இல்லனு முடிவு பண்ணி இரண்டு வீட்டு பெரியவங்க கிட்டேயும் விஷயத்தை சொன்னேன். எங்கப்பா அப்போவே பாதி செத்துட்டார். பெரிய பிரச்சனை ஆச்சு ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு பேசினாங்க. .

கடைசில அவரோட அம்மா செத்துப் போயிருவேன்னு மிரட்டி சத்தியம் வாங்கி அவரை என்கூட வாழ சம்மதிக்க வச்சாங்க. . இதைவிட கேவலம் எதாவது வேணுமா சொல்லு அமுதா. .

அப்படி கட்டாயப்படுத்தி வாழ்ந்துட தான் முடியுமா. . என்னால முடியாதுனு சொல்லிட்டு அப்பாவோட வந்துட்டேன். அடுத்த ஒரே வாரத்துல அவங்க வீட்டுல இருந்து போன் வந்தது. என் புருஷன் இறந்துட்டதா. . அதுவும் அவரு காதலிச்ச பெண்ணோட தற்கொலை செஞ்சுகிட்டதா சொன்னாங்க. .

இதை எப்படி எடுத்துக்கனும்னு கூட அப்போ எனக்கு தெரில அமுதா. . விதினு நினைச்சு விடவும் முடில. . அக்கம்பக்கத்துல இருக்குறவங்க பேச்சு அதுக்கு மேல. . என்ன பிரச்சனைனே தெரியாம மொத்தத்துக்கும் நா தான் காரணம்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. . என் புருஷன் வீட்லயும் எல்லாரும் அவங்க பேரை காப்பாதிக்க நா பிரிஞ்சு வந்த சோகத்துல தான் அவங்க புள்ள செத்துட்டதா எல்லார்கிட்டையும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. .

எத்தனையோ ஏச்சு பேச்சுக்களையெல்லாம் தாங்கிட்டு வாழ பழகியிருந்தேன்னு தான் சொல்லனும். அப்பாவுக்கு இருக்குற ஒரே ஆறுதல் நா தான்னு முடிவு பண்ணி எல்லா வருத்தத்தையும் எனக்குள்ளேயே போட்டு புதைச்சேன்.

ஆனா என்ன இருந்தாலும் பெத்த பொண்ணு வாழ்க்கையை இப்படி கேள்விக்குறி ஆக்கிட்டோமேனு வருத்தம் இருக்காதா அவருக்கும் குடிச்சு குடிச்சே போய் சேர்ந்துட்டாரு. .

அப்பானு ஒருத்தர் இருந்தப்போ சாதாரணமா எடுக்க முடிஞ்ச மத்தவங்க பேச்சை தனியா நிக்கும் போது கேட்க முடில அமுதா. . அப்போ தான் இந்த தலைவலி பிரச்சனை ஆரம்பமாச்சு. . என்னைக்காவது என்னை நினைச்சு நானே அழுது கரையுவேன் அப்போயெல்லாம் இப்படிதான் வலி உயிர் போகும். .

முதல் தடவையா சந்தோஷமா இருந்து இன்னைக்கு தான் வந்துருக்கு. அங்க எல்லார் பேச்சுல இருந்தும் தப்பிக்கணும்னு முடிவு பண்ணி யோசிச்சப்போ தான் இந்த வீட்டை பத்தி தெரிய வந்தது. மறு யோசனையில்லாம கிளம்பி வந்துட்டேன்.

உண்மையை சொல்லணும்னா உங்களையெல்லாம் கூட பாக்க கூடாதுனு தான் நினைச்சேன். ஆனா முடில வாழ்க்கைல எந்த இரத்த பந்தமும் இல்லாம மனசார பாசம் வச்ச குடும்பம் நீங்க மட்டும் தான்.

அன்னைக்கு உனக்கு உடம்பு சரியில்லனு வீட்டுக்கு வந்துட்டு போனேனே அன்னைக்குதான் ரொம்ப நாளுக்கு அப்பறம் நிம்மதியா தூங்கினேன்.

இதெல்லாம் யார்ட்டையுமே சொல்ல பிடிக்கல அதனால தான் யார் கேட்டாலும் புருஷன் கப்பல்ல வேலை பாக்குறாருனு சொல்லிருவேன். ஆனா நீ எப்படி டா கண்டுபிடிச்ச. . !!”

அத்தனை நேரமும் மனதில் இரத்தம் சொட்ட அவள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் சுயவுணர்வு பெற்றவனாய்,

“ஆங்ங் என்னைவிட உன்னை யாரு சரியா கவனிச்சுற போறா. . அதான் கேட்டேன். . ”

“ம்ம் என்ன தான் சொல்லு எந்த வேஷமும் இல்லாத பள்ளிக்கூட நட்பு எப்போதுமே வரம் தான். . இத்தனை வருஷத்துல நீ கொஞ்சமும் என்னை மறக்காம இருக்கனு நினைச்சா அத்தனை சந்தோஷமா இருக்கு எனக்கு. . இனி நா அநாதையில்ல. . எனக்குனு ஒரு நண்பணும் குடும்பமும் இருக்கு. . இந்த சந்தோஷமே போதும் வாழ்க்கை மொத்தத்துக்கும். . ஐயோ நா பேசினா பேசிட்டே இருப்பேன். உன்னை தேடப் போறாங்க நீ கிளம்பு முதல்ல. . ”

“ம்ம் இப்போ தலைவலி போச்சுல நீயும் வா வந்து சாப்ட்டுட்டு கிளம்பு நானே கொண்டு போய் விடுறேன். எல்லாரும் உன்னை தேடுவாக. . ”

“ம்ம் சரி நீ சொல்றதும் சரிதான். நா அத்தைகிட்ட சொல்லிட்டே கிளம்புறேன். என்றவள் அவனோடு மீண்டும் மண்டபத்திற்கேச் சென்றாள்.

முதன்முறையாய் எந்த குற்றவுணர்வும் இன்றி அவளை தன்னோடு பைக்கில் ஏற்றிச் சென்றான். இருந்தும் மனதில் மிகப் பெரிய பாரத்தை ஏற்றியதை போன்ற ஓர் உணர்வு.

அவளை மண்டபத்தில் விட்டு விட்டு பேருக்கு சற்று நேரம் அங்கு சுற்றிக் கொண்டிருந்தவன் அதற்குமேல் முடியாமல் குடோன் சாவியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

சாவியை கொடுக்கும் போதே முத்து அவன் முகத்தை கவனித்துதான் இருந்தான். எதோ சரியில்லை என்று தெரிந்தாலும் அவன் கிளம்பிய நேரம் தானும் கிளம்பினால் சரியாய் வராது என்றெண்ணி அமைதி காத்தான்.

மதிய உணவிற்குப்பின் அவசரமாய் குடோனுக்குச் சென்றவன் அவனைத் தேட அங்கிருந்த கயித்துக் கட்டிலில் விழி மூடி படுத்திருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததற்கான அறிகுறி.

“ஏலேய் மாப்ள. . என்னாச்சு ஏம்லே இப்படி இருக்க!!?”

ஒன்றும் கூறாமல் மெதுவாய் எழுந்தமர்ந்தவன் கண்கள் ரத்தமென சிவந்திருந்தது.

“ஏலேய் என்னல சொல்லித் தொலையேன். . ”

“என் அரசி என்கிட்ட வந்துட்டா மாமா. . ”

“டேய் என்ன பேசுதனு தெரிஞ்சுதேன் பேசுறியா?”

“மாமா நம்ம மனசுக்குள்ள ராணியா நினைக்குற பிள்ள நமக்கு கிடைக்காம போறது கொடுமை. . அதுக்கப்பறம் அவளை நாம திரும்ப பார்க்கும்போது அந்த பிள்ளை வாழ்க்கை சரியாயில்லாம போச்சுனு தெரியுற ரணம் கொடுமையிலும் கொடுமை. .

இப்போ அந்த கொடுமையை நா அனுப்பவிக்குறேன்லே. . அவ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கத்தியால கூறுபோட்டுருச்சுல. . என் அரசிக்கு இத்தனை கஷ்டத்த கொடுத்துட்டனேனு இருக்கு. . அப்போவே என் காதலை சொல்லி அவளை பத்திரமா என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துருக்கணுமோனு என்னை நினைச்சு எனக்கே கோவம் வருதுலே. . ”

“மாப்ள ஏன் என்னென்னவோ பேசுற என்ன விஷயம்னு தெளிவா சொல்லு. . அந்த புள்ள உன்கிட்ட என்ன சொல்லிச்சு. . அவ புருஷன்கூட எதுவும் சண்டையா அதான் இங்க வந்துருக்காளா. . ?”

அவள் கூறிய அனைத்தையும் முத்துவிடம் கூறிமுடிக்க அவனோ அனைத்தையும் கேட்டு தலையில் கைவைத்து விட்டான். ”இப்போ நீ என்ன மாப்ள முடிவு பண்ணிருக்க. . ”

“இதென்னல கேள்வி என் அரசியை என் பொண்டாட்டியா ஊரறிய கல்யாணம் பண்ணி அரசியாவே வாழ வைப்பேன்ல. . ”

“எழிலு சொல்றேன்னு தப்பா நினைக்காத இது ஒத்துவரும்னு நினைக்குறியா. . ”

“ஏம்லே இப்படி கூறுகெட்ட தனமா பேசுத??”

“நீ பொறுமையா யோசிச்சு பாரு. . என்னதான் ஆனாலும் அவ புருஷனை இழந்தவ டே. . உன் குடும்பத்துக்கு இருக்குற மரியாதைக்கு வீட்டோட மூத்த மருமவளா அவளை எப்படி ஏத்துக்குவாங்க. . ”

“ஏலேய் நீயா இருக்கப் போய் இப்படி பேசிட்டு இன்னும் உயிரோட இருக்க. . என்ன நினைச்சு இப்படி பேசிட்ட. . அவ என் அரசில. . இந்த ஜென்மம் முழுசுக்கும். . விதியே எங்கள சேர்த்து வைக்கத்தேன் அவள இங்க கூட்டிட்டு வந்துருக்கு. . இதை யாரு எதிர்த்தாலும் அவங்க எனக்கு வேணாம்லே. . ”

“அடிச்சு பல்ல கழட்டிருவேன் எழிலு. . எதோ இளவட்ட பையன் மாதிரி பேசிட்டு கிடக்க. . இங்கேரு நா சொல்றதுதான் எதார்த்தம். அதுமட்டுமில்லாம முதல்ல அந்த புள்ளைக்கு உன் மேல விருப்பம் வருமா. . அவளுக்கு உன் மேல காதல் இருந்ததும் இல்ல. . உன் காதலையும் அவ தெரிஞ்சுகிட்டது இல்ல. அப்படியிருக்க நீ போய் கேட்டவுடனே அந்த பிள்ள சம்மதம் சொல்லிருமா?”

சற்றே அமைதியானவன் முத்து சொல்வதில் இருந்த நியாயத்தை உணர ஆரம்பித்தான். ஆக இப்போது முதல் வேலை அவளின் விருப்பத்தையும் சம்மதத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான்.