தலைவி கூற்று – ( குறுந்தொகை-11)

கோடீ ரிலங்கு வளை ஞெகிழ நாடொறும்

பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி

ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே

எழுவினி வாழியென் னெஞ்சே முனாது

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்த ராயினும்

வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே.

மாமூலனார்.

செய்தி

தலைமகன் பிரிந்திருந்தபோது தலைமகள் தன் நெஞ்சிலுள்ளதைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள். கட்டி என்பவன் சிறந்த வேல்வீரன்.  அவன் குல்லைப்பூ மாலையணிந்த வடுகரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறான்.  அது அவருக்கு மொழி தெரியாத தேசம்.  அங்கு அவர் சென்றுள்ளார்.  (போர் முடியவேண்டும் என்று நீ அந்த நாட்டை வழிபடு)

எழிலமுதன் அங்கிருந்து சென்ற பல மணி நிமிடங்கள் கடந்தும் அரசி அப்படியே அமர்ந்திருந்தாள். அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு அத்தனை வேதனை கொடுத்தது. அதுவும் அவனின் கடைசி வரிகள் . . அத்தனை திடமானவனை கண்கலங்க பார்த்தபோது ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள்.

அவன் கூறுவது சரிதானே எந்த தவறும் செய்யாமல் தண்டனை மட்டும் அவனுக்கு. . தன்னை காதலித்ததை தவிர அவன் செய்த பாவம் ஒன்றுமில்லையே. . என்ன செய்வது என ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தாள்.

அவன் கூறுவதற்காக இந்த நொடியே காதல் பட்டாம்பூச்சி பறக்க அவனோடு வாழத் தொடங்கவும் நிச்சயம் முடியாது. தன் நிலையை நினைத்து அழவா இல்லை நல்ல நண்பனின் நிலை நினைத்து அழவா என குழம்பித் தவித்தாள்.

அந்நேரம் அவள் அலைப்பேசி ஒலிக்க வெற்றிச் செல்வி தான் அழைத்திருந்தார்.

“பொழிலு”

“சொல்லுங்கத்தே அங்க ஒண்ணும் பிரச்சனையில்லயே. . ”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. . நீ எப்படித்தா இருக்க வலி குறைஞ்சுருக்கா?”

“ம்ம் இப்போ பரவால்ல அத்தே. . ”

“அத்தே மேல கோவமாட்டீ?”

“ஐயோ ஏன் இப்படியெல்லாம் கேக்குறீங்க. . அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே. . ”

“நேத்து நீ வீட்டை விட்டு போனப்போ எதோ குழப்பத்துல இருந்துட்டேன். . அத்தையே தப்பா நினைச்சுராதட்டீ. . தாய்க்கு தாயாக ஆயுசுக்கும் நா பாத்துக்குறேன் உன்னைய. . என் வீட்டு மருமவளா என் மவளா வந்துருட்டீ. . எழிலு உன் மேல உசுரையே வச்சுருக்கான். . உனக்கு நடந்ததெல்லாம் கெட்ட கனவா நினைச்சு தூக்கிப் போட்டுரு. .

ஹலோ ஹலோ பொழிலு லைன்ல இருக்கியா??ஹலோ. . ”

“அத்தே என்னால முடில ரொம்ப கஷ்டமா இருக்கு. . யாருகிட்ட சொல்லணும்னு தெரில என்ன பண்ணணும்னும் புரிலத்தே. . எல்லாரும் நல்லவங்களா இருக்கீங்க. . நா யாருக்காக யோசிக்க. . ஆச்சியை எதிர்த்து இப்படி ஒரு விஷயம் கண்டிப்பா நடக்க வேண்டாம். .

ஆனா அமுதன் ஏன் இத்தனை பிடிவாதமா இருக்கான்னு புரில அத்தே. . பச்சை புள்ள மாதிரி அடம்பிடிக்குறான். ”

“இல்ல பொழிலு சாதாரணமா பார்த்தா அப்படி தெரியுது ஆனா அவன் உன்னை நினைச்சு வாழ்ந்த இத்தனை வருச வேதனை ரொம்ப பெருசு. . எங்கயிருக்கனு கூட தெரியாம உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கும்னு தெரிஞ்சும் உன்னை மறக்க முடியாதவன் இப்போ நீ அவனுக்கு கிடைப்பனு தெரிஞ்சப்பறம் எப்படி சாதாரணமா இருப்பான் சொல்லு. .

அதுக்காக உன்னை கட்டாயப்படுத்துல. . கொஞ்சம் பொறுமையா யோசி உனக்காக அத்தைங்க நாங்க மூணு பேரும் இருக்கோம். . எல்லாத்துக்கும் மேல எழிலு இருக்கான். . யோசி கண்ணு. . ”

போனை வைத்தவள் மொத்தமாய் குழம்பியிருந்தாள். அவளுக்காக அவளைப் பற்றி இத்தனை பேர் யோசிப்பது ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் இது எந்தளவு நடைமுறைக்கு சாத்தியபடும் என்ற உறுத்தல் இருந்து கொண்டேதான் இருந்தது.

அத்தனை வார்த்தைகளும் கொடுத்த குழப்பத்தை விட அமுதனின் இருதுளி கண்ணீர் அவளை வதைத்ததே நிஜம். மாலை வரையுமே ஏதேதோ யோசித்தவள் பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழிலை போனில் அழைத்தாள்.

காலையில் அவள் வீட்டிலிருந்து கிளம்பியவன் முத்துவைத் தேடித்தான் சென்றிருந்தான்.

“மாப்ள என்னலே இரண்டு நாள்ல என்னென்னவோ நடந்து போச்சாம்ல. . ”

“மாமா சத்தியமா முடில டே. . எல்லாவனுக்கும் காதலிச்சு ஊரைசுத்தி ஜாலியா இருந்துட்டு அப்பறம் வீட்டுக்குத் தெரிஞ்சு பிரச்சனை வரும். ஆனா எனக்கு காதலி ஆரம்பிச்சு பல்லு போன கிழவி வர ஆரம்பத்துலயே இத்தனை பிரச்சனை. . என் தலை எழுத்தெல்லாம் அந்த ஆண்டவன் நொட்டாங்கையால கிறுக்கித் தள்ளிருக்கான் போல. . ”

“ஏன் மாப்ள இப்படியெல்லாம் பேசுத. . எந்த பிரச்சனையுமே முத்த விட்டாதேன் தெளிவும் முடிவும் கிடைக்கும்லே. . ”

“என்னத்த. . எனக்கு மனசே விட்டுப் போச்சுல குறைஞ்சபட்சம் அரசியாவது என்பக்கம் நின்னா பரவால்ல. . யாரா இருந்தாலும் ஒரு கை பாக்குறேன்னு நிக்கலாம். . அந்த கூறுகெட்டவளுக்கே என் பாசம் புரியாதப்போ யாரைலே தப்பு சொல்ல முடியும். . விதிப்படி என்ன நடக்கனுமோ நடக்கட்டும்னு விட்டுற போறேன். . ”

அத்தனை தளர்ந்தவனாய் எழிலமுதனை முத்து பார்த்ததேயில்லை. இவனது நல்ல மனதிற்காகவாவது நல்லது சீக்கிரம் நடக்க வேண்டுமென மனதார வேண்டினான். எழில் எங்கும் போகப் பிடிக்கவில்லை எனக் கூறி குடோனிலேயே இருந்துவிட்டான்.

முத்து வேலையாய் வெளியே சென்றிருக்க அப்போது தான் பொழில் அவனை அழைத்திருந்தாள்.

“ம்ம் சொல்லு. . வலி எதுவும் இல்லையே?”

“நிஜமாவே என்ன மனுஷன்டா நீ என்னை பத்தியே தான் யோசிப்பியா?”

“இதுக்காகதேன் இப்போ போன் பண்ணியா??”

“அமுதா கொஞ்சம் பேசணும் வீட்டுக்கு வரியா?”

“என்ன அதிசயமா இருக்கு வந்தாலே விரட்டி விடுவ இப்போ நீயே கூப்புடுத. . ”

“சரி வர இஷ்டாமில்லனா விடு வர வேணாம் வை போனை. . ”,என்றவள் கட் செய்துவிட்டாள்.

“குள்ளச்சிக்கு இருக்க கொழுப்பு குறையவே குறையாது சரியான திமிரு பிடிச்சவ. . ”,என்று வாய்விட்டே புலம்பியவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

எப்படியும் அவன் வருவான் என எண்ணியவள் கதவை திறந்தே வைத்திருந்தாள். உள்ளே சென்றவன் அவளைத் தேட கையில் காபியோடு சமையலறையிலிருந்து வந்தவள் ஒரு டம்ளரை அவனிடம் நீட்ட அவளை முறைத்தவாறே அதை வாங்கிக் கொண்டு சென்று சேரில் அமர்ந்தான்.

இன்னொரு சேரை எடுத்து அவனுக்கு எதிரில் அமர்ந்தவள் அவனையே பார்த்திருந்தாள்.

“என்ன வேணும் உனக்கு நானே பேசாம போய்ட்டேன். . இப்போ எதுக்கு கூப்ட்டு வச்சு உயிரை வாங்குற?”

“எல்லாத்தையும் பேசிட்டுதான டா போன பெரிய இவனாட்டம். . இப்போ இப்படி என் உயிரை வாங்குவனு தெரிஞ்சுருந்தா அப்போ உன்னை காப்பாத்தாமயே விட்டுருப்பேன். . ”

“ம்ம் நானும் பல நாள் அதை நினைச்சு உன்னை ஆசைதீர திட்டித் தீர்த்துருக்கேன். . அப்படியே விட்டுருந்தா நிம்மதியாவாவது போயிருப்பேன்னு. . ”

“அமுதா!!”

“சரி சரி ஆரம்பிக்காத. . உண்மையைதான சொல்லுதேன். . சரி நீ எதுக்கு கூப்ட அதைச் சொல்லு நா கிளம்பணும். . ”

“ஒரு அஞ்சு நிமிஷம் உன் மடில படுத்துக்கட்டுமா?”

“அரசி!!!”

“நா சொல்ல நினைக்குற எல்லாத்தையுமே சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு அஞ்சே நிமிஷம் என் ப்ரெண்டா என் தடிமாடா உன் மடியில என்னை சாய்ச்சுப்பியா?”

ஒன்றும் பேசாமல் எழுந்து நாற்காலியை தள்ளி வைத்துவிட்டு கீழே அமர்ந்தவனின் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள். அவள் கூறியது போலவே ஐந்தே நிமிடம் அமைதி மட்டுமே அங்கு ஆட்சி நடத்த நண்பனாய் தாயாய் தன் அரசியை தாங்கிக் கொண்டான்.

பின் அவளாகவே எழுந்து அவனெதிரில் அமர்ந்தாள். அவளே பேசட்டும் என எழில் அமைதியாகவே இருந்தான்.

“தேங்க்ஸ் அமுதா என் நண்பனா என் வாழ்க்கைல வந்ததுக்கு. . சத்தியமா இப்படி ஒரு உறவு வரம்டா. . அம்மாவை இழந்து நின்னப்போ உங்க குடும்பம் என்னை அரவணைச்சது இன்னமும் மனசுல இருந்து மறையல. . எப்பவுமே உங்க எல்லாரையும் நினைச்சுப்பேன். அப்பாகிட்டேயும் சொல்லிட்டே இருப்பேன்.

சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டு வந்தது அப்பாவுக்குமே வருத்தம் தான் இருந்தாலும் பண்ண தப்பை அவரு சரி செய்ய விரும்பல அதனாலேயே உங்களை தொடர்பு கொள்ளாமயே விட்டுட்டாரு. .

ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் அதே அன்பை எல்லாரும் காட்டினப்போ எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா. . சொல்லப் போனா இங்க வந்ததுக்கு அப்பறம்தான் ஒழுங்கா தூங்குறேனே. .

இப்படி கொஞ்சம் நிம்மதியா இருந்தப்போ தான் முத்து அண்ணா உன் காதலைப் பத்தி என்ட்ட சொன்னாரு. . சத்தியமா எப்படி ரியாக்ட் பண்ணணும்னு கூட எனக்கு தெரில. . 17-18 வருஷமா ஒருத்தியை நினைச்சுகிட்டு. . முதல்ல இது முட்டாள் தனம்னு தான் தோணிச்சு. . நா எங்க இருக்கேன் எப்படியிருக்கேன்னு எதுவுமே தெரியாம எந்த நம்பிக்கையில நீ இப்படி வேஸ்ட் பண்ணிருக்கனு தோணிச்சு. .

ஆனா அடுத்தடுத்து நடந்த எல்லாமே என்னை ரொம்ப குழப்பிருச்சு. . முதல் தடவையா உன் காதலை நா புரிஞ்சுக்கலயோனு தோணிச்சு. .

நீ சொன்ன ஒரு வார்த்தை நீதான் பெரிய எழுத்தாளர் வெங்காயமாச்சே. . அது தான் என்னை இன்னும் தாக்கின ஒரு விஷயம் என் கதைகள்ல நானே விதவை திருமணம் பத்தி எழுதிருக்கேன். . பெண்களுக்கு தைரியம் வேணும் அது இதுனு எவ்வளவோ எழுதிருக்கேன்

ஆனா என் வாழ்க்கைனு வரும்போது அதை அத்தனை பரந்த மனப்பான்மையோடு எடுத்துக்க முடியாம போச்சே. . கதைகள்ல அடுத்தவங்களுக்கு நா சொல்ற கருத்தை என் வாழ்க்கையிலேயே என்னால செயல்படுத்த முடியலையேனு ரொம்ப குற்றவுணர்ச்சியா உணர்ந்தேன்.

அடுத்ததா இன்னைக்கு காலையிலே நீ சொன்னியே மனுச உயிர் இருக்குற வர அருமை தெரியாதுனு அது ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு டா. . உயிரோட மதிப்பு ரொம்பவே தெரிஞ்சவ நா. . யாருமில்லாத அநாதையா நின்னப்போவே அந்த அருமை அதிகமா புரிஞ்சுருச்சு. இன்னொரு தடவை அப்பபடி பேசாத அமுதா. .

எல்லாத்துக்கும் மேல செல்வி அத்தே பேசினாங்க. . இத்தனை பேர் மனசை கஷ்டபடுத்திட்டு நா தனியா இருந்து என்னத்த சாதிச்சுறப் போறேன்னு தோணிச்சு. . இப்பவும் உ. ன் மேல காதல் வந்துடுச்சானு எல்லாம் எனக்கு தெரில. .

காலையில அழும்போது இறுக்கி அரவணைச்சு நீ கொடுத்த அந்த கதகதப்பு நூறு சொந்தங்கள் கொடுத்த தெம்பு நிச்சயமா. . உனக்கு கண்டிப்பா நல்ல மனைவியா நா இருப்பேன். ஆனா 18 வருசமா நீ தொலைச்சுட்டு தேடின அந்த காதலி எப்போ கிடைப்பானு எனக்கே தெரில டா. .

கல்யாணத்துக்கு நா சம்மதிக்குறேன் ஆனா எல்லாரோட சம்மதத்தோட அது நடந்தா மட்டும் தான். உன்னோட காதலை உணர்ந்த மாதிரி எனக்குள்ள உனக்கான காதல் எந்தநொடி வந்தாலும் நா சந்தோஷப்படுவேன்.

அதுவரை உன் மனைவியா உன் குள்ளசியா என்னை ஏத்துப்பியா?”

குனிந்த தலை நிமிராமல் பேசி முடித்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க கண்களில் கண்ணீர் பளபளக்க அவளை தன்னோடு சேர்த்தணைத்திருந்தான். அவனின் விசும்பலில் பதறியவளாய் அவன் முதுகு தடவி தேற்ற முனைய கொஞ்சமும் மட்டுபடாமல் இருந்தது அழுகையும் அவனது பிடியும்.

“டேய் தடிமாடு விடு வயிறு வலிக்குதுடா. . ”,என விளையாட்டாய் கூறியவளுக்குமே கண்கள் கலங்கிதான் இருந்தது.

அவசரமாய் விலகியவன் கண்களால் மன்னிப்பு கேட்டு தன் முகத்தை சீர்செய்ய முயன்றான்.

“அரசி எனக்காக ஒண்ணும் நீ மனசை மாத்திக்கலையே?”

“அப்படியெல்லாம் இல்ல அமுதா. . கல்யாண வாழ்க்கை ஒண்ணும் சாதாரணமானது இல்ல. . ஒருத்தருக்காக சகிச்சுட்டு இன்னொருத்தர் ரொம்ப காலம் வாழ்ந்துட முடியாது. . நீ காதலிச்சு என்னை கல்யாணம் பண்ணிக்குற. . நா உன்னை கல்யாணம் பண்ணி காதலிக்க கத்துக்குறேன். . ”

“குள்ளச்சி உன் மாதிரி பேச யாராலையும் முடியாது. . எம்புட்டு சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல தெரில டீ. . என் பொக்கிஷம் நீ கண்ணுக்கு கண்ணா உன்னை எப்படி பாத்துப்பேன்னு பாரு. . இனி உனக்கு எல்லாமுமா நா இருக்கேன். . ”,என்றவன் அவள் முகத்தை கையில் ஏந்திக் கொண்டான்.

அத்தனை நேர அணைப்பிலும் தொடுதலிலும் அதீத அன்பையும் அரவணைப்பையும் தாண்டி எதுவுமே இல்லை காதல் எப்போதுமே சம்மந்தபட்ட இருவர் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த மாயக் கவிதை. அவ்விருவரை தவிர மற்றவருக்கு அது எப்போதும் விளங்காத வேற்று மொழியே. .

முகத்தை அழுந்தத் துடைத்தவனாய் எழுந்தவன்,”வாரேன் அரசி. . இப்போவே போய் அம்மைகிட்ட விஷயத்தை சொல்லணும். . மொதல்ல முத்துகிட்ட சொல்ணும். . வரட்டுமா. . ”

சிறு பிள்ளையாய் ஆர்பரிப்பவனை பார்த்தவளுக்கு தன் முடிவின் மீது மீண்டும் சற்று சந்தோஷம் வந்திருந்தது.

நேராய் முத்துவின் வீட்டிற்குச் சென்றவன் முத்துவை வெளியே அழைத்து அவனை அப்படியே தூக்கியிருந்தான்.

“மாப்ள டேய். . இறக்குடா யாராவது பார்த்தா மானம் போய்ரும். . ”

“மாமா என் அரசி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாலே. . ”

“ஏலேய் என்ன சொல்லுத நிசமாவா?”

“ஆமா மாமா இப்போ அங்கேயிருந்து தேன் வரேன். . கிட்டதட்ட இருபது வருடா தவம்லே. . சந்தோசத்துல மூச்சடைக்குது. . நேரா இங்கேதேன் வரேன். . இனிதேன் அம்மைகிட்ட எல்லாம் சொல்லணும். . ”

“ஏலேய் எழிலு ஆச்சி???”

“விடு மாமா பாத்துக்கலாம் அதெல்லாம் சம்மதிக்கும். . இல்லனா சம்மதிக்க வைப்பேன். . சரிலே வரேன் நேமாச்சு. . ”

என்றவன் வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு நேராய் சமையலறைக்கு தான் சென்றான். ”யம்மா யம்மா. . ”

ஆர்பார்ட்டமாய் கத்திக் கொண்டு வந்தவனை பார்த்து மலரும் பூம்பாவையுமே அதிசயமாய் பார்த்தனர். காலையில் இருந்த இறுக்கமான மனநிலை என்ன இப்போது இவன் இருக்கும் நிலையென்ன என நினைத்தவர்கள் ஆவனையே பார்த்திருக்க செல்வி தான் “என்ன எழிலு பதட்டமா இருக்க?”

“ம்மா உன் மருமவ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா. . நீ பேசுனியாமே காலையிலே. . ”

“பாருங்க அக்கா எம்புள்ள முகத்துல எம்புட்டு களை வந்துருக்குனு. . இந்த பூரிப்பை பாக்குதுக்காகவே என்ன வேணா செய்யலாம்லே எழிலு. . ”

“பூ சித்தி சித்தப்பா எங்க நா பாத்துட்டு வரேன். . ”,என்றவன் இப்டி இந்த வீட்டில் உல்லாசமாய் வளைய வந்து வருடங்கள் பல ஆகியிருந்தது.

அதியனிடமும் அகத்தியனிடமும் விஷயத்தை கூறியவன் அறைக்குச் செல்ல விஷயமறிந்து தமிழும் வேணியும் அவனை காண வந்தனர்.

“அண்ணே!!”

“தமிழு வாடா. . வாம்மா ஏன் அங்கனயே நிக்குற. . ”

“அம்மை இப்போதேன் விஷயத்தை சொல்லிச்சு. . ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. . நீ இப்டியே இருண்ணே. . பார்க்கவே நிறைவா இருக்கு. . ”

“தமிழு என் அரசி என்கிட்ட வந்துட்டா இனி இப்படி மட்டும் தாம்லே இருப்பேன். . ”

“பெரியத்தான் முதன்முதலா உங்க ரெண்டு பேரையும் பாத்தப்போவே ஒரு அந்யோன்யம் தெரிஞ்சுது. . கடவுள் இவுகளுக்கு இவுக மட்டும்தேன்னு பச்சுருப்பாருனு சொல்லுவாகளே அப்படிதேன் உங்க பொருத்தமும். . வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும். . ”

“தேங்க்ஸ் மா. . ”,எனும்போதே வேணியை தள்ளாத குறையாய் உள்ளே வந்த அங்கயர்கண்ணி அவன் பின் கழுத்தை கட்டிக் கொண்டு கண்மன் தெரியாமல் குதித்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணே ஜாலி ஜாலி. . எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா. . நினைச்சத சாதிச்சுட்ட அண்ணே. . அண்ணியை சீக்கிரமே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு. . கல்யாணத்துக்கு கட்டாமா நா கேக்கு பட்டுபுடவைதேன் வேணும் சொல்லிட்டேன். . ”

“ஏட்டீ கருவாச்சி கழுத்து வலிக்குது விடு. . எத்தனை சேலை வேணுமோ எடூத்துக்கோ நா வாங்கித்தரேன். . ”

“அண்ணே வாழ்த்துக்கள்”,என முகில் பவ்யமாய் கூற அதற்கு சிரித்தவாறே எழில்,

“ஏம்லே இதைக்கூட இப்படி பம்மிகிட்டு சொல்லுத. . ”,என்றவாறு அவன் தோளில் தட்டிக் கை போட்டுக் கொண்டான்.

அவனை அத்தனை இலகுவாய் பார்த்த அனைருக்குமே அப்படியாய் ஒரு சந்தோஷமும் திருப்தியும். . ஆனால் இந்த விஷயமறிந்தும் அறையிலிருந்து வெளியே வராதது பாக்கியம் மட்டுமே. .

மகேந்திரநாதனும் அதியமானும் அப்போதுதான் வீட்டிற்கு வந்திருக்க யாரும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் வேலையை பார்க்கச் சென்றனர். அவர்கள் மூவரையும் காலையில் கவனித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடே எழிலும் அமைதிக் காத்து விடியலுக்காக காத்திருந்தான்.