“தோழி கூற்று. (குறுந்தொகை-10)
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே.
என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது
ஓரம்போகியார்.
செய்தி
அவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீண்டான். தோழி அவனது மனைவி தாயான செய்தியைக் கூறி வீட்டுக்குள் நுழைய விடுகிறாள்.
நீ காஞ்சிமரம் அடரந்த ஊரின் தலைவன். நீ விழாக் கொண்டாடி முதலில் திருமணம் செய்துகொண்டாயே அவள் தாயாகிவிட்டாள். நீ செய்த கொடுமையை இவள் மனத்துக்குள் போட்டுப் புதைத்துவிட்டாள்.
காஞ்சிமரம் பயறுகள் போலப் பூ பூக்கும். அந்தப் பூக்களின் தாதுகள் அங்குள்ள உழவர் வளைக்கும்போது அவர்கள் தலையில் கொட்டும். (அதுபோல அவன் இனி மனைவிமாட்டு அன்பைக் கொட்டவேண்டும் என்பது உள்ளுறை)
அந்த பேச்சுவார்த்தைக்குப் பின் எழில் தனதறையை விட்டு வெளியே வரவே இல்லை. எதிர்ப்பு வருமென எதிர்பார்த்தான் தான் ஆனால் ஆரம்பமே இத்தனை பெரியதாய் நினைக்கவில்லை.
வெற்றிச் செல்வி மட்டுமே பொழிலுக்கு தேவையானதை கவனித்துக் கொண்டார். பாக்கியமோ வெற்றிச்செல்வியோ யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஆனாலும் அனைவருக்குமே ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது. இருந்தும் தெரியபடுத்த விரும்பினால் விஷயம் அதுவாகவே வெளிவந்திருக்கும் அப்படி இல்லாத பட்சத்தில் அதை தெரிந்து கொள்ள அவசியமில்லை என பொறுமை காத்தனர்.
எழில் என்றுமே வீட்டில் இருக்காதவன் அதிலும் அவனறையை விட்டு வெளி வராமல் இருப்பது விஷயத்தின் வீரியத்தை உணர்த்தி இருந்தது.
“ஏன் டீ அப்படி பேசிட்ட. . எழிலு மூஞ்சியை பாக்க எனக்கே ஒரு மாதிரி ஆயிருச்சு. . ”
“பின்ன அவன் கூறுகெட்ட தனமா எதையாச்சும் பண்ணுவான் இங்க பெரியவுகனு அப்பறம் நாம என்னத்துக்கு கிடக்கோம். . என்ன இருந்தாலும் வேற சாதி பிள்ள. . அதைக்கூட விட்டாலும் எப்படி ஏற்கனவே கல்யாணம் ஆனவள ஏத்துக்க முடியும். . கேக்கவே நாராசமாவுல்ல இருக்கு. . ”
“ம்ம் இந்த பய புத்தி ஏன் இப்படி போச்சுனு தெரிலயே. . இளவட்ட பய னா அடிச்சு வழிக்கு கொண்டு வரலாம். . ம்ம் என்ன கிரகமோ ஒண்ணுமாத்தி ஒண்ணு எதாவது பிரச்சனை வந்து தொலையும் போல. . ”
மறுநாள் காலையில் சற்றே தெம்பாய் உணர்ந்தவள் மெதுவாய் எழுந்து வெளியே வந்தாள். பாக்கியம் பூம்பாவையோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மெதுவாய் சென்று அவர்அருகில் அமர்ந்தாள்.
“வாட்டீ பொழிலு இப்போ தேவலயா?எதாவது சாப்புடுதியா?”
“இல்லத்தே ஒண்ணும் வேணாம். . என்ன ஆச்சி அதிசயமா அமைதியா இருக்கீங்க. . ”
“ம்ம் எல்லாம் அமைதியா இருந்து தானே கழுத்தறுக்குதுக. . அதேன். . ”
அவர் பட்டென அப்படி கூறியதில் ஒரு நொடி முகம் சுருங்கிவிட்டது பொழிலுக்கு. பூம்பாவைக்கே இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று தோன்றியது. .
“அத்தே அந்த புள்ள ஏதோ விளையாட்டா கேட்டுது அதுக்கு ஏன் இப்படி பேசுறீக?”
“இவ ஒருத்தி வந்துட்டா வாய் பேச வாயை மூடிட்டு போய் பூஜை கூடையை எடுத்துட்டு வா கோயிலுக்கு நேரமாச்சு. . ”,என்றவர் எழுந்து செல்ல பூம்பாவை பொழிலிடம்,
“ஏட்டீ நீ ஒண்ணும் நினைச்சுக்காத கிழவி நேத்துல இருந்தே சரியில்ல எல்லார்கிட்டேயும் எரிஞ்சு விழுது. . போ போய் கொஞ்ச நேரம் படுத்துக்கோ. . ”,என முடிப்பதற்குள் பாக்கியம் மீண்டும் கத்த ஆரம்பிக்க அவரை நோக்கி ஓடினார்.
சோர்வாய் அவளறைக்குச் சென்றவள் ஜன்னலின் அருகே நின்று வெளியே வெறித்திருக்க யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
வெற்றிச் செல்வி தான் அவளுக்கான உணவோடு வந்திருந்தார்.
“என்ன பொழிலு அங்க என்ன பண்ற?”
“ம்ம் ஒண்ணுமில்லத்தே. . ”
“வா சாப்டலாம். . இப்போ வலி குறைஞ்சுருக்கா?”
“பரவால்லத்தே. . நா வீட்டுக்கு போலாம்னு இருக்கேன். . கொண்டுபோய் விட்டுறறீங்களா?”
“ஏன்ட்டீ என்னாச்சு ஏன் இப்படி சொல்லுத. . ”
“இல்ல சும்மா தான். . நேத்துல இருந்து யாருமே சரியில்ல எல்லாரும் என்னவோ போல இருக்கீங்க. . நீங்களுமே எதோ யோசனையிலேயே இருக்கீங்க. . நா இங்க வந்தது யாருக்கும் பிடிக்கலையோனு தோணுது. . அதான். . ”
“என்ன ரொம்ப பெரிய மனுசி ஆய்டியோ. . பிடிக்கல அது இதுனு பேசுறவ. . வீடுனா ஆயிரம் இருக்கும் அதுக்காக. . கண்டதை போட்டு குழப்பாம சாப்புடுத வழிய பாரு. . ”என்றவர் உணவை ஊட்டிவிட்டு விட்டு வெளியே செல்ல சில நிமிடத்தில் எழில் அங்கு வந்தான்.
“உன்ட்ட பேசனும் அரசி. . ”
“எதைப்பத்தி?”
“என்னைபத்தி நம்மளபத்தி. . ”
“நம்மள பத்தி பேசுறதுக்கு ஒண்ணுமேயில்ல அமுதா. . ”
“இருக்கு நிறையவே இருக்கு. . கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே கேட்டியே நீ வந்தது பிடிக்கலையோனு அதுக்கு பதில் சொல்லனும். . ”
“??”
“நீ இங்க வர்றது பிடிக்கலதேன். . எழிலோட சிநேகிதியா இல்ல எழிலோட பொண்டாட்டியா வர்றது அவங்களுக்கு பிடிக்கல. . ”
“அமுதா என்ன உளர்ற??”
“ஆமா அரசி தாத்தா ஆச்சி அம்மைக்கு விஷயம் தெரியும் நேத்துதேன். . அவுகளுக்கு விருப்பமில்ல. . எனக்கு உன் பதில் தெரியாம எதுவும் பேச பிடிக்கல. . கடந்த ஒரு மாசமும் நா உன்னை தொந்தரவு பண்ணாம இருந்தது உன்னை குழப்ப வேண்டாமேனு தேன். . மத்தபடி என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. . இப்போ உன் பதிலை சொல்லு அதைப் பொருத்துதேன் நா அவுககிட்ட பேசனும். . ”
“என்ன முடிவை சொல்லணும் உனக்கு. . ஏன் அமுதா இப்படி பேசுற. . கல்யாணம் ஆகி நா அவரோட வாழ்ந்தேனோ இல்லையோ கட்டின தாலி உண்மை நா அவரு மனைவி அதுவும் உண்மை. . இப்போ நா ஒரு விதவை அதுவும் உண்மை. . ”
“இன்னொரு தடவை இப்படி எதாவது உளறின அடிச்சு பல்லை கழட்டிருவேன் டீ . . ”
“அமுதா நீ என்ன கத்தினாலும் நா சொல்றதுதான் எதார்த்தம். . அப்படி இருக்கும் போது அவங்க கோப படுறதுல எந்த தப்பும் இல்ல. . புரிஞ்சுக்கோடா உன் நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையும். இந்த ராசிகெட்டவ உனக்கு வேணாம்டா. . ”
“பெரிய எழுத்தாளர் ஈர வெங்காயம்ல இப்படியெல்லாம்தேன் பேசுவ. . என் தலையெழுத்து எதுவுமே மனுஷன புரிஞ்சுக்காதுக. . ச்சை. . ”,என்றவன் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
எங்கேயுமே போக பிடிக்காமல் கிளம்பி குற்றாலத்திற்குச் சென்றவன் நாள் முழுவதையும் கோவிலிலும் மற்ற இடத்திலும் கழித்துவிட்டு இருட்டிய நேரம் வீட்டிற்கு வந்தான்.
ஏதோ வீடே அமைதியாய் இருந்தது. அரசியின் அறையை திரும்பிப் பார்க்க கதவு வெளியே தாழிடப் பட்டிருந்தது. அந்நேரம் அங்கு வந்த அங்கயர்கண்ணியை பிடித்தவன்,
“அரசி எங்க ரூம் பூட்டிருக்கு. . ”
“அது…”
“செம கடுப்புல இருக்கேன் நங்குனு கொட்டிருவேன். . இழுக்காம சொல்லித் தொல. . ”
“அண்ணி வீட்டை விட்டு போய்டாங்கண்ணே. . ”
இழுத்துப் பிடித்த பொறுமையோடு,”அவளா போனாளா யாரும் எதுவும் சொன்னாகளா?”
“இல்ல அவுகளாதேன் போனாக. . ஆனா. . ”
“ஆனா??”
“போறதுக்கு முன்னாடி ஆச்சிகிட்ட பேசிட்டு போனாக தற்செயலா அந்தபக்கம் போனப்போ நா கேட்டேன். . ”
“என்ன பேசினா??”
மதியத்திற்கு மேல் பாக்கியத்தின் அறைக்குச் சென்றவள் லேசாய் குரல் கொடுத்தவாறே உள்ளேச் சென்றாள். பாக்கியம் அப்போதும் பெரியதாய் எந்த பாவமும் இல்லாமலே அமர்ந்திருக்க அவர் முன் சென்று நின்றவள்,
“ஆச்சி நா வீட்டுக்குப் போறேன். ”
“…”
“என்னை திட்டுங்க ஏன் நாலு அடிகூட அடிங்க. . ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க ஆச்சி. . ”
“…”
“என்னால இந்த குடும்பத்துல எப்பவும் எந்த பிரச்சனையும் வராது . . ஏன்னா நீங்க எல்லாரும் எனக்கு அவ்ளோ முக்கியம் அதைவிட இந்த வீட்டோட மரியாதையும் சந்தோஷமும் ரொம்பவே முக்கியம். . அமுதன் ஏதோ புரியாம பேசிட்டு இருக்கான். . என்னால ஆன மட்டும் புரிய வச்சுட்டேன். இப்போதைக்கு எனக்கு போக வேற இடமில்ல ஆச்சி அதான் தென்காசில இருக்கேன். கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க என் வழியை பாத்துட்டு போய்டுவேன். .
ஆனா இந்த குடும்பமும் இந்த உறவுகளும் எப்பவும் எனக்கு வேணும் ஆச்சி ப்ளீஸ். . ”,எனும்போதே கண்ணீர் கன்னம் தொட அதை துடைத்துக் கொண்டவளாய் எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.
அங்கயர்கண்ணி முடித்ததுதான் தாமதம் கோபமாய் உள்ளே சென்றவன்”அம்மா!!!!”என்று அழைத்ததில் மொத்த குடும்பமும் பயந்து பதட்டமாய் வந்து நின்றது.
“எங்க இந்த வீட்டு பெரிய மனுசியை கூப்பிடுங்க. . ”
அதியமான் கொந்தளித்துவிட்டார்.
“ஏலேய் என்ன வாய் ரொம்ப நீளுது. . ஆச்சியை இப்படி சொல்ற??”
“ம்ம் உங்கம்மைய சொன்னா கோபம் வர்றதெல்லாம் சரிதேன். . நா சில விசயம் பேசணும் அதுக்கப்பறம் யாரு மேல என்ன தப்புனு சொல்லுங்க. . ”
“எழிலு வேணாம்யா பொறுமையா பேசிக்கலாம். . ”
“யம்மா இன்னும் எத்தனை வருசம் பொறுமையா இருக்க சொல்லுத. . கடைசி வர உன் புள்ளைக்கு கல்யாணமே ஆகாது பரவால்லையா??”
“ஏலேய் என்ன சத்தமெல்லாம் பலமா இருக்கு??”
“ஆச்சி அரசி எங்க??”
“என்னைய கேட்டா. . விருந்தாளியா வந்தா கிளம்பி போய்ட்டா. . ”
“வேணாம் கிழவி என்ன பேச வச்சு பாக்காத. . ”
“என்னலே ரொம்பதேன் துள்ளுற. . வீட்டைவிட்டு போய்ட்டானு தெரிஞ்சுட்டு தானே வந்து கேக்க அப்பறம் நா என்ன சொல்லணும்??”
“இந்த வயசுல இம்புட்டு அராஜகம் பண்ணகூடாது ஆனாலும். . அப்பா சித்தப்பா சித்தி. . எல்லாருக்கும் நா சில விஷயத்தை சொல்றேன். . இத்தனை வருசமா நா கல்யாணம் பண்ணிக்காம இருக்க காரணம் நா ஒரு பொண்ணை மனசார விரும்புறேன். அவள தவிர வேற புள்ளைய நினைக்க பிடிக்காமதேன் கல்யாணம் பண்ணல. .
அந்த புள்ள நம்ம அரசிதேன். . அவளுக்கு கல்யாணம் ஆன ஒரே வாரத்துல அவ புருசன் செத்து போய்ட்டான். அவனோட அவ ஒருநாள் கூட பொண்டாட்டியா வாழல. . அப்படியிருக்க அரசி என் அரசியாவே திரும்ப வந்துருக்கும் போது அவளை நா கல்யாணம் பண்ணிணா என்ன தப்பு?
இன்னும் அவ இதுக்கு ஒத்துக்கல. . அது என் பிரச்சனை நா பாத்துக்குறேன். . ஆனா இப்போ பிரச்சனை பண்றது ஆச்சிதேன் இந்த வீட்டு மூத்த மருமக ஏற்கனவே. . அதுக்கு மேல எனக்கு சொல்ல கூட பிடிக்கல. . இதனாலதேன் அவ இப்போ வீட்டை விட்டு போய்ட்டா. . ”
“ஏலேய் எல்லாத்தையும் சொல்லிட்ட சரி…இப்போ இதுல என்ன தப்பிருக்கு. . அதையும் சொல்லு கேப்போம். . வந்துட்டான் பேச. . என் பேரன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு தானேலே இப்படி பேசுதேன். . அவ ராசி சாதகம் எப்படியிருக்கோ எவன் கண்டான். . ”
“யம்மா நீயும் தான் சரிக்கு சரி பேசிகிட்டு கிடக்க. . தேவையில்லாம வார்த்தைய விடாத. . ”,என அதியன் பாக்கியத்தை அடக்க முயன்றார்.
“ஏலே அதியா அம்மை சொல்றதுல என்னலே தப்பிருக்கு. . கல்யாணம்னா என்ன சாதாரணமா போச்சா. . அவன் வாழ்க்கைல. . ”
“ஆமாப்பா இப்போ என் வாழ்க்கை ரொம்ப பிரகாசமா இருக்கு. . அவ வந்துதேன் விளங்காம போ போகுது. . ஏ கிழிவி இப்போ நீ என்னதேன் சொல்ற. . எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது அரசியோட தேன். . ”
“ஓ. . அப்படி என்னலே மயக்கியிருக்கா உன்னை. . பேச்சும் சத்தமும் பலமாதேன் இருக்கு. . குமரியை கண்ட மிதப்புல கிழவியை எதிர்த்து பேசிட்டு அலையுதியோ. . ”
பாக்கியம் பல நேரங்களில் இப்படித்தான் கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அவர் போக்கில் வார்த்தையை விட்டுவிடுவார். எழிலுக்கு அத்தனை பேர் முன்னிலையில் அவரின் வார்த்தைகள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. அவரை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தவன்,
“இவ்ளோ பேசுறியே ஆச்சி. . அவ இல்லைனா உன் பேரன் உனக்கு உண்டா. . இதே நடு வீட்ல போட்டோவா போட்டு மாலைய தொங்க விட்டு 17 வருசமாயிருக்கும். . ”
“டேய் எழிலு”,என வெற்றிச் செல்வி அவனருகில் வந்து கைப்பிடித்துக் கொள்ள மெதுவாய் கையை விலக்கியவன்,
“நெருப்புனு சொன்னா ஒண்ணும் சுட்டுற போறதில்லம்மா. . ஆனா நீ கூட இவுக பேச்சை மறுத்து பேசலையே. . அன்னைக்கு குடும்பமே மாறி மாறி அவளை குலசாமினு தலையில தூக்கி வச்சு ஆடுனதெல்லாம் வேசம் அப்படிதான. .
சாமியாவே பாத்தவள இந்தவீட்டு மருமகளா பார்க்க மனசு வரலைனா என்ன அர்த்தம். . இங்கேரு கிழவி இது காதலோ ஆசையோ மயக்கமோ என்ன வேணா சொல்லிக்க. . ஆனா இந்த எழிலமுதனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம்னு ஒண்ணு பொழிலரசி கூடதேன். .
எதாவது எடாகூடம் பண்ணி அந்த கூறுகெட்டவ இந்த ஊரைவிட்டு போனா அப்பறம் உன் பேரன் உனக்கில்ல சொல்லிட்டேன். . மிரட்டுதேன்னு நினைக்காத. . என்னை பத்தி தெரியும்ல சொன்னா சொன்னத செய்வேன். . ”
என்றவன் விறுவிறுவென மாடிக்குச் சென்று விட்டான். வெற்றிச்செல்வி அழுதுகொண்டே சமையலறைக்குச் செல்ல மலரும் பூம்பாவையும் அவரை சமாதானப்படுத்த சென்றனர்.
“இப்போ எதுக்கு இவன் இந்த குதி குதிக்கான். . நா அவன் நல்லதுக்குதேன் பண்றேன்னு கூட புரியாதா??”,என பாக்கியம் ஆரம்பிக்க மகேந்திரநாதனும் அதியமானும் அவரை சமாதானப்படுத்தச் சென்றனர்.
தமிழ் வேணியோடு அவனறைக்குச் செல்ல முகிலும் அங்கயர்கண்ணியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் மாடியேறிச் சென்றனர்.
“டேய் முகிலு. . ”
“என்னட்டீ. . ”
“இல்ல நம்ம வீட்டு சண்டியரு காதலுக்கே இந்த நிலைமைனா உன் காதல் கதை மட்டும் தெரிஞ்சுது. . ”
“ஏட்டீ!!!!என்னத்த உளர்ற?”
“ம்ம் உன் இளாவை பத்தி பேசினா உளர்ற மாதிரி இருக்கா???”
“கண்ணி எப்படி உனக்குத் தெரியும் புண்ணியமா போகும் வீட்ல போட்டுக் கொடுத்துராதட்டீ. . ப்ளீஸ் ப்ளீஸ். . ”
“அடச்சை தங்கச்சி கிட்டேயே இப்படி கெஞ்சுறியே வெட்கமா இல்ல. . சரி சரி அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேன். . மூஞ்சியை அப்படி வச்சுக்காத பாக்க சகிக்கல. . ”
“எல்லாம் என் நேரம்ட்டீ. . ”
“ஆனாலும் எழிலு அண்ணணை பாக்க பாவமா ஆயிடுச்சு. . முகமே வாடிப் போச்சு டா. . ”
“ம்ம் ஆமா ஆனாலும் நம்ம கிழவி எதுக்கு இந்த பாடு படுத்துதோ தெரில. . ”
அங்கு தமிழோ தீவிர சிந்தனையில் இருந்தான். மெதுவாய் அவன் தோள்தட்டிய வேணியை அதே யோசனையோடே பார்த்தவன்,
“என்னால நம்பவே முடில வேணி எங்கண்ணணா இப்டினு. . கிட்டதட்ட இருபது வருசம் ஒரு பொண்ணை நினைச்சு அவளுக்காகவே வாழ்க்கையை ஓட்டுறதெல்லாம் சினிமால கூட நடக்காத விஷயம். . ”
“ம்ம் உண்மைதான்ங்க. . எத்தனை பெரிய விசயம் இது. . ஆனா நடுவுல பொழில் அக்கா வாழ்க்கையில அந்த கல்யாணம் மட்டும் நடக்காம இருந்துருந்தா ரொம்பவே நல்லாயிருந்துருக்கும். ”
“ம்ம் சரிதேன் ஆனாலும் அதுல அவங்க தப்பு என்ன இருக்கு வேணி. . அவங்க வயசுக்கு ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்குறதுல தப்பில்ல தான. . ”
“தப்பு இல்லதேன். . ஆனா அத்தன பரந்த மனசு கொண்டவங்களா நாம இன்னும் மாறலையேங்க. . சொந்தம் பந்தம் ஊரு சனம்னு யோசிச்சு பாத்தா ஆச்சி சொல்றதுதேன் சரி. . காதல் மனசு உணர்ச்சினு யோசிச்சா இவுக பண்றதுதேன் சரி. . என்னவோ கடவுள் தேன் நல்லதை நடத்தனும். . ”
ஒவ்வொருவர் மனநிலையும் இப்படி ஒவ்வன்றாக இருக்க எழில் மொட்டை மாடியில் நின்று வானத்தின் இருளை வெறித்துக் கொண்டிருந்தான். அவனைத் தேடி வந்த அதியன் ஒன்றும் பேசாமல் அவனருகீல் நிற்க அதை உணர்ந்தவனும் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றான்.
“ஏலே எழிலு வீணாபோட்டு குழப்பிக்காத டே. . எல்லாம் நல்லபடியா நடக்கும். . ”
“…”
“யாரு எதிர்த்து நின்னாலும் இந்த சித்தப்பன் உனக்கு துணையா இருக்கேம்ல. . தைரியமா போய் பொழிலுகிட்ட பேசு. . ”
“ம்ம் பேசனும் சித்தப்பா. . அவளுக்கே என் மனசு புரியாதப்போ நா யாரை குறைசொல்ல முடியும். . அவள மறுபடியும் பாக்காமயே இருந்து தொலச்சுருக்கலாமோனு தோணுது. . இப்போ அனுபவிக்குற வலியை விட அது கம்மிதேன். . ”
“ஏலேய் காதல் கல்யாணம்னா சும்மாவா ஊரே எதிர்த்து வந்தாலும் மலையாட்டம் நிக்கனும்லே. . நீ என்ன இரண்டு நாளுக்கே இப்படி சொல்லுத. . ”
“அப்படியில்ல சித்தப்பூ ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை வீரியமா இருக்கு. . பேசுனவுக மறந்துறலாம் கேட்ட எனக்கு சென்மத்துக்கும் மறக்காது சித்தப்பா. . ஆச்சியை மட்டும் சொல்லல. . இந்த கூறுகெட்ட அரசியும்தேன். . ஒருத்தன் திடமா எல்லாத்தையும் கேக்குறேன்ங்கிறதுக்காக இஷ்டத்துக்கு பேசுதுக எல்லாம். . நானும் மனுசன் தானே சித்தப்பா. . ”
“என் புள்ள இப்படி கலங்கி நா பாத்ததேயில்லையேலே. . இன்னொரு தடவை இப்படி பேசின அடி வெளுத்துருவேன். . யாருக்கு எப்படியோ எனக்கு பொழில் நிசமாவே சாமிதாம்லே. . இந்த வீட்டோட மொத வாரிசுனு உன்னை கைல ஏந்தினப்போ அம்புட்டு சந்தோசம் எனக்கு. . அப்போ இருந்தே நீனா எனக்கு தனி இஷ்டம். .
அப்படிபட்ட உன்னை மறுபடியும் நாங்க முழுசா பாக்க ஒரே காரணம் அந்த புள்ளதேன். . அப்படியிருக்க அவளவிட உனக்கு பொருத்தமா யாருலே இருக்க போறா. . விடு காலையிலே போய் அந்த புள்ளைய பாத்து பேசு. . இப்போ போய் நிம்மதியா தூங்குடே. . போ. . ”
அங்கு சமையலறையில் வெற்றிச் செல்வி கண்ணீரைத் துடைத்தவாறு அமர்ந்திருக்க அவரின் இருபுறமுமாய் அமர்ந்து மலரும் பூம்பாவையும் பேசிக் கொண்டிருந்தனர்.
“யக்கா இப்போ எதுக்கு இந்த அழுக அழுதுட்டு கிடக்கீக. . எழிலு ஏதோ வருத்தத்துல அப்படி சொல்லிட்டான். . ”
“இல்ல மலரு. . என் புள்ள கேட்டான் பாரு நீ கூட அவுக சொன்னதுக்கு மறுத்து பேசலயேனு அதேன் தாங்கிக்க முடில. . மலைபோல என்ன நம்பின புள்ளைக்கு ஒண்ணும் செய்யாம போய்ட்டோமேனு தேன் கஷ்டமா இருக்கு. . ”
“ம்ம் இப்போ கஷ்டப்பட்டு என்ன அவன் சொன்னதும் சரிதானே. . அத்த தேன் அந்த காலத்து மனுசி ஏதோ உளருதாகனா. . இத்தனை வருசம் ஒரு புள்ளைக்காக இவன் வாழ்க்கையை விட்டுருக்கான்னா யோசிக்காம சரினு சொல்லிருக்க வேணாமா நீங்க?”
“ஏட்டீ பூவு நீயும் ஏன்ட்டீ அக்காவ நோகடிக்க?”
“பின்ன என்னக்கா எழிலுகிட்ட அத்தே என்ன பேச்சு பேசுதாக. . மயக்கிட்டாளா அது இதுனு. . அந்த பிள்ள பொழிலு அப்படிபட்டவளா. . அதுவே ஆதரவில்லாம வந்து நிக்குது. . இப்போ வர நம்ம குடும்பத்து பிரச்சனையில அவள இழுத்து கத்தி குத்து வாங்கிட்டு கிடக்கு. .
அந்த புள்ளைய இப்படியெல்லாம் பேசுனா சாமியே மன்னிக்காது நம்மள. . யாரு என்ன வேணா சொல்லுங்க நா எழிலு பக்கம்தேன். . கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல வாழ்க்கையே விட்டுட்டு வந்து நின்ன பிள்ளைக்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்க கூடாதா?நாம எல்லாம் திருந்தவே மாட்டோம்க்கா. . அந்த பாவிப்பய விதி அவ்வளவுதேன். . அதுக்கு இவ என்ன பண்ண முடியும். . சும்மா என்னத்தையோ உளறிகிட்டு. . போங்கக்கா. . இதபத்தி என்ட்ட பேசட்டும் நா நல்லா சொல்லிவிட்டுருவேன் அத்தைகிட்டயே. . ”
“அக்கா இவ என்னத்தையோ உளறிட்டுகிடக்கா. . நீங்க சங்கடபடாதீக. . ”
“இல்ல மலரு பூவு சொல்றது ஒவ்வொண்ணும் சரிதேன். . அவ நிலைமைல எனக்கு ஒரு பொண்ணு இருந்துருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நா நினைச்சுருக்க மாட்டேனா. . வாழ்க்கைய தொலைக்குற வயசா இது. .
அதுமட்டும் இல்லாம அது அவ அம்மா போன அன்னைக்கே அத்தனை தைரியமா இருந்த பிள்ள. . ஆனா காலையிலே என்ட்ட பேசும் போது எத்தனை வருத்தமா பேசினா அப்போ கூட நா அவளை சமாதானப்படுத்தாம போய்ட்டேனே. .
எம்புள்ள எழிலுக்கு இருக்குற மனசுகூட எனக்கு இல்லாம போச்சே. . அந்த புள்ளைய தவிர எழிலுக்கு சந்தோசம் யாராலையும் கிடைக்காது. . பொழிலுக்கும் அவனை தவிர நல்ல வாழ்க்கை யாராலையும் கிடைக்காது. .
ரெண்டும் எம் புள்ளைக யாரு என்ன சொன்னாலும் நா இருக்கேன் அதுகளுக்கு. . காலையில மொத வேலையா எழிலுகிட்ட பேசுறேன். . ”,என்றவர் கன்னத்தை துடைத்துக் கொண்டு எழுந்துச் சென்றார்.
மறுநாள் பொழுது பல பல உணர்ச்சிகளோடு அனைவருக்கும் விடிந்தது. ஓரளவு அனைவருமே எழிலுக்கு ஆதரவாய் இருக்க அதியமானும் மகேந்திரநாதனும் மட்டும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாமல் போனது.
எழில் கண்விழிக்கும் போதே கையில் காபியோடு வெற்றிச் செல்வி அவனருகில் அமர்ந்திருக்க கண்ணைத்வ துடைத்தவாறே எழுந்து அமர்ந்தான்.
“எய்யா எழிலு அம்மை மேல இன்னும் கோவம் போலயா மன்னிச்சுருய்யா. . ”
“ஐயோ ம்மா. . ஏன் இப்படியெல்லாம் பேசுத. . உன்னை கோவிச்சுட்டு நா எங்க போப் போறேன். . ஏதோ ஆதங்கத்துல பேசிட்டேன்ம்மா. . மனசுல வச்சுக்காத எதையும். . ”
“அதெல்லாம் ஒண்ணுமில்லயா. . நேத்து நீ பேசினப்பறம் தேன் என் தப்பு எனக்கு புரிஞ்சுது. . உன் சந்தோசம் தான்ய்யா எனக்கு முக்கியம். . நீ பொழிலுகிட்ட பேசு இல்லனா நானே பேசுதேன். . ”
“ அதெல்லாம் வேணாம்மா. . அந்த குள்ளச்சி நம்ம கிழவிக்கு மேல ஆடிட்டு கிடக்கா. . நா பாத்துக்குறேன் நீ சங்கடபடாத. . அப்பா எதாவது சொன்னாரா?”
“இல்லய்யா அப்பாவும் தாத்தாவும் என்ன நினைக்குறாகனே தெரில. . நானும் ஒண்ணும் கேக்கல. . ”
“ம்ம் சரி விடும்மா. . நா ரெடியாய்ட்டு போய் அந்த ராங்கிய பாத்துட்டு வரேன். . ”
குளித்து தயாராகி கீழே வந்தவன் வாராண்டாவில் இருந்த பாக்கியத்தை கண்டும் காணாமல் அவன்போக்கில் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
நேராய் அரசியின் வீட்டுக்குச் சென்றவன் கதவு பூட்டியிருப்பதை பார்த்தவன் பின் வழியாய் சென்று கதவை அழுத்திப் பார்க்க கதவு திறந்து கொண்டது. . மெதுவாய் உள்ளே சென்றவன் அறைக்குள் எட்டிப் பார்க்க கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள் அரசி.
மெதுவாய் அவளருகில் சென்றவன் தரையில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். எத்தனை வருடங்களாய் காண தவமிருந்த முகம் இன்று இத்தனை அருகில் அதுவும் அவன் காதலியாகவே.
“குள்ளச்சி தூக்கத்துல கூட உர்ருனே தூங்குறதப் பாரு. . ஏத்தம் சாஸ்தி தேன்டீ உனக்கு. . கத்தி குத்து வாங்கிட்டு கொஞ்மும் பயமில்லாம வந்து இங்க தனியா கிடக்கத பாரு. . ம்ம் எழிலோட பொண்டாட்டிக்கு என்ல பாதியாவது திமிரு இல்லனா எப்படி. . ”,என நினைத்தவனுக்கு உதட்டோரப் லேசாய் புன்னகை அரும்பியது.
பின் சத்தமில்லாமல் எழுந்து சென்று சமையலறைக்குச் சென்றவன் அங்கு சமைத்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க தோசைமாவை எடுத்து இரு தோசையை வார்த்து எடுத்தான்.
அதற்குள் விழிப்பு வந்தவள் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து வந்து பார்க்க அவனை அங்கு எதிர்பாராதவளாய் பதறினாள்.
“டேய் அமுதா!!!நீ இங்க என்ன பண்ற?எப்படி உள்ள வந்த?”
“ம்ம் பின்பக்கமா தேன். . ”
“கதவை சாத்தியிருந்தேனே. . !!?”
“ஆமா ஆமா மகாராஜா வீட்டு கதவு திறக்க முடியாது பாரு. . அதான் அன்னைக்கே நீ கதவை சாத்தின அழகைப் பாத்தனே. . உள்ளே தாழ்பாளே இல்ல அழுத்தி பூட்டிட்டு வந்தியே. . ”
“சரியான கள்ளப்பய டா நீ அமைதியா இருக்குற மாதிரி எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தியா?”
“பின்ன பொண்டாட்டி தனியா இருக்கா என்ன லட்சணத்துல பாதுகாப்பா இருக்கானு தெரிய வேணாமா?”
“அமுதா இப்படி பேசுறதா இருந்தா என் மூஞ்சிலயே முழிக்காத சொல்லிட்டேன். . உனக்கு. . ”
“ஆத்தா மகமாயி நல்லாயிருப்ப ஆரம்பிக்காத. . வா வந்து இந்த தோசையை தின்னுட்டு உன் புராணத்தை ஆரம்பி. . ”
“உன்னை யாரு இதெல்லாம் பண்ண சொன்னா. . ”,
“ஐய்யய்யே நச நசனு பேசிட்டே இருக்காத நிக்க கூட தெம்பில்லாத அப்போவே இந்த பேச்சு பேசுதியே. . முதல்ல வந்து உக்காரு. . இந்தா சாப்டு. . ”
முந்தைய நாள் மதியம் சாப்பிட்டது சத்தியமாய் வயிறு உணவிற்காக கெஞ்சியது. எனவே அமைதியாய் அமர்ந்து ஐந்து நிமிடத்தில் அவள் சாப்பிட்டு முடிக்க அதுவரை அமைதி காத்தவன்,
“பாத்து தட்டையும் முழுங்கிறாத. . இம்புட்டு பசியை வச்சுகிட்டு பேச்சை பாரு. . இன்னொருதோசை சாப்டுதியா?”
“இல்ல அதெல்லாம் வேணாம். . நீ மொதல்ல கிளம்பு. . ”
“போறேன் போகாம இங்கேயே உக்காந்து உனக்கு சீராட்டவா போறேன். . நேத்து யாரை கேட்டு வீட்டைவிட்டு வந்த?”
“யாரை கேக்கணும்??”
“என்னைய கேக்கணும். . உன்னை அங்க கூட்டிட்டு போனவன் நா. . என்ட்ட சொல்லாம எதுக்கு கிளம்பின?”
அமைதியாய் விரல் நகங்களை வெறித்தபடி அவள் அமர்ந்திருக்க,
“இங்கேரு அரசி வீட்ல எல்லார்கிட்டேயும் என் காதலைபத்தி சொல்லிட்டேன். அந்த கிழவி வழக்கம்போல காச்சுமூச்சுனு கத்துச்சு. . அதெல்லாம் நா வழிக்கு கொண்டு வந்துருவேன். . மத்தபபடி யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல இந்த கல்யாணத்துல. . இப்போ முடிவெடுக்க வேண்டியது நீ மட்டும்தேன். . ”
“அமுதா ஏன்டா புரிஞ்சுக்க மாட்ற. . அத்தனை அசிங்கத்தையும் பட்டு அதிலிருந்து தப்பிக்கணும்னு தான் இங்க வந்துருக்கேன். இங்கேயும் என்னை தலைகுனிய வச்சுராத டா. . இப்போ நீ இங்க இருந்து வெளியே போகும்போது கூட யாராவது பார்த்தா என்னடா சொல்லுவாங்க என்னைபத்தி. . அந்த அசிங்கத்தை எனக்கு கொடுத்துராத ப்ளீஸ். . ”
“இது என் அரசியே இல்ல. . என் அரசி இத்தனை கோழை கிடையாது. . இப்படி யாருக்கோ பயப்படுறவ கிடையாது. யாரா இருந்தாலும் என் மேல தப்பு இல்லனு தலை நிமிர்ந்து நடக்குற அரசி இல்ல இது. . ”
“ஆமா அந்த அரசி எப்போவோ செத்து போய்ட்டா. . இப்போ இருக்குறவ முதுகெலும்பு இல்லாதவ. . எல்லாத்துக்கும் பயப்படுறவ. . யாராவது என்னை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினாலும் நெருப்புல போட்ட புழு மாதிரி துடிச்சு போறவ. . இவ உனக்கு எந்த விதத்துலயும் பொருந்தாதவ டா போய்ரு. . என்னை விட்டு போய்ரு. . என் வாழ்க்கையில என்னை தவிர யாருக்கும் இடமில்ல. . ”
எனும்போதே அவளின் அந்த தலை வலியெடுக்க சட்டென இறுக்கமாய் தலையை பிடித்துக் கண் மூடிக் கொண்டாள். அவள் நிலை உணர்ந்தவனாய் குளியலறைக்குச் சென்று பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி எடுத்து வந்து அவளருகில் வைத்து சிறிதும் தயக்கமின்றி அவள் காலைப் பிடித்து தூக்க முயற்சிக்க பதறிப் போனவளாய் விழி திறந்தவள் தானே காலை நீருக்குள் அழுத்திக் கொண்டாள்.
பத்து நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவன் அமைதியாகவே நிற்க சற்றே வலி மட்டுப்பட்டவளாய் விழி திறந்தவளுக்கு கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்தது.
சலனமேயில்லாமல் அவளருகில் வந்தவன் ஒன்றும் கூறாமல் தன்னோடு அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் தலை அவன் வயிற்றில் புதைந்தவாறு அமர்ந்திருந்தவள் அவன் பிடியில் இருந்து வெளிவருவதற்காக திமிற சில நொடிகளில் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டே அழுது தீர்த்தாள்.
“ஏன் அமுதா எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கணும். . நா பாவப்பட்டவ டா. . என் கால்பட்ட இடம் கண்டிப்பா நல்லாயிருக்காது. . பாரு இத்தன நாள் நல்லாயிருந்த குடும்பத்துக்குள்ளயே என்னால பிரச்சனை வந்துருச்சு. . ப்ளீஸ் டா. . என்னை தனியாவே விட்டுரு. . அதான் எல்லாருக்கும் நல்லது. . ”
பிடியை சற்றும் தளர்த்தாமலே,”விட்டுரு விட்டுருனு சொல்றியே என்னால அது முடியாமதான டீ இத்தனை வருசமும் தவிச்சுட்டு கிடக்கேன். . இப்போ உன்ன இப்படி பிடிச்சு வச்சுருக்குறது கூட உன் அம்மா செத்த அன்னைக்கு நீ எங்கம்மாட்ட பேசினியே அப்போ அந்த நொடியே பண்ணணும்னு தோணிணது. .
உன்னை மறுபடியும் பார்த்து உனக்கு கல்யாணம் ஆச்சுனு நீ சொன்னப்போ அதுதான் நடந்துருக்கும்னு மூளைக்கும் மனசுக்கும் ஏற்கனவே தெரிஞ்சாலும் அந்த நிமிசம் செத்துப் பிழைச்சேன் டீ. . இன்னொருத்தன் பொண்டாட்டியா உன்னை நினைச்சு என்னைவிட்டு பல தூரம் தள்ளி வச்சேன். . உன்னை பாக்கவே கூடாதுனு என் மனசை நானே தடுத்து நிறுத்தினேன்.
இல்லாமலே கூட வாழ்ந்துரலாம் அரசி. . ஆனா இருந்தும் இல்லைங்கிற நிலைமை ரணம். . என் கண் முன்னாடி கைக்கெட்டுற தூரத்துல நீ இருந்தும் எனக்கானவளா இல்லைனு மனசுக்கு புரிய வைக்க நா பட்டபாடு அந்த சாமி மட்டுமே அறிஞ்ச விஷயம். .
உனக்குத் தாலியை கட்டினவன் கெட்டவனாவே இருந்தாலும் அவனுக்காக உன் வாழ்க்கையை தொலைக்க தயாரா இருக்குற நீ. . உன்னையே நினைச்சு என் மனசுல கோவில் கட்டி சாமியா உன்னை வச்சுருக்குற எந்த தப்புமே பண்ணாத என்னை பத்தி ஏன் அரசி நினைச்சு பார்க்க மாட்ற. . ”,எனும்போதே குரல் தழுதழுக்க அடக்க மாட்டாதவனாய் இருதுளி கண்ணீர் அவள் கன்னம் தொட்டது.
சட்டென அவனிடமிருந்து விலகியவள் அவன் விழி நோக்க அவசரமாய் முகத்தை சீர் செய்தவன்,
“ஆனா ஒண்ணு எந்த பாவமும் தப்பும் பண்ணாத என்னை ஆளாளுக்கு பந்தாடி பாக்குறீக இல்ல. . மனுச உசுரு நிலையில்லாதது இருக்குறப்போ படுத்தி எடூத்துட்டு போனப்பறம் ஐயோனாலும் வராது அம்மானாலும் வராது சொல்லிட்டேன். . ”,என்றவன் நிற்காமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.