நெய்தல் – தலைமகள் கூற்று

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே

இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி

அமைதற் கமைந்தநங் காதலர்

அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே.

என்பது பிரிவிடை ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

-காமஞ்சேர் குளத்தார்

அவன் பிரிவை உணர்த்துகிறான்.  பிரிவைத் தலைவி தாங்கமாட்டள் என்கிறாள் தோழி.  நான் தாங்கிக்கொள்வேன்.  காதலர்தான் தாங்கமாட்டார்.  அவருக்காகத்தான் என் நெஞ்சு நோகிறது.  என் கண்ணீர் சுட்டு என் இமைகளே தீய்ந்துவிடும் போல் இருக்கிறது.  அதற்காகவே என் கண்கள் அமைந்திருக்கின்றன.  நம் காதலர் கண்கள் அதற்காக அமையவில்லைஎன்கிறாள் தலைவி.

காலையில் வழக்கம்போல் குளித்து தயாராகி கீழே வந்தவன் வராண்டாவில் நாற்காலியில் அமர வெற்றிச் செல்வி கையில் காபியோடு அங்கு வந்தார்.

“எய்யா எழிலு அந்த சேரன்மாதேவி பொண்ணு சாதகத்தை கொடு சித்தப்பாட்ட குடுத்து சோசியரை பாக்க சொல்லுதேன். . ”

“ம்ம் உன் ரூம் டேபிள் மேல தான் வச்சுருக்கேன்ம்மா பாக்க சொல்லு பொருந்தி வந்தா பொண்ணு வீட்ல பேசிருவோம். . ”

“ம்ம் சரிய்யா. . இன்னைக்கு சாப்பிட வீட்டுக்கு வருவியா?”

“ம்மா என்ன புதுசா கேக்குற. . எப்பவும் சாய்ந்திரம் தான வருவேன். . ”

“ஏலேய் இன்னைக்கு உன் பொறந்தநாளு இன்னைக்கு கூட வரமாட்டியா?”

“அடப் போம்மா நீ சொல்லி தான் பொறந்தநாளே நியாபகம் வருது இதுல விருந்து சாப்பாடு வேறயா. . என் பேரைச் சொல்லி எல்லாருக்கும் சமைச்சு போடு. . வரட்டுமா. . ”

முகம் வாட தலையசைத்தவரைப் பார்த்து ஒரு நொடி திரும்பியவன் தன் பைக்கில் அமர்ந்தவாறே,”மூஞ்சியை அப்படி வச்சுக்காதம்மா முடிஞ்சளவு வரப் பாக்குறேன். . சரியா. . ”,என்றவாறு கண்ணாடியை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

ஆண்டவன் ஜவுளிக்கடல் பெயருக்கேற்றாற் போல அத்தனை பிரம்மாண்டமாய் தென்காசி கோவிலின் அருகிலேயே அத்தனை அம்சமாய் அமைந்திருந்தது.

பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவன் கல்லாவில் கம்பீரமாய் அமர அங்கிருந்த பணிப்பெண்களிடம் மெல்லிதான சலசலப்பு வழக்கம்போல்.

“ஏட்டீ சின்ன முதலாளி வந்துட்டாரு இன்னைக்கு ஒவ்வொருத்தியும் எப்படி தீயா வேலை பார்ப்பாளுகனு மட்டும் பாரு. . நம்மூரு கருப்பசாமியாட்டம் என்ன ஒரு கம்பீரம் பாரு. . ம்ம் எந்த மகராசிக்கு கொடுத்து வச்சுருக்கோ”,என ஏக்கமாய் அவர்களுக்குள் பேசியபடி வாடிக்கையாளருக்கு சேலையை எடுத்துப் போட்டு கொண்டிருந்தனர்.

இவர்களின் சம்பாஷனையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தவாறே அந்த பெண் தனக்கான புடவைகளை எடுத்துக் கொண்டு பில்லிங்கிற்குச் சென்றாள். பில்லிங் முடித்து பணம் கட்டச் செல்லும் நேரம் அந்த பெண்களின் பேச்சிற்கு சொந்தமாமானவன் யார் என பார்க்கும் ஆவலில் தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

மிகவும் பரிட்சையமான முகம் போன்று ஒரு எண்ணம். அதே யோசனையோடே நின்றவள் பணத்தை கொடுக்க மறந்து அவனை பார்த்து நிற்க கையை நீட்டியிருந்தவன் பணம் வராததால் நிமிர்ந்து அவள் முகம் பார்த்து சர்வமும் அடங்கிப் போனான்.

நாக்கு மேல்லன்னத்தில் ஒட்டிக் கொள்ள இயத்துடிப்பு தாறுமாறாய் எகிற ஆரம்பித்திருந்தது. தான் காண்பது கனவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே அவன் அவளை நோக்கியிருக்க அவளே வாய் திறந்து பேச தொடங்கினாள்.

“சாரி உங்க முகம் ரொம்ப பரீட்சையமா இருந்ததுதா அதான் ஏதோ யோசைனைல பணம் கொடுக்க மறந்துட்டேன். . ”

“அரசி!!!”

“ஹாங்ங். . என் பேரு…நீங்க. . ஏய்ய் தடிமாடு!!!”,என சற்றே சத்தமாய் கூறியிருந்தாள்.

அருகிலிருந்தவர்கள் அவளை பார்ப்பது புரிந்தபின் சற்றே தன் தவறை உணர்ந்தவள்,”சாரி சாரி அமுதா எப்படியிருக்க?”

“ம்ம் நா. . நா. . நல்லாயிருக்கேன். . நீ எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கேன். . எப்படிடா இருக்க எத்தனை வருஷம் ஆச்சு. . அப்பப்போ உன்னை அத்தையெல்லாம் நினைச்சுப்பேன். . வீட்ல எல்லாரும் எப்படியிருக்காங்க. . ??நம்ம கடைனு நினைக்கல. . நல்லா டெவலப் ஆயிடுச்சு இல்ல. . ”

“எல்லாரும் நல்லாயிருக்காக. . ஆமா. . நீ. . ”,எனும்போதே அடுத்து பணம் செலுத்துவதற்காக இருவர் வந்துவிட கல்லாவை விட்டு எழுந்தவன் கணக்குப்பிள்ளையை அங்கு அமர்த்திவிட்டு அவளருகில் வந்தான்.

“வா இங்க தான் ஆபீஸ் ரூம். . ஜுஸ் சாப்ட்டு போ. . ”,என்றவன் தன் நிலையை சமாளிக்க பெரும்பாடு பட்டு அங்கு நிற்காமல் முன்னே நடக்க ஆரம்பித்திருந்தான்.

அவளுக்குமே அவனோடு செல்வதில் தயக்கமில்லாததால் அவனோடு சென்றாள். உள்ளே நாற்காலியில் அமர்ந்தவன் எதிரிலிருந்த இருக்கையில் அவள் அமர காத்திருந்தான்.

வரும்போதே பணிப்பெண் ஒருவரிடம் இரண்டு ஜுஸ் வாங்கி வருமாறு பணித்திருந்தான். இன்னமும் அவனால் தன் கண்ணை நம்பமுடியவில்லை. இத்தனை நாட்களாய் ஒருமுறையாவது பார்க்க எண்ணியவனுக்கு இப்போது பார்க்காமலேயே இருந்திருக்கலாமோ என்றே தோன்றியது.

29 வயதிற்கான தீக்சண்யமான முகம் சற்றே பூசியதை போன்ற உடல்வாகு இடைவரையிலிருந்த அடர் கூந்தல் அழகிய குண்டு கன்னம் என அத்தனை குடும்ப பாங்கான ஒரு முகம்.

தன் யோசனையை எண்ணி தன்னை தானே மனதினுள் நொந்து கொண்டவன் அவளின் விழி நோக்க அவனைத் தான் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“ஆனாலும் ரொம்ப மாறிட்டடா. . அடையாளமே தெரில…தென்காசியோட மிஸ்டர் ஹேண்டசம்னு சொல்லு. . ”

“ச்சச்ச அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. . நீயுமே ரொம்பவே மாறிட்ட தான் ஆனா அந்த முகமும் முட்டகண்ணும் மட்டும் மாறவேயில்ல. . ”,சற்றே இயல்பாய் கூறியிருந்தான்.

“பாத்தியா இன்னுமும் என்னை கிண்டல் பண்றத விடமாட்டியா நீ. . ஆமா பெர்மணென்டாவே தொழில் பார்த்துக்க வந்துட்டியா. . ”

“ம்ம் ஆமா 12 ஆவதுக்கு அப்பறமே இங்க வந்தாச்சு. . இதுதான் பிடிச்சுருக்கு…அதான். . ஆமா நீ என்ன பண்ற?”

“நானா நா எம்பிஏ முடிச்சேன் ஒரு அஞ்சு வருஷம் வேலைப் பார்த்தேன் அப்பறம் எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ கதை எழுதிட்டு இருக்கேன். . ”

“என்ன கதையா??எந்த மாதிரி. . ”

“குடும்ப நாவல் தான் தமிழ் இங்க்லீஷ்னு தனிப் புத்தகமாவும் வந்துருக்கு மேகசின்ஸ்க்கும் எழுதுவேன். . ”

“ஓ இந்த அரசிங்கிற பெயர்ல வருமே அதெல்லாம் உன்னோடதுதானா?”

“ம்ம் ஆமா. . பரவால்லையே புக்கெல்லாம் படிப்பியா?”

“நீ வேற அதுக்கெல்லாம் ஏது நேரம். . கடையில பாத்துருக்கேன். அப்போ எல்லாம் உன் நியாபகம் வரும் அதைவச்சு கேட்டேன். ஆமா உங்க அப்பா எப்படியிருக்காக?”

“இல்லஅமுதா அப்பா தவறிட்டாங்க. . இரண்டு வருஷம் ஆகுது. . ”

“ஏ என்ன சொல்ற. . எப்படி என்னாச்சு நீ இப்போ எங்க இருக்க கல்யாணம் குழந்தைங்க??”

“கல்யாணம் அதெல்லாம் நடந்தது குழந்தை இல்ல. . அவருக்கு கப்பல்ல வேலை. . நா இப்போ தனியா தான் இருக்கேன். . அப்பாவுக்கு சொந்தமான வீடு இங்க தென்காசில இருக்கு அங்க தான் தங்கிருக்கேன். . நம்ம ஊரை பத்தி கதை எழுதலாமேனு தான். . என்ன தான் சொல்லு நம்ம ஊரு நம்ம ஊரு தான். . ”

“ம்ம். . ”,அவள் எதையோ மறைப்பதாய் மனதிற்குள் உறுத்த ஆரம்பித்திருந்தது எழிலுக்கு. .

“ஆமா நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”

“ஹாங்ங் உனக்கு எப்படி??”

“ம்ம் அதான் உன் கடைல சின்ன பொண்ணுங்க எல்லாம் உன்னை ஹீரோ மாதிரி பாக்குறாங்களே. . ”

“அட அதெல்லாம் ஒண்ணுமில்ல. . கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல அதனால பண்ணிக்கல. . ”

“அதுசரி காசை மிச்சப்படுத்தி நேரா அறுதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஐடியால இருக்கியோ. . ”

“ம்ம் நீ கொஞ்சமும் மாறல. . அதே துடுக்குத்தனமான பேச்சு அப்படியே இருக்கு. . ”,எனும்போதே பணிப்பெண் ஜுஸை கொண்டுவந்து பவ்யமாய் வைத்துவிட்டு மிரண்டு விழித்தவாறே சென்றாள்.

“என்னடா ரொம்ப தான் மிரட்டி வச்சுருக்க போல இப்படி பயப்படுறாங்க. . ”

“ம்ம் உன்னளவு யாருக்கும் தைரியம் வர மாட்டேங்குது என்கிட்ட பேச நா என்ன பண்ண?”

“ம்ம் அவங்களுக்கெல்லாம் தெரில நீ அவ்ளோ வொர்த்தெல்லாம் இல்லைனு. . ”,என்றவள் சட்டென சிரித்துவிட அவனும் லேசாய் புன்னகைக்க முயன்றான்.

“ப்பா. . சிரிக்கவே காசு கேப்ப போலேயே. . சரி நா கிளம்புறேன். வந்து ரெண்டு நாள் தான் ஆகுது இன்னும் வீடெல்லாம் செட் ஆகனும். . வரட்டுமா. . ”

“எதுவும் உதவி வேணும்னா சொல்லு நா இங்க தான் இருப்பேன். . இந்தா என் நம்பர் இதுல இருக்கு எதுவானாலும் போன் பண்ணு. . பசங்க யாரையாவது அனுப்பி வைக்குறேன். . வீட்டுக்கு வாயேன். . எல்லாரும் உன்னை பார்த்தா சந்தோஷப்படுவாக. . ”

“கண்டிப்பா வரேன் டா. . கொஞ்சம் எல்லாம் ஒழுங்கு பண்ணிட்டு வரேன். அத்தை மாமாவெல்லாம் கேட்டதா சொல்லு. . வரட்டுமா. . ”

என்றவள் வெளியே வந்து தன் புடவைகளை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அமைதியாய் வாசல் வரைச் சென்று அனுப்பிவிட்டு உள்ளே வந்தவனை கணக்குப் பிள்ளை ஆச்சரியமாய் பார்த்தார்.

“யாரு தம்பி அவுக நீ இத்தனை தூரம் பேசி இப்போதேன் பாக்குறேன். . ”

“தெரிஞ்சவுகதேன் அண்ணே. . குடும்ப சிநேகிதருங்க. . சரி நா குடோன் வரை போய் முத்துவை பார்த்துட்டு வரேன். . அப்பா யாரும் கேட்டா சொல்லிருங்க. . ”,என வேகமாய் பைக்கை செலுத்தி குடோனை அடைந்தவன் வேகமாய் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவன் வந்த வேகத்தை பார்த்து பயந்தவனாய் எழுந்து அவனருகில் வந்த முத்து,”ஏலேய் எதுக்கு இம்புட்டு அவசரமா வர்றவேன்??அப்படி என்ன டே தலபோற காரியம். . ”

“மாமா அவளை பாத்தேன் டே. . ”

“யாரைலே சொல்லுத அவ னா எவ உன் முன்னாள் காதலியையா சொல்லுத”

சட்டென அவனை முறைத்தவன் பின்பு தலை குனிந்தவனாய்,”ஆமாலே அவளதான். . ”

“டேய் வீணா போனவனே என்னத்த சொல்லுத விவரமா சொல்லு. . ”

“நம்ம கடைக்கு வந்திருந்தா மாமா. . தென்காசில தான் இனி இருக்க போறாளாம். . என்னை அடையாளம் கண்டுபிடிச்ச உடனே யோசிக்காம தடிமாடுனு தான் மாமா கூப்பிட்டா. . அப்போ இருந்தே மனசு ஒரு நிலையில இருக்க மாட்டிக்குது. . ”

“உலகத்துலயே தடிமாடுனு கூப்டதெல்லாம் பெருமையா பேச உன்னால மட்டும்தேன் முடியும்லே. . சரி அதைவிடு எப்படியிருக்கா பேசினியா கல்யாணம் ஆயிருச்சா எத்தனை பிள்ளைக?”

“ஏம்ல ஏம்ல நீ இப்படியிருக்க நா சந்தோசமா இருந்தா உனக்கு பொறுக்காதா?”

“இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன். . இல்ல உன்னை மாறியே அவளும் கல்யாணமே பண்ணிக்கலையோ?”

“அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல வூட்டுக்காரரு கப்பல்ல இருக்காராம். . பிள்ளைக இல்ல. . அவ மட்டும் தான் இப்போதைக்கு இங்க வந்துருக்கா. . ”

“ம்ம் ஹப்பாடா. . இனியாவது ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்குற வழியை பாருலே. . ”

“ஏலேய் ஏன்டா ஏன்??நா எதைப்பத்தி பேசிட்டு இருக்கேன் நீ என்னத்த பேசுத. . போய் ஒழிஞ்சுரு. . உன்னை பார்க்க வந்தேன் பாரு என்ன சொல்லனும். . ”,என்றவன் எழுந்து வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

வாசலிலேயே அவனை மறித்த பாக்கியம்,”என்ன பேராண்டி சாப்பிடவே வரமாட்டான்னு சொன்னா உங்கம்மா. . போன வேகத்துல வந்துருக்க?”

“என் வீடு தான நா நினைச்ச நேரத்துக்கு வர கூடாதா?கிழவி வர வர ரொம்ப பண்ற நீ பாத்துக்குறேன் இரு. . ”,என வெளியே சாதாரணமாய் பேசினாலும் தரை நழுவுவதைப் போல் தோன்றிய தன் உணர்வை மறைத்து அறைக்குள் சென்று  கட்டிலில் விழுந்தான்.

பூமி தட்டாமாலை சுற்றியது அவனுக்கு. . அவள் முகமும் பேச்சும் மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. இப்படியே பல சிந்தனைகளில் இருந்தவனின் விழி அவனறியாமல் மூட அப்படியே வேறுலகத்தில் சஞ்சரிப்பதாய் உணர்ந்தான்.

கண்விழிக்க முயன்ற நேரம் சுத்தமாய் விழித் திறக்க முடியாதது போல் தோன்றியது அவனுக்கு. . இருந்தும் ஏதேதோ குரல்கள் அவனருகில் கேட்க கடினமாய் இமை திறக்க முயன்றான். வெற்றிச் செல்வி அவனருகிலேயே அமர்ந்திருந்தார்.

இரவு நேரம் தவிர அவன் அறையை எப்போதுமே உள் தாழ்ப்பாள் போட்டு வைக்கமாட்டான் காலையில் அவன் வந்துவிட்டதாய் பாக்கியம் கூற மதிய உணவிற்காக அவனை அழைத்து கதவை தட்டினார் வெற்றிச்செல்வி.

வெகு நேரமாய் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அவரே கதவை திறந்து உள்ளே பார்க்க நல்ல உறங்கிக் கொண்டிருந்தான் எழிலமுதன். அவன் இரவு சீக்கிரம் உறங்கச் சொல்லி கூறினாலே தூக்கம் வராத ரகம் எப்படி இப்படி உறங்குகிறான் என அருகில் வந்து நெற்றியை தொட்டவர் பதறிவிட்டார்.

காய்ச்சல் அனலாய் அடிக்க அவர் தொடும் உணர்வு கூட இன்றி அப்படி ஒரு கிறக்கத்தில் இருந்தான். அதன் பின்னான நிலையை கூற வேண்டுமா வீடே அல்லோகலப்பட்டது.

மருத்துவரை வரவழைத்து ஊசியை போட்டு அம்மா சித்திகள் ஒருபுறம் தங்கையும் பாட்டியும் ஒருபுறமென அவனை மாறி மாறி கைவைத்தியம் செய்து கவனிக்க மருந்தின் வீரியத்தில் குறைந்த காய்ச்சலால் இப்போது தான் கண்விழிக்கிறான்.

“ஏலே என்ன இப்படி பயமுறுத்திபுட்ட. . மலை மாதிரி இருக்குற பிள்ள இப்படி சோர்ந்து படுத்தத பாத்து இந்த கிழவிக்கு உசுரே போய்ருச்சுலே. . ”

“எப்படியா இருக்க எதாவது சாப்டுதியா?”

“எழிலு இந்தா இந்த கசாயத்தை கொஞ்ம் சாப்டு எந்த காய்ச்சலானாலும் ஓடிரும். . எழுந்துருய்யா. ”

மெதுவாய் சாய்ந்தவாறு அமர்ந்தவன் மலர் சித்தி கொடுத்த கசாயத்தை முகச் சுழிப்போடு குடித்து முடித்தான்.

“ஏட்டி அங்கயர்கண்ணி முதல் போய் கைநிறைய கல்உப்பும் மிளகா வத்தலும் எடுத்துட்டு வா. . புள்ளைக்கு சுத்தி போடனும். . ”

பாட்டி பேசி முடிப்பதற்குள் அண்ணணுக்காக அதை எடுத்து வர ஓடியிருந்தாள் அங்கயர்கண்ணி. அவனை உக்கார வைத்து பாக்கியம் திருஷ்டி சுத்தி அதை பின்கட்டு அடுப்பிற்குள் போட எடுத்துச் சென்றார்.

விஷயமறிந்து முத்து அவனைப் பார்க்க வந்திருந்தான்.

“என்ன பூ சித்தி மாப்பிள்ளைக்கு பயங்கர கவனிப்பு போல. . ”

“ஏலேய் எடுப்பட்டபையலே உன் கண்ல கொள்ளிகட்டைய எடூத்து வைக்க. . ஏற்கனவே புள்ள உடம்பு முடியாம இருக்கு பேசுத பேச்சை பாரு. . ஆளு வளர்ந்த அளவு அறிவு வளரவே இல்லலே. . ”

என்று திட்டியவாறே அவர் வெளியே செல்ல அவன் உடன் இருப்பதால் மற்றவர்களும் சற்று நேரம் கீழே சென்று வர எண்ணி வெளியே சென்றனர்.

“ஏலேய் எழிலமுதா உண்மையை சொல்லு அந்தபிள்ள அம்புட்டு கொடூரமா இருந்துதோ இப்படி ஜுரமே வந்துருக்கு??”

“டேய் வேணாம் பேச கூட ஆவியில்லாம கிடக்கேன். . போய்ரு. . ”

“பின்ன என்னவே யாருக்கும் அசராதவன் அந்த பிள்ளையை பாத்ததுக்கு இப்படி கிடந்தா வேற எப்படி கேக்க சொல்லுத. . ”

“தெரில மாமா. . ஒரு தடவையாவது பாத்துர மாட்டோமானு நினைச்ச பிள்ளையை இன்னைக்கு கண்ணுக்கு முன்னாடி பார்த்தப்போ சத்தியமா முடில மாமா. . அதுவும் இன்னொருத்தர் பொண்டாட்டியா. . நினைக்க முடிலலே. .

நெஞ்செல்லாம் அடைச்சு என்னவோ போல பண்ணிருச்சு. . காதல் தோல்வியா போச்சுனா அவுக அவுக பாதையிலேயே போய்ரணும்லே. . திரும்பவும் கண் முன்னே வாழறத பாக்குறதெல்லாம் கொடுமைலே. . ”

“சரி சரி இந்த நிலைமையில இன்னும் இதை பத்தி யோசிச்சு உடம்பை கெடுத்துக்காத டே. . உன் நல்ல மனசுக்கு அந்த ஆண்டவன் ஏன்தேன் இம்புட்டு சோதனையை கொடுக்குறானோ தெரில. . நீ படுத்து தூங்குல. . உடம்பு தான் முக்கியம். . ”

என அவனை மேலும் யோசிக்க விடாமல் உறங்கச் செய்தவன் தன் போனை நோண்டியவாறு அமர்ந்திருக்க எழிலின் போன் ஒலித்தது. அழைப்பில் விழித்து விடக்கூடாதென அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன் புது நம்பராய் இருக்கவும் யாரேனும் தொழில் சம்மந்தமாய் தான் இருக்கும் என எண்ணி அட்டெண்ட் செய்து காதில் வைத்தான்.

“ஹலோ. . சாரி அமுதா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா. . ”,என பெண்குரல் தயக்கமாய் ஒலித்தது.

“நா எழிலோட ப்ரெண்ட் முத்து நீங்க யாருங்க. . ”

“ஓ. . சாரி. . முத்து அண்ணா எப்படியிருக்கீங்க என்னை நியாபகம் இருக்கா பொழிலரசி. . ”

“ஹாங்ங் ஆஆஆ நியாபகம் இருக்குமா. . காலையில தான் எழிலு சொன்னான். . நா நல்லாயிருக்கேன். நீ எப்படிமா இருக்க. . ”

“நல்லாயிருக்கேன் ணா. . நீங்க ரெண்டுபேரும் இன்னுமும் ப்ரெண்ட்ஸா இருக்குறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. . அவன் அப்போயிருந்தே உங்ளை தவிர யார்ட்டையும் பேச மாட்டான் இல்ல. . ”

“ம்ம் ஆமா மா பரவால்ல இன்னும் என்னை நியாபகம் வச்சுருக்கியே. . ”

“ம்ம் அமுதனை நினைச்சாலே நீங்களும் நியாபகம் வருவீங்க கண்டிப்பா. . ஆமா அமுதன் இல்லையா?”

“அது அவனுக்கு உடம்பு முடிலம்மா. . நல்லாதான் இருந்தான் திடீர்னு நல்ல காய்ச்சல். . கண்ணுகூட தொறக்க முடியாம கிடக்கான். ”

“ஐயோ காலையிலே கடையில பாத்தப்போ நல்லாதான இருந்தான். . அப்போ தான் கார்ட் குடுத்தான் எதுவும் தேவைனா கால் பண்ணுனு. . இங்க மதியானத்துக்கு மேல கரண்ட் இல்ல எங்க வீட்ல மட்டும். . நானும் வரும்னு பார்த்தா வரவே இல்ல. . அக்கம் பக்கத்துலயும் யாரோடையும் இன்னும் அந்த அளவு பழக்கம் இல்ல அதான். . அவனை எழுப்ப வேணாம் உங்களுக்கு ஈபில யாரு நம்பரும் தெரியுமா இப்போ வந்து பார்ப்பாங்களா?”

“ஓ. . நா கடையில பசங்ககிட்ட சொல்லி ஆளை வரச்சொல்றேன் மா. . நீ ஒண்ணும் கவலபடாத. . ”

“ரொம்ப தேங்க்ஸ் ணா. . வச்சுட்றேன். . ”

போனை வைத்தவன் சில நொடிகள் ஏதோ சிந்தனையிலிருக்க பின் தன்னை தானே மீட்டெடுத்தவன் கடைக்கு அழைத்து விஷயத்தை கூறி ஆள் ஏற்பாடு செய்துவிட்டு போனை எழிலின் அருகில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

மறுநாள் காலை எழுந்தவன் மணியை பார்க்க பத்தை தாண்டியிருந்தது. தானா இப்படி தூங்கியிருக்கிறோம் எனுமளவு மனதின் களைப்பு பாரம் அனைத்தையும் தாண்டி அந்த உறக்கம் ஒருவித அமைதியை கொடுத்ததாகவே உணர்ந்தான்.

அறையை விட்டு வெளியே வந்தவன் சோம்பல் முறித்தவாறே வெளியே பார்வையை சுழற்ற வீட்டின் தெரு நுழைவாயிலில் பொழிலரசி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பார்த்தவனுக்கு அவனறியாமல் மனம் லேசாய் உணர்ந்தது. வேகமாய் அறைக்குள் புகுந்தவன் குளிப்பதற்காக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

இங்கு வீட்டு வாசலை அடைந்தவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க மலரொளி தான் வந்து எட்டிப் பார்த்தார். எளிமையான காட்டன் சுடிதாரில் மிதமான ஒப்பனையில் நின்றவளை கண்டவர் யாரென புரியாமல்,

“சொல்லுங்க யாரு வேணும். . ”

“என்ன மலரு அத்தை இப்படி மருமகளை மறந்துடீங்களே. . எப்படியிருக்கீங்க?”,எனும்போதே அங்கு வந்த பூம்பாவை அவரிடம்,

“யக்கா உங்களுக்கு இப்படி ஒரு மருமக இருக்கானு சொல்லவேயில்ல. . ”

“கூறுகெட்டதனமா பேசாம போய் அத்தையவோ அக்காவையோ கூட்டிட்டு வா போ. . ”

“எனக்கு உன்னை தெரியலையே மா. . யாரு நீ. . ”

“போங்க அத்த அப்போ என்னை கொஞ்சினதெல்லாம் சும்மா. . பாசமே இல்ல. . ”,என்றவாறே வராண்டாவில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

அதற்குள் வீட்டின் பெண்கள் படை அவளை சூழ்ந்து கொள்ள பாக்கியத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவள் வெற்றிச் செல்வியை கட்டிக் கொண்டாள்.

“அத்த எப்படியிருக்கீங்க. . ஆச்சி நல்லாயிருக்கீங்களா?”

“ஆத்தா எல்லாரும் நல்லாயிருக்கோம் முதல்ல நீ யாருனு சொல்லு. . ”

“ம்ம் அப்போ எல்லாருமே என்னை மறந்துடீங்க ஆனா அப்போ என்ன சொன்னீங்க நீ தான் ஆத்தா எங்க வீட்டு குலசாமி குலவிளக்குனு நல்லா அடிச்சு விட்டீங்க இல்ல. . ”

“ஏலே பொழிலு!!!”,சட்டென வெற்றிச் செல்வி அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

“அத்தே நம்ம ரேஷன் ஆபீசர் மக நம்ம பொழிலரசி. . ”

“அட கழுத நீயா. . எம்புட்டு வளர்ந்துட்ட. . ராணியாட்டம் இருக்க போ. . இப்போதேன் எங்களையெல்லாம் பாக்க வழி தெரிஞ்சுதோ?”

“அப்படியெல்லாம் இல்ல ஆச்சி படிப்பு வேலைனு அப்படியே போயிருச்சு  வருஷமெல்லாம். . ”

“உங்கப்பா எப்படி இருக்காக?”

“ம்ம் அதை எங்கம்மாட்ட தான் கேட்கனும் ரெண்டு பேரும் மேலே ஜாலியா டூயட் பாடுவாங்களா இருக்கும். . ”

“என்னட்டீ சொல்லுத எப்போ எப்படி?”

“அது ஆச்சு இரண்டு வருசம் அம்மாவ நினைச்சு நினைச்சு ஒரே குடி தன் உடம்பை தானே கெடுத்துகிட்டாரு. . அதை விடுங்க மாமா எல்லாரும் எப்படியிருக்காங்க. . தாத்தாவ எங்க காணும்?”

“அப்போ இருந்தே இந்த தைரியந்தேன் உனக்கு இன்னும் அழகே…நாங்கல்லாம் இருக்கோம் சந்தோசமா இருட்டீ. . தாத்தாதான இதோ வந்துட்டாக பாரு. . ”

“தாத்தா எப்படியிருக்கீங்க நா தான் பொழிலரசி ரேசன் ஆபீசர் மக. . ”என அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினாள்.

“ஆங்ங் உன் பெயரேச் சொன்னாலே போதும் பொண்ணே. . இந்த கிழவன் மூச்சு இருக்குறவர மறக்க மாட்டேன். . நல்லாயிருக்கியா. . ”

“நல்லாயிருக்கேன் தாத்தா. ”

“நல்லது நல்லது. . வந்த புள்ளைக்கு எதாவது சாப்பிட குடுத்தீயளா??பேச ஆள் கெடச்சா போதுமே. . ”,என்றவாறே உள்ளே சென்றார்.

பூம்பாவை அவளுக்கு காபி கலந்து எடுத்துவரச் செல்ல பாக்கியம் அவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.

“என்னதான் சொல்லு தாத்தாக்கு நீ னா ஒரு தனி பிரியம்தேன். . அப்பப்போ உன்னைபத்தி பேசுவாரு. . ”

“அங்ங் நம்பிட்டேன் நம்பிட்டேன். . அதனால தான் என்ன பர்த்தவுடனே அப்படியே வந்து கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துட்டீங்களோ?”

“ஏட்டீ நாங்கெல்லாம் என்ன இளவட்டமா கண்ணு முன்னாடி தினம் பாக்குறவளையே சட்டுனு மறந்துருது இதுல கிட்டதட்ட 20 வருசம் முன்னாடி போய்ட்டு இப்போ வந்து பேச்சை பாரு. . ”

அவர்களின் உரையாடலைக் கேட்டவாறே எழில் படியிலிறங்கி வர அந்த சத்தத்தில் அவர்களின் உரையாடல் நின்றது. அவனைப் பார்த்து விழி விரித்தவள்,

“என்னடா உனக்கு காய்ச்சல் கண்ணு தொறக்க முடியாம இருக்கனு முத்து அண்ணன் சொன்னாங்க. . நீ என்னனா இப்படி ரெடியாகி வந்து நிக்குற?”

அவளது பேச்சில் ஒரு நொடி அந்த இடமே அமைதியானது. என்ன தான் அவள் பால்ய வயது தோழி எனினும் இப்போது எழிலை இப்படி அவள் அழைத்தது அனைவருக்குமே ஆச்சரியம் தான். அதைவிட அதிசயமாய் அதற்கு எழில் ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தது தான்.

பொதுவாய் அவன் இந்த வட்ட மேசை மாநாடுகளில் எல்லாம் தலையிடவே மாட்டான். அதுவும் பெண்கள் அணியில் மூக்கை நுழைத்ததேயில்லை. விருந்தினர் வந்தால்கூட இரண்டொரு நிமிடம் நின்றவாறே பேசிவிட்டு கிளம்பிவிடுவான்.

உள்ளிருந்து காபியோடு வந்த பூம்பாவை அதிர்ச்சியில் மயங்காத குறைதான். ”யக்கா என்னக்கா நடக்குது இங்க. . நம்ம எழிலா இது??”

“இருட்டீ எனக்கும் அதே சந்தேகம்தேன். . ”

“பொழிலை ஏற்கனவே பார்த்துட்டியா நீ?”

“ம்ம் நேத்து கடையில பார்த்தேன் அப்பறம் காய்ச்சல்ல படுத்ததுல உங்ககிட்ட எல்லாம் சொல்ல மறந்துட்டேன்.

ஆமா முத்துவ நீ எங்க பார்த்த??”

“இல்ல நேத்து மதியானத்துக்கு மேலயே கரண்ட் இல்ல அதான் ஈபி ஆளுங்க நம்பர் வேணும்னு கேட்க உனக்கு போன் பண்ணேன் அப்போ அண்ணா தான் எடுத்தாங்க. . அப்போதான் உனக்கு காய்ச்சல்னு சொன்னாங்க. . இப்போ எப்படியிருக்க?”

“ம்ம் பரவால்ல. . ”

“ம்ம் இன்னும் ரெஸ்ட் எடுக்காம அதுக்குள்ள ஏன் வேலைக்கு கிளம்பிட்ட அதான் மாமா எல்லாரும் பாத்துப்பாங்க இல்ல. . ”

“ம்ம் கடைக்கெல்லாம் போல படுத்தே இருந்தது ஒரு மாதிரி இருந்தது அதான் சும்மா கீழே வந்தேன். . ”

“ம்ம் அத்த என்ன டிபன் இன்னைக்கு ரொம்ப பசிக்குது. . ”

“அட கழுத இதை வந்ததவுடனே சொல்றதுக்கு என்ன. . வா மொதல்ல சாப்டலாம். . எய்யா எழிலு நீயும் சாப்பிடுறியா?உனக்கு பிடிச்ச காரச் சட்னி அரைச்சுருக்கேன். . ”

“ம்ம் சரிம்மா வாய்க்கு நல்லாவே இல்ல ஒரே ஒரு தோசை வேணா வை. . ”

என்றவாறு அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர். பாக்கியம் அவளோடு பேசிக் கொண்டிருக்க அவன் மொபைலை நோண்டுவதை போல் அவளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏட்டீ இங்கயிருந்து அம்புட்டு அவசரமா கிளம்பி எங்க போனீக. . உங்க அப்பாரு எப்படி வளர்த்தாரு உன்னை. . ”

“ம்ம் இங்க இருந்து சென்னைக்கு போய்ட்டோம் ஆச்சி. . அங்க தான் படிச்சேன். . அவரு எங்க என்னை வளர்த்தாரு நா தான் அவரை பார்த்துக்கிட்டேன். அம்மா இல்லாம ரொம்பவே தவிச்சு போய்ட்டாரு. . என்ன இருந்தாலும் காதல் ஜோடிகள் இல்லையா. . எம்பிஏ முடிச்சுட்டு ஐடில எச் ஆரா வேலைபாத்தேன். . ”

“ஓ இப்போ வேலையை விட்டுட்டியா? “

“ம்ம் ஆச்சி நம்ம கண்ணி படிக்குமே இந்த நாவல் புக்கெல்லாம் அது மாதிரி எழுதுறாளாம். . அரசினு போட்டு நம்ம வீட்ல கூட ரெண்டு மூணு புக்கு கெடக்குமே. . ”

“அட பரவால்லையே. . நம்ம வீட்டு கடைக்குட்டி தான் கதை பைத்தியம். . அவ மட்டும் உன்னை பார்த்தா விடவே மாட்டா. . ஆமா எல்லாம் சொன்னியே உன் வீட்டுகாரரு என்ன பண்றாரு?”

“அவருக்கு கப்பல் வேலை இப்போ எங்க சுத்திட்டு இருக்காறோ யாருக்குத் தெரியும். . ”

என்றவள் வேகமாய் தோசையை உண்ண ஆரம்பித்தாள். ”அத்தே செம டேஸ்ட் நம்ம ஊரு சமையலே தனி தான். . ”

எழிலுக்கு ஏனோ அவள் தன் திருமண வாழ்வை பற்றி கூற விரும்பாததைப் போன்றே தோன்றியது. எதாவது பிரச்சனையாய் இருக்குமோ. . கணவன் மாமியார் மாமனார் கொடுமையாய் இருக்குமோ என தனக்குள்ளே சிந்தனையில் உழன்றான். எதுவாயினும் தன் பொழிலரசி வாழ்வில் எப்போதுமே சந்தோஷமாய் இருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டான்.