“குறிஞ்சி – தலைவி கூற்று (குறுந்தொகை-3)
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பொருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
என்பது தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.
-தேவகுலத்தார்”
அவன் அவளுக்காக வெளியில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொண்டு அவளை அடையவேண்டும் என்று விரும்பிய தோழி அவனது களவொழுக்கம் பற்றி இழிவாகப் பெசுகிறாள். தலைவி அவ்வாறு பேசக்கூடாது என்று கூறும் செய்தி இது; நாடனுக்கும் எனக்கும் உள்ள நட்பு நிலத்தைக் காட்டிலும் மிகுதியான நீளஅகலம் கொண்டது. வானைக் காட்டிலும் உயர்ந்தது. கடல் நீரைக் காட்டிலும் ஆழமானது. மலைநீரைக் காட்டிலும் தூய்மையானது. எனவே பழிக்காதே. மலைத் தேனீ குறிஞ்சிப் பூவில் தேனை எடுத்துக்கொண்டுபோய் என்ன செய்யும்? கூடுதானே கட்டும். (அதுபோல அவன் என்னைத் தன் இல்லத்துக்குக் கொண்டுசெல்வான்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு,
அந்த பள்ளிக்கூட மைதானத்தில் புழுதிபரக்க மண்ணில் உருண்டு இரு சிறுவர்கள் சண்டையிட்டு கட்டி உருண்டு கொண்டிருந்தனர்.
“ஏலேய் எழிலமுதா எம்புட்டு தைரியமிருந்தா என்னை பத்தி டீச்சர்கிட்ட போட்டு கொடுத்துருப்ப. . ”
“ம்ம் நா ஒண்ணும் இல்லாது பொல்லாதத சொல்லலியே உண்மைய தானே சொன்னேன். . நீ பரிட்சையில காப்பி அடிப்ப அத நா சொன்னா தப்பா. . அதுக்காக என் மேலயே கையை வைப்பியா நீயி. . ”
சுற்றி நின்று ஆறெழு பையன்கள் சண்டையை வேடிக்கை பார்க்க யாரும் அவர்களை பிரித்து விடுவதாய் தெரியவில்லை.
சிறிது நிமிடத்தில் திடீரென சிறு சிறு கல்லாய் இருவர் மீதும் விழத் தொடங்க சண்டையை நிறுத்தி அக்கம்பக்கம் திரும்பி பார்த்து எழுந்து நின்றனர்.
யூனிபார்ம் சுடிதாரோடு இரட்டை ஜடையை மடித்துக் கட்டி அதில் கனகாம்பரத்தை சுற்றியவாறு எழிலின் இடுப்பிற்கு சற்றே அதிகமாய் வளர்ந்த பெண் ஒருத்தி தான் கற்களை அவர்கள் மேல் போட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏ பிள்ள எதுக்கு என் மேல கல்ல தூக்கி போடுற?”என்று எழிலமுதன் அவளிடம் சண்டைக்கு தயாராக மற்றவன் அவளை முறைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தான்.
“அங்ங்ங் தடிமாடு மாதிரி இருந்துட்டு இப்படி இத்தன பேரு பாக்க கட்டி உருளுறியே வேற என்ன பண்ணுவாங்களாம்?அதை இத்தனை தடிமாடுங்க சுத்தி நின்னு வேடிக்கை வேற பாக்குதுங்க. . ”
“ஏய் யாரை பாத்து தடிமாடுனு சொல்லுத நல்ல குள்ள கத்திரிக்காயா இருந்துட்டு வாயப் பாரு!”
“யாரு குள்ள கத்ரிக்கா நீ பனைமரத்துல பாதி உயரம் வளர்ந்துட்டு என்ன சொல்றியா?போங்கடா போய் படிக்குற பொழப்பை பாருங்க. . ”
“என்னது டா வா ஏய் குள்ளச்சி உன்னை கவனிச்சுக்குறேன் இரு. . ”எனும்போதே பள்ளி மணி அடிக்க கூட்டம் ஒரு வழியாய் கலைந்தது. அனைவரும் அங்கிருந்து கிளம்ப எழில் தன் புத்ககப்பை வைத்த கல்பெஞ்சை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவனோடே வந்தவள் குதித்து ஏறி பெஞ்சில் அமர்ந்தாள். ”ஏ குள்ளச்சி எத்னாப்பு படிக்க நீயி. . இதுக்கு முன்னாடி நா உன்னைய இங்க பார்த்ததில்லையே?”
“ம்ம் இப்போ தான் இந்த ஊருக்கு வந்துருக்கோம் எட்டாவது படிக்கேன். . ”
“ஓ ஊருக்கே புதுசா இதுல என்கிட்டயே வம்பு வளக்குற நீ. . தைரியம்தேன். . ”
“நீ தப்பு பண்ண நா அதை தட்டி கேட்டேன். . இதுல என்ன வம்பு??”
“ம்ம் தேவைதான். . ஆமா வீட்டுக்கு போகாம இங்கன ஏன் உக்காந்துருக்க…”
“எங்கப்பா வருவாரு கூட்டிட்டு போக நீ போய் உன் பொழப்பை பாரு போ. . ”
“ம்ம் போகாம உனக்கு காவல் காக்கவா போறேன். . போட்டீ குள்ளச்சி. . ”,என்றவன் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அடுத்து ஒரு வாரம் கழித்து வந்த கோவில் திருவிழாவில் ஊரே களைகட்டியிருக்க எழிலமுதன் தன் குடும்பத்தோடு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அந்த குள்ள கத்திரிக்கா தன் தாய் தந்தையோடு அவர்கள் அருகில் வந்தாள்.
“ஐயா எப்படியிருக்கீக?”,என அவளின் தந்தை எழிலின் தாத்தாவிடம் பேசியபடி நிற்க எழில் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“நல்லாயிருக்கேன். . நீங்க தான நம்ம புது ரேசன் ஆபிஸரு. . ஊரெல்லாம் பழகிடுச்சா?”
“ம் ஆமா யா. . பழகுறதுக்கு என்ன எங்க தாத்தா காலத்துல எல்லாம் இங்க தான் இருந்துருக்காக. . என் சின்ன வயசுல. . அப்பறம் படிப்பு வேலைனு அப்படியே போயாச்சு. . என்ன இருந்தாலும் நானும் இந்த ஊர்காரன்தேன். . ”
“அடடே அப்படியா. . நல்லது நல்லது. . இது யாரு உம்ம பொண்ணா?”
“ம் ஆமா யா. . பேரு பொழிலரசி தம்பி படிக்குற ஸ்கூல்ல தான் படிக்கா. . இது என் வீட்டம்மா. . ”
“ஓ நல்லது நல்லது. . ஏலேய் எழிலு நம்ம ஊருக்கு புதுசுலே பிள்ளைய பாத்துக்கோ என்ன?”
“ம்ம் அவளுக்கு இருக்குற வாய்க்கு நா என்னத்த பாக்கணும். . ஊரேயே கட்டி மேய்ப்பா. . ”,என வாய்க்குள் முனகியவன் தலையசைப்போடு நிறுத்திக் கொண்டான்.
அதற்குள் முத்து அங்கு வர அவனோடு ஓடிவிட்டான். பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க பொழுது போகாதவளாய் தந்தையிடம் காசை வாங்கிக் கொண்டு ஐஸ் வாங்கி வருவதாய் கூறிச் சென்றாள்.
ஜனக்கூட்டம் அதிகமாய் இருக்க கூட்டத்தில் நெருக்கியடித்து ஐஸ் வண்டியிடம் வந்தவள் அதனைச் சுற்றி கூட்டமாய் இருக்க தயங்கியபடியே நின்றிருந்தாள்.
மேலே வந்து விழாத குறையாய் ஆண்கள் அங்குமிங்குமாய் போய்க் கொண்டிருந்தனர். சட்டென அவளருகில் வந்த முத்து என்னவென கேட்டு அவளுக்கு ஐஸை வாங்கிக் கொடுத்து அங்கிருந்து அவளை நகரச் சொன்னான்.
சற்று தூரத்தில் நின்ற எழிலமுதன் கோபமாய் அவளை பார்த்தவாறு,”ஏட்டீ குள்ளச்சி அறிவிருக்கா சல்லிப் பயலுகளா நிக்குறானுகளே அங்க போய் என்னத்த பண்ணுத. . கூட்டமா இருந்தா வர வேண்டியதுதான. . ஏன் இன்னைக்கே ஐஸ் தின்னு ஆகணுமா உனக்கு. . ”
“ஏ தடிமாடு ரொம்ப ஓவரா பேசுற என்ன நினைச்சுட்டு இருக்க. . என்னவோ உன் காசுல வாங்கி கொடுத்தமாதிரி ரொம்பதேன் அலுத்துக்குற. . ”
“ம்ம் வாய் மட்டும் இல்லைனா உன்னையெல்லாம் நாய் தூக்கிட்டு போய்டும்ட்டீ. . பே. . போய் உங்க அப்பாவோட நில்லு. . ”
அவனை வாய்க்குள் வசை பாடியவாறே தந்தையோடு சென்று நின்று கொண்டாள்.
இப்படியாய் பார்க்கும் பொழுதுகளெல்லாம் சண்டைகோழிகளாய் சிலுப்பிக் கொண்டுதான் திரிந்தனர் இருவரும்.
அவன் சைக்கிளின் காத்தை பிடுங்கி விடுவதும் செயினை கழட்டி விடுவதும் இவளுக்கு வேலையாக இருக்க ரப்பர் பல்லியை அவள் பையில் வைத்து பயமுறுத்துவதும் அவள் ஜடை ரிப்பனை அவிழ்த்து விடுவதுமே இவனுக்கு வேலையாய் இருந்தது.
எழிலமுதனை எதிர்த்து நிற்கும் ஒரே ஆள் அவள் தான் எனுமளவு அவனை உண்டு இல்லை என ஆக்கினாள். முத்துவுக்குமே அதான் ஆச்சரியமே அவனுக்கு முத்துவை தவிர நண்பனென்று ஒருவரும் கிடையாது. யாரிடமும் தேவையில்லாமல் பேச்சு வைத்துக் கொள்ளவும் மாட்டான். அப்படியிருக்க இவளிடம் வழிய சென்று வம்பு செய்வதை பார்த்தவன் அவனிடமே கேட்டான்.
“என்ன எழிலு. . அந்த பிள்ளையோட எப்போ பாத்தாலும் மல்லுக்கு நிக்கியே. . ”
“ம்ம் ஆமாலே ஏன்னு தெரில அவகிட்ட வம்பிழுக்காம ஒரு நாள் முடிய மாட்டேங்குதுலே. . நா கூட நினைச்சுப்பேன் இனி அவள பாத்தா பேசாம போணும்னு. . ஆனா அந்த குள்ளச்சி சும்மா இருக்க மாட்றாலே. . ”
“என்னவோ சொல்ற. . பாத்துலே வாய்க்கா தகராறு ஆகாம இருந்தா சரிதேன். . ”
இப்படியாய் இரண்டு வருடங்கள் ஓடிவிட இப்போது எழிலமுதன் பன்னிராவதும் பொழிலரசி பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.
எழிலின் தாத்தா மகேந்திரநாதனின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். மகேந்திரநாதனின் தாய்தான் மூத்த தாரம். இன்னொருவரை திருமணம் செய்ததை குடும்பத்திடம் மறைத்து அவருக்கு குழந்தையும் பிறந்துவிட அதன்பின் அவர் உரிமை போராட்டம் நடத்தி வீட்டிற்கு விஷயம் தெரிந்துவிட்டது.
ஆனால் மகேந்திநாதனின் தாயால் தன் கணவரின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் உயிரே போனாலும் அந்த குடும்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிவிட புகைச்சலாய் ஆரம்பித்த சண்டை குடும்ப பகையாகவே மாறிவிட்டது. ஊரறிய அது தன் குடும்பம் என அறிவித்து விட்டாலும் மகேந்திர நாதனின் தாய் அவர்களை எந்த சூழலும் நெருங்க விட்டதே இல்லை.
அதிலும் அவரது தந்தை இறந்த சமயம் அந்த குடும்பத்தை அளவுக்கு அதிகமாகவே கேவலப்படுத்தி விட்டார்.
அதிலிருந்து வன்மம் மட்டுமே இரு குடும்பத்துக்கும். . தலையெழுத்தேவென ஒரு சிறு தொகையை அந்த குடும்பத்துக்கு கொடுத்து அதன்பின் தன் வம்சத்திற்கும் இந்த குடும்பத்திற்கும் சம்மந்தமே கிடையாது என கறாராய் கூறிவிட்டார்.
இவையனைத்தும் மகேந்திரநாதனின் சிறு வயதில் நடந்தசம்பவங்கள். அப்போது அவர் சிற்றன்னைக்கு ஒரு மகன் பூபதிநாதன் இவரை விட இரண்டு வயது சிறியவர். அவர்கள் இருவருமே அதை பெரிய பிரச்சனை ஆக்காமல் அப்படியே விட அடுத்த தலைமுறையான பூபதிநாதனின் மகனுக்கும் மகளுக்கும் இந்த குடும்பத்தின் மீது அப்படியாய் ஒரு கோபம்.
வசதியில் இவர்கள் அளவு இல்லை எனினும் ஓரளவு நல்ல வருமானம் கொண்ட குடும்பம் தான். இருந்தும் பூபதிநாதனின் மகன் சாமிக்கு எப்படியாவது இவர்களின் சொத்தை பறித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாய் இருந்தது.
அதற்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து மகேந்திரநாதனின் குடும்பத்தின் நிம்மதியை குலைக்க அத்தனை வேலையையும் செய்ய துணிந்தார்.
அதன்படி மகேந்திரநாதனின் மூத்த பேரனான எழிலமுதனை கடத்தி அவர்களிடம் சரிபாதி சொத்தை எழுதி தரச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.
அப்படி வகுத்த திட்டம் சரியான நாளுக்காக காத்திருந்து எழிலமுதனின் பதினாறாவது வயதில் ஒரு நாள் செயல்படுத்தப்பட்டது.
அன்று பள்ளி முடியும் வேளையில் ஒரு சிறுவன் எழிலமுதனிடம் வந்து பூபதிநாதனின் மகன் அவனது தாத்தாவை பம்புசெட் அருகிலுள்ள சிறிய மோட்டார் அறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் தன் தந்தை யாருடனோ அதைப் பற்றி பேசியபோது கேட்டு ஓடிவந்து அவனிடம் தெரிவிப்பதாகவும் கூறினான்.
தாத்தா என்றவுடனேயே எதைபற்றியும் யோசிக்காமல் அவன் கூறிய இடத்திற்கு எழில் விரைய மாலை மங்கும் நேரத்தில் அந்த பகுதியில் ஆள்நடமாட்டமே இல்லாமல் இருந்தது. மோட்டார் அறையை சென்று பார்த்தவனுக்கு அங்கு யாருமில்லை என்பது புரிய சட்டென ஏதோ ஆபத்து என கணித்து பின் திரும்பி ஓடுவதற்குள் மூக்கு ஏதையோ உணர்ந்து மூர்ச்சையாக பெரிய கோணிக்குள் போட்டு அவனை பின்னிருந்து அமுக்கியிருந்தனர்.
மூட்டைக்குள் நெளிந்தவனை திமிறவிடாமல் இருவராய் சேர்ந்து தூக்கி அந்த வேனிற்குள் போட்டு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் யாரும் வரமாட்டார்கள் என முடிவு செய்து ரேஷன் பொருட்கள் வைக்கும் குடோன் வாட்ச் மேனிற்கு காசு கொடுத்து சரிகட்டி குடோன் சாவியை வாங்கி அங்கு மூட்டையோடு மூட்டையாக அவனை போட்டு வாய் மற்றும் கை கால்களை கட்டி மூட்டையை லேசாய் திறந்துவிட்டுச் சென்றனர்.
அதற்குள் அவனை காணவில்லை எனும் செய்தி காட்டுத் தீயாய் பரவ குடும்பமே ஆளுக்கொரு புறமாய் தேட ஆரம்பித்தது. இதற்கிடையில் பூபபதிநாதனின் மகன் அதியமானிற்கு அழைத்து தன் கோரிக்கையை நிறைவேற்றினால் ஒழிய மகனை கண்ணில் காட்டமாட்டேன் எனக் கூற அவரும் மகேந்திரநாதாதனும் கொத்தித்துவிட்டனர்.
இரண்டில் ஒன்று பார்ப்பதாய் கூறி அவர்கள் சண்டைக்கு தயாராக வீட்டுப் பெண்கள் தான் அழுது ஆர்பாட்டம் செய்து பிள்ளையை பத்திரமாய் முதலில் மீட்கும் வழியை பார்க்க கூறினர்.
விஷயத்தை வெளியே கூறினால் எழிலை எதாவது செய்துவிடுவானோ என பயந்து அவன் கேட்டதற்கு ஒத்துக் கொண்டனர். மறுநாள் காலை பத்திரத்தோடு வருவதாகவும் எழிலை அனுப்பிவிடுமாறும் கூறினர்.
ஆனால் பத்திரம் கையில் வராமல் பையனை அனுப்ப முடியாது என திடமாய் மறுத்துவிட்டான்.
இந்த நிலையில் தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு அந்த வழியாய் வீடு திரும்பிய பொழிலரசி குடோன் வாசலில் காவலாளி படுத்திருப்பதையும் குடோனிற்குள்ளே விளக்கு வெளிச்சம் தெரிவதையும் கண்டு தன் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கி அவரருகில் வந்தாள்.
பக்கத்தில் வந்தவளுக்கு குப்பென சாராய நாத்தம் அடிக்க மூக்கை மூடிக் கொண்டவள் அவரிடமிருந்த தடியை எடுத்து அவரை எழுப்ப முயன்றாள். தலைக்கேறிய போதையால் அசைவின்றி கிடக்க அவரது இடுப்பிலிருந்த சாவிக் கொத்து கண்ணில் பட்டது.
அந்த கம்பை கொண்டு அதை நகர்த்தி கீழே தள்ளியவள் கதவை திறந்து உள்ளே சென்றாள். விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் கதவை பூட்ட வந்த நேரம் ஏதோ முனகல் சத்தம் கேட்பது போல் தோன்றியது.
என்ன இருந்தாலும் 14 வயது பெண்ணுக்கு அதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ளும் தைரியம் வரவில்லை. கதவை பூட்டிவிட்டு வேகமாய் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தவள் மறுபடியும் கதவை நெருங்கும் போது மீண்டும் சத்தம் அதிகரிக்க கையிலிருந்த தடியை இறுக்கிப் பிடித்தவாறு உள்ளே மெதுவாய்ச் சென்றாள்.
மீண்டும் விளக்கை ஒளிரவிட்டவள் ஒவ்வொரு மூட்டை இடுகலிலும் பார்வையை சுழற்ற அறையின் கடைசிப் பகுதியில் இருந்த அந்த மூட்டையிலிருந்து வந்த சிறு அசைவில் ஒரு நொடி இதயமே நின்றுவிட்டது அவளுக்கு.
யாருக்கோ ஆபத்து என்பது மட்டும் மூளையை எட்ட முன்னும் பின்னும் பார்த்தவாறே அதனருகில் சென்றவள் தடியை வைத்து லேசாய் மூட்டையின் மேல்பகுதியை விலக்கினாள்.
பின்பு சற்றே மனதை திடப்படுத்தியவளாய் அருகில் சென்று மூட்டையை விரித்துப் பார்க்க எழிமுதன் வாய் கட்டப்பட்ட நிலையில் திமிறிக் கொண்டிருந்தான்.
“ஏ தடிமாடு நீயா!!!!”,என்றவள் அவசரமாய் கோணியை கீழிறக்கி அவனை வெளியே இழுத்து வாய் மற்றும் கை கட்டுகளை அவிழ்த்துவிட்டாள். பயங்கரமாய் இருமியவன் மூச்சு விடுவதற்கு திணற ஆதரவாய் அவன் முதுகை நீவி விட்டவள்,
“உன்னை யாருடா இப்படி பண்ணது?பனைமரம் மாதிரி வளர்ந்துருக்கல அறிவு வேணாமா யாராவது எதாவது சொன்னா நம்பிட்டு வந்துருவியா?”,என என்ன நடந்திருக்கும் என்பதை சரியாய் கணித்தவள் அவன் உள்ளங்காலை நன்கு தேய்த்துவிட ஆரம்பித்தாள்.
அவன் பேசுவதற்கு கூட திறன் இல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.
“ரொம்பநேரம் இங்க இருக்காத உன்ன இங்க வச்சுட்டு போனவனுங்க வந்தாலும் வந்துர போறாங்க. . போ கிளம்பு “,என அவளை எழுப்பி நிற்க வைத்தாள்.
அதற்குள் கடத்தியவர்கள் அங்கு வந்துவிட அவனை வேகமாய் துரத்தினாள்.
“டேய் தடிமாடு ஓடு எப்படியாவது தப்பிச்சுரு என்ன நா அதுகுள்ள அக்கம் பக்கத்துல குரல் கொடுக்குறேன்”,என்றவாறே அவனை முன்னே விட்டு பின்னே வந்தவள் சரியாய் ஒருவனின் கையில் சிக்கிக் கொள்ள அவர்களைத் தனியாய் சமாளிப்பது கடினம் என உணர்ந்தவன் சட்டென யோசித்து அங்கிருந்த அத்தனை வீட்டு கதவையும் வேக வேகமாய் தட்டிவிட்டு தன்னை துரத்தியவனிடமிருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்தான்.
அனைத்து வீட்டு விளக்குகளும் ஒளிரத் தொடங்க தாம் தப்பித்தால் போதுமென அவனை கடத்தியவர்கள் அங்கிருந்து சிட்டாய் பறந்தனர். அடுத்த ஒரு மணி நேரம் அந்த இடமே களேபரமாய் இருக்க அதியமான் மகேந்திரநாதனோடு அங்கு வந்து எழிலை அழைத்துச் சென்றார். பொழிலரசி எத்தனையோ மறுத்தும் அவளையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.
வீட்டில் அவனை கண்டபின்பு தான் அனைவருக்கும் போன உயிர் திரும்பியதாய் உணர்ந்தனர். பொழிலரசிக்கு மாறி மாறி அனைவரும் நன்றியை கூறி இருவருக்கும் சாப்பிட உணவு பரிமாறினர்.
“ஏம்மா இத்தனை களேபரத்துல உங்கப்பாவ காணுமே எங்க?”என அதியமான் அவளிடம் விசாரித்தார்.
“அப்பா ஒரு கல்யாணத்துக்காக ஊருக்கு போய்ருக்காங்க. . அம்மாக்கு உடம்பு முடில அதனால தான் நா போகல மாமா. . ”
“பொம்பள பிள்ளையா இருந்தாலும் எம்புட்டு தைரியமா இருக்க. . இப்படிதான் டே இருக்கணும். . உன் இந்த உதவிய எங்க குடும்பமே சாகுற வர மறக்கமாட்டோம்ட்டீ”,என பாக்கியம் கண்கலங்கி அவளை ஆசீர்வதித்தார்.
“சரி ஆச்சி ரொம்ப நேரம் அச்சு அம்மா என்ன காணாம ரொம்ப பயந்துருப்பாங்க நா கிளம்புறேன். . ”
“இரும்மா நானே கொண்டுபோய் விடுதேன். . ஒரு அஞ்சு நிமிஷம் பொறு. . ”,என்றவாறு அதியன் உள்ளே சென்றார்.
அனைவரும் ஒவ்வொரு புறம் நகர கிடைத்த நிமிடத்தில் எழில் அவளிடம்,
“குள்ள கத்திரிக்கா ரொம்ப தேங்க்ஸு. . ”
“ம்ம் நீதான் உள்ள இருக்கனு தெரிஞ்சுருந்தா தொறக்காமயே போயிருப்பேன். உன் நல்ல நேரம் பிழைச்சுகிட்ட”,என அவனை வெறுப்பேத்தி விட அவனோ பதிலுக்கு ஒன்றும் கூறாமல் சிரிப்போடு நகர்ந்துவிட்டான்.
அவனின் பொழிலரசி அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நாள். மூட்டையை பிரித்த நொடி கண்ட அவள் முகம் ஏனோ சாவின் விளிம்பில் நின்றவனுக்கு வாழ்வதற்கான பாதையை கண்ட மாதிரியான ஒரு நிம்மதி. . அதை காதல் என்றெல்லாம் உணரவில்லை அதே நேரம் வாழ்வில் தனக்கான ஒரு பெண் என்றால் அது இவள் மட்டும் தான் என பதிய வைத்துக் கொண்டான் 16 வயதான எழிலமுதன்.
அதன்பின் பூபதிநாதனின் மகன் சாமி மேல் ஆள்கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவனை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்ந்தார் மகேந்திரநாதன்.
அந்த வருடத்தின் அடுத்து வந்த நாட்கள் முழுவதும் எழிலமுதனுக்கு தொடங்கி முடிந்தது பொழிரசியின் முன்பே. அவளறியாமல் பல நேரங்களில் அவளை ரசிப்பான்.
இருந்தும் எந்த விதத்திலும் அவளது மனதை சலனப்படுத்திவிட கூடாது என தன் எண்ணங்கள் அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.
நாட்கள் மாதங்களாய் உருண்டோட சட்டென ஒரு நாள் அவன் வீட்டிற்கு தகவல் வந்தது பொழிலரசியின் தாய் இறந்துவிட்டதாய்.
எழிலால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் எப்படி இந்த இழப்பை தாங்கிக் கொள்வாள். அழுது கரைவளோ அதிர்ச்சியில் உறைந்திருப்பாளோ. . தேற்ற ஆளின்றி தவிப்பாளோ. . என ஏதேதோ எண்ணி மருகினான்.
பொழிலரசிக்காகவே மொத்த குடும்பமும் துக்கத்திற்குச் சென்றார்கள். படபடக்கும் இதயத்தோடு எழிலும் சென்றான். பெருங்கூட்டம் என்றெல்லாம் இல்லாமல் அக்கம் பக்கத்தார் மட்டுமே இருந்தனர். அங்கு சென்ற பின் தான் தெரிந்தது அவளின் பெற்றவர்கள் காதல் திருமணம் வீட்டை எதிர்த்து புரிந்து வந்தவர்கள் என.
பொழிலின் தந்தை அவர் மனைவியின் காலடியிலேயே அமர்ந்திருக்க பொழிலோ எந்த உணர்ச்சியும் இன்றி வந்தவர்களுக்கு காபி கொடுத்துக் கொண்டிருந்தாள். வெற்றிச் செல்வி மலரொளி பூம்பாவைக்கு மனது கேட்காமல் சமையலறைக்குச் சென்று அந்த வேலையை அவர்கள் கவனிக்க அதியமான் ஆக வேண்டிய மற்ற காரியங்களை பார்த்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வெற்றிச் செல்வி பொழிலரசியை தனியே அழைத்துச் செல்ல அதைப் பார்த்தவன் அவர்கள் பின் சென்று சற்றே மறைவாய் அவளையே பார்த்திருந்தான்.
“இங்க பாரும்மா. . தைரியமா இருக்கனும் இனி நீ தான் அப்பாவ பாத்துக்கணும். . நாங்க எல்லாம் இருக்கோம். அத்தை நா இருக்கேன். . அழத் தோணிச்சுனா கொட்டித் தீத்துரும்மா. . இப்படி இருக்க கூடாது. . ”
“எனக்கு அழுகை வரலையே. . ”
வெற்றிச் செல்விக்கு மட்டுமல்ல எழிலமுதனே ஒரு நொடி திகைத்துவிட்டான்.
“பொழிலு??!!!”
“நிஜமா தான் அத்தை. . எனக்கு அழுகையெல்லாம் வரல. . அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. . என்னதான் நாம பாத்துகிட்டாலும் அவங்க உடம்பு வலியை அவங்க தான அனுபவிப்பாங்க. . ஒவ்வொரு தடவை அவங்க வலில முகம் சுழிக்கும் போதும் பயமா இருக்கும். . பாவமா இருக்கும். இப்போ அதெல்லாம் இல்லல. . அவங்க கஷ்டபடாம இருப்பாங்கல. . ”,என அப்பாவியாய் கேட்க வெற்றிச் செல்வி அவளை தன் மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டார்.
எழிலுக்கோ இனி அவளின் தாய்க்கு தாயாய் தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. அதன்பின் எழிலின் குடும்பம் தான் அவளை பார்த்துக் கொண்டார்கள். அந்த வருட படிப்பு முடிந்ததுமே மாற்றல் வாங்கிக் கொண்டு அவளது தந்தை வேறு ஊருக்குச் சென்றுவிட்டார்.
அன்றிலிருந்து எழில் இன்னமும் தன்னுள் முடங்கிப் போனான். அவள் நினைவே மூளையையும் மனதையும் ஆக்கிரமித்திருக்க படிப்பை அத்தோடு விட்டவன் தொழிலை கையில் எடுத்தான்.
அவன் நினைத்தவாறே வேலைப்பளு அதிகமிருக்கும் நேரம் சற்றே அவள் நினைவில்லாமல் இளைப்பாறுவான். ஆனால் தனதறைக்கு வந்த அடுத்த நொடி மீண்டும் அவனை ஆக்கிரமித்து விடுவாள்.
ஆனால் இது எதுவுமே அவனைத் தவிர யாரும் அறியா ரகசியம். அந்தளவு தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். முதன்முறையாய் அவனுக்கான திருமண பேச்சு வந்த போதுதான் முத்துவிடமே அதைப் பற்றிக் கூறினான்.
அனைத்தையும் காட்சிகளாய் கண்முன் ஓடவிட்டவன் அவனறியாமல் உறங்க ஆரம்பித்திருந்தான்.