குறிஞ்சிதலைவன் கூற்று

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்

பெறுகதில் லம்ம யானே பெற்றாங்

கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்

நல்லோள் கணவ னிவனெனப்

பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.

தொல்கபிலர்.

செய்தி

அவளது வாய் அவனுக்கு அமிழ்தம்.  அவள் நாக்கு அவனுக்குச் செம்மையானது.  சொன்ன சொல் தவறாத சில சொற்களை மட்டுமே பேசும்.  சின்மொழி பேசும்போது வரிசைபட்டுக் கிடக்கும் அவளது பற்கள் தெரியும்.  (சிரித்துப் பேசுவாள்) ஒருநாள் அவன் அவளிடம் இருந்தான்.  

மீண்டும் அவளை அடைய அவளது தோழியின் துணையை நாடினான்.  தோழி உதவ மறுத்தாள்.  பனைமட்டையால் செய்த மடல் மேலே ஏறிக்கொண்டு உன் ஊருக்கே வருவேன்.  அப்போது ஊரிலுள்ளவர்கள் அனைவருக்கும் உண்மை தெரியவரும்.  தெருவெல்லாம் இந்த நல்லவளின் கணவன் இவன் என்று பேசுவர்.  

அதைக் கண்டு எனக்குக்கூட அவளைப் போல நாணம் சிறிது வரும்.  என்றாலும் இந்த வழியில் நான் என்னவளைப் பெறுவது உறுதி.  – இப்படி அவன் தோழியிடம் சொல்லி அச்சுறுத்துகிறான். ”

திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று மாலை பாக்கியம் பொழிலை அழைக்க உச்சகட்ட பீதியில் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.

அங்கயர்கண்ணி அவளைப் பார்த்து சிரித்துவிட்டு நகர இஷ்ட தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டு வராண்டாவிற்குச் சென்றாள்.

அதற்கான காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை கடந்த நான்கு நாட்களாய் அவளும் தலைகீழாய் நின்று போராடிப் பார்த்தும் அமுதனை அவளால் பன்மையில் அழைக்க முடியவில்லை. . இரண்டு முறை பூம்பாவையிடமும் மலரொளியிடமும் மாட்டியிருந்தாள்.

அதற்காகவே பாக்கியத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்தவளுக்கு இன்று அது நடக்குமென்று தோன்றவில்லை.

“என்ன ஆச்சி. . ”

“ஏட்டீ எங்க உன் புருசன்??நீயும் அவனுமா நம்ம திருநெல்வேலில ஒரு கல்யாணம் இருக்கு நாளைக்கு போய்ட்டு வந்துருங்க. . அவனை கூப்பிடு விவரத்த சொல்லுதேன்…”

“ஹாங்ங்ங் அது அது ஏதோ வந்து. . ”

“ஏ அவனை கூப்டதானே சொன்னேன். . அதுக்கு எதுக்கு இப்படி ப்பப்பே ங்கிற??”

“சரி ஆச்சி நா போய் கூட்டிட்டு வரேன். . ”

“ஏது போய் கூட்டிட்டு வாரியா. . எந்த சீமைக்கு போய் கூப்ட போறவ. . அங்கன படி பக்கத்துல போய் கூப்டாலே கேக்கும் போ. . ”

தலையை சொறிந்தவாறே படிக்கட்டிற்குச் சென்றவள் செய்வதறியாமல் முழிக்க அடுத்து பாக்கியம் உச்சத்தாயில் கத்தினால் மொத்த குடும்பம் முன்பும் மானமே போய்விடும் என பதறியவளாய்,

“மாமா ஆச்சி கூப்புடுறாங்க. . கொஞ்சம் கீழே வாயேன். . ”

அங்கு அறையிலிருந்த எழிலுக்கோ அப்படி ஒரு புன்னகை முகத்தில் மலர்ந்தது. இருந்தும் அவளை சீண்டிப் பார்க்க எண்ணியவனாய் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

அவனைப் பற்றி அறிந்தவளாதலால் பல்லைக் கடித்தவாறே,

“அமுதா மாமா உன்ன தான் பாட்டி கூப்டுறாங்க கொஞ்சம் சீக்கிரம் வா. . ”,என்றவள் அதற்கு மேல் நிற்காமல் சென்று பாக்கியத்தின் அருகில் நின்று கொண்டாள்.

“ஏட்டீ இன்னுமா அவனை மரியாத இல்லாம கூப்டுட்டு திரியுத. . ஆனாலும் உனக்கு ஏத்தம் சாஸ்திதேன். . யாராவது கேட்டா என்ன  நினைப்பாக. . ”

“ஆச்சி நானே கஷ்டப்பட்டு மாமானு கூப்டு பழகுறேன். . எல்லாத்தையும் ஒரேடியா மாத்த சொன்னா எப்படி கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்குறேன். . ”

“ம்ம் நல்லா பதிலுக்கு பதில் பேசு…எல்லாம் என் பேரனைச் சொல்லணும். . ”

எனும்போதே எழில் அவளை பார்த்து சிரித்தவாறே அங்கு வர பாக்கியம் அவனிடம்,

“ஏலேய் இவ என்ன இன்னும் வா போனு சொல்லிட்டு கிடக்கா நீ ஒண்ணும் சொல்றதில்லயா?”

“ஆச்சி அவளுக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்ட்டு போட்டும் விடு இத்தனை வருசத்து பழக்கத்த உடனே மாத்த முடியுமா?”

“அதானே நீ ஒரு ஆளுனு உன்கிட்ட சொன்னேன் பாரு. . என்னவோ பண்ணித் தொலைங்க ரெண்டு பேரும். . சரி நாளைக்கு நம்ம சொந்தகாரங்க அங்கன டவுண்ல இருக்காகளே அவுக வீட்டு கல்யாணம். . நீயும் பொழிலும் போய்ட்டு வந்துருங்க. .

புதுசா கல்யாணம் ஆனவுக சோடியா கல்யாணத்துக்கு போய் வரணும்னு வழக்கம் அதனால காலையிலே போய்ட்டு வந்துருக. . ”

“ம்ம் சரி ஆச்சி. . பத்திரிக்கையை கொடு. . ”,என்றவன் மீண்டும் பொழிலை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துச் சென்றான்.

அனைவரும் உணவு உண்ணும் வரை பார்த்து அத்தைகளுக்கு உதவிவிட்டு தானும் சாப்பிட்டு விட்டு தனதறைக்குச் சென்றாள் பொழில்.

“அமுதா இந்தா பால். . . ”

“யாரோ என்னை மாமானு கூப்டாப்புல இருந்தது?”

“மகனே அதெல்லாம் ஆச்சி முன்னாடி மட்டும்தான். . ஏதோ அந்நியமா இருக்கு அப்படியியெல்லாம் கூப்டா. . ”

“அடிப்பாவி. . மாமானு கூப்டுறது அந்நியமா இருக்கா. . எனக்கு அதேன் கொஞ்சம் கிக்கா இருக்காப்ல தோணுதே. . ”

“ம்ம் தோணும் தோணும். . பாலை குடிச்சுட்டு வந்து படு டா. . காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கணும் அஞ்சு மணிக்காவது கிளம்பினாதான் முகூர்தத்துக்கு சரியா போ முடியும். . ”

“ம்ம் சரி டீ நீ ரெடியாய்டு என்னை எழுப்பு இந்த கூட்டத்தை பாத்தாலே எனக்கு அலர்ஜி. . இதுல எல்லார்ட்டையும் வேற பேசனும் நாளைக்கு. . ”

“ம்ம் ஒருநாள் தானே. . விடு பாத்துக்கலாம். . ”,என்றவள் வழக்கம்போல் உடைமாற்றி விட்டு படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை அலாரத்தின் ஒலியில் எழுந்தவள் தயாராகி அவனை எழுப்பிவிட்டு கீழே சென்றாள்.

யாரும் விழித்ததற்கான அறிகுறியில்லாமல் இருக்க சமையலறைக்குள் சென்றவள் பாலை காய்ச்சி காப்பியை தயார் செய்ய ஆரம்பிக்க மெதுவாய் பின்னே வந்தவன் சத்தமில்லாமல் அவள் தலையில் மாட்டியிருந்த கிளிப்பை உருகிவிட ஒரு நொடி பதறியவளாய் திரும்பியவள் அங்கு அவனைக் கண்டபின் தான் நிதானமனாள்.

“ஏன் அமுதா இப்படி பண்ற. . பயத்துல கொதிக்குற பாலை கொட்டிருப்பேன். . ”

“எப்பவுமே உன்னை இப்படி சீண்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் டீ. . பள்ளிகூடத்துல படிக்குற அப்போ உன் ரிப்பனை கழட்டி விட்டு ஓடும்போது அப்படி ஒரு சந்தோசம் இருக்கும். ”

“இருக்கும் இருக்கும் இப்போ நாலு அடி கொடுத்தா எல்லாம் ஒழுங்கா இருக்கும். . ”என்றவாறே அவன் கையில் காப்பியை கொடுக்க அதை வாங்கியவன் அப்படியே அடுப்பு  மேடையில் அமர்ந்து பருக ஆரம்பித்தான்.

“ஏன் அமுதா ஒவ்வொண்ணையும் நியாபகம் வச்சுருக்கியா டா?”

“ம்ம் இந்த ஊர் மொத்தமும் உன் நினைப்பு இருக்கே. . திருவிழால ஆரம்பிச்சு ஸ்கூல் க்ரௌண்ட் வரை. . அவ்வளவு ஏன் இந்த வீட்டுலேயே எத்தனையோ இருக்கே. . ”

“இங்கேயா??”

“ம்ம் முக்கியமா அந்த ஊஞ்சல். . உனக்கு ரொம்ப பிடிக்கும்ல. . நீ அதுல ஆடும் போதெல்லாம் உன்னை மறைஞ்சு நின்னு பாத்துட்டே இருப்பேன். உனக்குத் தெரியுமா. . நீ ஊரைவிட்டு போனப்பறம் நானும் இந்த ஊஞ்சல ஆடினதில்ல. . வேற யாரையும் அனுமதிச்சதும் இல்ல.

அதே நேரம் அதை கழட்டவும் மனசு வரல. . கண்ணி மட்டும் திருட்டுத்தனமா ஆடுவா. . அதுவும் வெளியே வண்டி நிறுத்தும் போதே சில நேரம் அந்த சத்தம் காதுல விழும். . ஹே ஒரு நிமிஷம் வாயேன். . ”

“எங்க??”

“வா சொல்றேன். . ”,என்றவன் அவளை அழைத்துச் சென்று ஊஞ்சலில் அமரச் சொல்ல கூச்சமாய் இருந்தாலும் மறுக்காமல் அமர்ந்தாள். ஊஞ்சலைச் சுற்றி பின்புறம் சென்றவன் அவளின் இருபுறமுமாய் பிடித்து லேசாய் ஆட்டிவிட ஆரம்பித்தான்.

“அப்போ உனக்கு கால் எட்டாது அதனால நீயே தள்ளி விட்டுட்டு வந்து உக்காந்துப்ப அப்போ எல்லாம் உன்னை உக்கார வச்சு இப்படி ஆட்டி விடணும்னு தோணும். . இப்போதேன் இந்த ஊஞ்சலுக்கு ஒரு அழகு வந்தமாதிரி இருக்கு. . ”

எனும்போதே வெற்றிச் செல்வி தனதறையிலிருந்து வெளிவர பொழில் அவசரமாய் இறங்கி நின்றாள். எழிலோ வழக்கம்போல் இதெல்லாம் ஒரு விஷயமா எனும் பாவத்தில் நிற்க,

“கல்யாணத்துக்கு கிளம்பாம என்னலே இரண்டு பேரும் சின்ன புள்ள கணக்கா விளையாட்டிட்டு இருக்கீக. . போங்க நேரமாச்சுல. . ”

“ம்ம்போறேன் மா. . நீ ஏன் அதுகுள்ள எழுந்துட்ட. . ”

“ஊஞ்சல் சத்தத்துல தேன் எழுந்தேன் யாருடா இந்த நேரத்துலனு. . நல்ல புள்ளைக. . ”

“ம்மா அப்பறமா நம்ம சம்முகம் அண்ணணே கூப்பிட்டு இதுக்கு நல்லா எண்ணை போட சொல்லு சத்தம் கேக்காம இருக்கனும். . அப்பறம் அடிக்கடி தூக்கத்துல எழுந்துருப்ப நீ. . ”

“சரிய்யா சொல்றேன். . ”,என்றவர் நிறைவாய் ஒரு புன்னகையோடு வேலையை கவனிக்கச் செல்ல அவன் தயாராவதற்காக பொழிலோடு மாடிக்குச் சென்றான்.

இருவருமாய் கிளம்பி வெளியே செல்லும் வரையுமே அமைதியாய் இருந்தவள் எழில் அறை வாசலை அடைந்த நேரம்,

“மாமா. . ”

எழில் திரும்பாமல் அப்படியே நின்றிருந்தான். அவனுக்குத் தெரியாதா அரசியின் குரல் வேற்றுமை. . நேற்று ஆச்சியின் முன் அழைத்ததற்கும் இப்போது அழைப்பதற்கும் குரலில் ஆயிரம் வித்தியாசம். இதயத்தில் சின்னதாய் ஒரு பரபரப்பு. .

“மாமா உன்ன தான். . ”

அவள்புறம் திரும்பியவன் விழிநோக்கி அவளை பார்த்திருக்க அடிமேல் அடியெடுத்து அவனருகில் வந்தவள் ஒன்றும் கூறாமல் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

ஒருநிமிடம் முழுதாய் அமைதியில் கரைய வாசலில் கேட்ட சேவல் கூவும் சத்தத்தில் அவனை நிமிர்ந்து ஏறிட்டவள் நா வறண்டு போனதாய் தோன்ற தொண்டையை செருமியவள்,”லவ் யூ மாமா. . ”

ஒரு வழியாய் நினைத்ததை கூறிவிட்டு தலை குனிந்து கொள்ள எழிலோ முதன்முறையாய் தன் அரசியின் முன்  தன்வசம் இழந்து கொண்டிருந்தான்.

என்ன பதில் கூறவென தெரியாமல் பிரமை பிடித்தவனாய் அவன் நிற்க அவளே தொடர்ந்தாள்.

“நிஜமா நீ பண்றதெல்லாம் என் கதையில வர்ற ஹீரோ தான் பண்ணுவான். உருகி உருகி காதலிக்குறதுனு சொல்வோம்ல. . அதோட அர்த்தம் சத்தியமா இப்போ புரியுது மாமா. . என்னையும் ராணி மாதிரி பாத்துக்க ஒரு ராஜா இருக்கான்னு நினைக்கும் போது லவ் யூ தவிர என்ன சொல்லனே தெரில.

இத்தனை வருசமா ஆலமரமா வளர்த்த காதலை ஆறே நாள்ல எனக்குள்ள வர வச்சுடியே. . இப்போ இந்த செகண்ட் உன் முன்னாடி இயல்பா என்னால இருக்க முடில. . ஒருமாதிரி படபடப்பு. . தயக்கம். . அது வெட்கமா கூட இருக்கலாம்.

இதுவரை எப்பவுமே இல்லாத ஒரு உணர்வு கீழே நீ ஊஞ்சலை ஆட்டிவிட்ட அப்போ எனக்குள்ள வந்துது. அதுமட்டுமில்லாம அத்தைகிட்ட அத்தனை வெளிப்படையா பேசும் போது எனக்கு அத்தை முன்னாடி காதெல்லாம் ஒருமாதிரி சிவக்க ஆரம்பிச்ச ஃபீல். .

இதெல்லாம் தான் காதல்னா அது இந்த ஜென்மத்துல உன்மேல மட்டும்தான் வரும் மாமா. . ஏன் எதுவுமே பேச மாட்ற?”

குரல் நடுங்கியவனாய் அவள் கையை தனக்குள் வைத்துக் கொண்டவன்,”என் காதலை இதுவரையுமே நா என் வாயால சொல்லலியே அரசி. . ”

“ஆமா இல்ல. . அப்போ நாதான் முதல்ல காதலை சொல்லிருக்கேன் என் காதலை ஏத்துப்பியா மாமா?”

“நீ இல்லாத எழிலமுதனே இல்லாதப்போ உன்னை ஏத்துக்காம நா எங்க டீ போகப் போறேன். . ”,என்றவன் கைவிவிரித்து நிற்க அப்படியே அவனோடு சிறு பறவையாய் ஒன்றிக் கொண்டாள்.

அவன் உயரத்திற்கு அவன் மார்மின் இதயத்துடிப்பு அவளுக்கு கேட்க யாருக்கும் வணங்காத அவனின் சிறம் தன்னவளின் தோளில் வளைந்து இளைப்பாறியது.

முதல் முறையாய் நேசத்தை தாண்டிய காதல் ஸ்பரிசம் இருவருக்குமே புதிதாய். ஒரு சில நிமிடத்தில் பிரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளத் தோன்றாமல் இரு திசையில் நிற்க அதற்குள் வெற்றிச் செல்வி அவர்களை கீழே அழைப்பது கேட்டு வேகமாய் கிளம்பிச் சென்றனர்.

அந்த ஒரு மணி நேர பயணம் முழுவதுமே இயற்கையும் இளையராஜாவும் மட்டுமே அவர்களை சூழ்ந்திருந்தனர். சொல்லில் அளக்க முடியா ஓர் பரிதவிப்பு இருவருக்குள்ளும் அதே நேரம் காதலை தன் இணையிடம் பகிர்ந்துவிட்ட திருப்தி என பல பல உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டிருந்தனர்.

கல்யாணத்தை முடித்துவிட்டு பத்து மணிக்கெல்லாம் கிளம்பியவர்கள் வேறு எங்கேயாவது செல்லலாம் என முடிவெடுத்து தன் அரசியை சிறிது நேரம் எந்த தொல்லையுமின்றி பார்த்து ரசிக்க விரும்பியவனாய் படத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

பின்னிருக்கையில் டிக்கெட் கிடைத்திருக்க விளக்குகள் அணைக்கப்பட்டு படம் ஆரம்பமான நொடி முதல் அவன் அரசியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். படத்திலே தன்னை தொலைத்திருந்தவள் தற்செயலாய் அவன்புறம் திரும்ப அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

“அநியாயம் பண்ணாத அரசி. . நாதேன் உனக்கு இடைஞ்சல் இல்லாம என் வேலையை பாக்குறேன்ல. . நீ பாட்டுக்கு படத்தை பாரேன். . ”

“எது என்ன இப்படி உர் உர்ருனு பாக்குறதுதான் உன் வேலையா என்னவோ போல இருக்கு மாமா. . ”

“தெரியாம மாமானு கூப்ட சொல்லிட்டேன். . இனி நம்ம ரூமை தவிர எங்கேயாவது மாமானு கூப்டனா அவ்வளவுதேன் சொல்லிட்டேன். மனுசன பாடாபடுத்துறதேயே பொழப்பா வச்சுருக்க டீ. . ”

“முடியாது எனக்கு இதான் பிடிச்சுருக்கு இனி இப்படிதான் கூப்பிடுவேன். . ”

“என்னவோ பண்ணி தொல. . நா நல்லவனா இருக்கணும்னு பாக்குறேன். . நீ விடமாட்டேங்குற. . அப்பறம் உன் இஷ்டம்…”,செல்லமாய் அவன் கையை கிள்ளியவள் இன்னுமாய் அவன் புறத்தில் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

மதிய சாப்பாட்டை வெளியிலேயே முடித்தவர்கள் மாலை வீடு திரும்புவதற்குள் நிறைய நிறைய பேசியிருந்தனர். இருவருக்கும் பிடித்தது பிடிக்காது விருப்பு வெறுப்பு என அத்தனையும். .

வீடு வந்த பின்பு அன்றைய மாலை பொழுது வீட்டில் அனைவரோடுமாய் கழிந்தது. வெகுநேரம் அனைவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க எழிலும் அத்தனை நேரமும் அமர்ந்திருந்தான் ஆனால் அமைதியான பார்வையாளனாய் மட்டுமே. . தன் அரசியை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் பெரியவர்கள் கிளம்பிவிட சிறியவர்களின் அரட்டை கச்சேரி ஆரம்பமானது.

தமிழையும் வேணியையும் பொழிலோடு சேர்ந்து அங்கயர்கண்ணியும் முகிலும் கிண்டல் செய்து கொண்டிருக்க அவர்களின் திருமண இரவன்று கண்ணி செய்த வேலையை சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்ததில் அரசியின் கால்கள் லேசாய் மரத்து போயிருக்க லேசாய் அவள் முகம் சுனங்கி காலை அசைத்ததற்கே வேகமாய் அவள் காலைப் பிறர் அறியாமல் அழுத்திப் பிடித்தான் எழில்.

பேச்சு மும்முரத்தில் யாரும் இவர்களை கவனிக்கவில்லை எனினும் அரசிக்கு கூச்சமாக இருக்க பார்வையாலேயே வேண்டாம் என்பதாய் தலையசைக்க அவனும் அவளைப் போன்றே தலையத்துவிட்டு மெதுவாய் அழுத்திக் கொடுத்தான்.

அங்கயர்கண்ணி அடுத்ததாய் முகிலமுதனை மாட்டிவிடும் எண்ணத்தில் அவனை எழிலிடம் கோர்த்துவிட்டாள்.

“ஏலேய் முகிலு அது ஏன் எழிலண்ணணை பாத்தா மட்டும் அப்படியே பம்முற. . இன்னைக்கு எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும். . ”

“ஏட்டீ கைல சிக்குன உன்னை கொன்னுருவேன். . ”

“அவளை ஏன் மிரட்டுற முகில். . நானே பல தடவை உங்கண்ணன்ட்ட சொல்லிருக்கேன். . அது ஏன் அப்படி. . ”

“அண்ணி பயமெல்லாம் ஒண்ணுமில்ல ஒருமாதிரி மரியாதைதேன். . என்னவிட பெரியவரு இல்லையா அதனாலயா இருக்கும். . மத்தபடி ஒண்ணுமில்ல. . ”

“ஓகோ அப்போ பயமில்லங்குற. . சரி அப்போ அண்ணன்கிட்ட உனக்கு தோணுற கேள்வி எதாவது கேளு பாப்போம். . ”

“ஏட்டீ…. ”

“சும்மா கேளுலே என்கிட்ட கேக்க என்ன இருக்கு. . உனக்கு தோணுறத கேளு. . ”

சில நொடிகள் யோசித்தவன் பின் தயக்கமாய்,

“உன்னை பொருத்த வரை காதல்னா என்னண்ணே. . உன்னை பாத்தா இந்த கேள்வி மட்டும்தேன் கேக்க தோணுது. . ”

“ஹாஹா பாத்தல கருவாச்சி என் தம்பி எப்படி கேட்டான்னு. . ம்ம் என்ன சொல்றது. . இப்போ நீ ஒரு பொண்ணை காதலிக்குறனு வை உனக்கும் அந்த பொண்ணுக்கும் எப்பேற்பட்ட சூழ்நிலை கிடைச்சாலும் உங்களுக்கு சில கட்டுப்பாடு இருக்கும்ல அதுல இருந்து மாறாம இருக்க முடியனும். .

பொதுவா கேக்க சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா உண்மையா அது ரொம்ப கஷ்டம் டே. . ஆசை உணர்ச்சி எல்லாத்தையும் தாண்டின ஒண்ணா இருக்கணும் அந்த புள்ளையை பார்த்தா வயித்துல பட்டாம்பூச்சி பறக்குமோ இல்லையோ நெஞ்சும் மூளையும் ஒருமாதிரி அமைதியை அடையணும். . இதெல்லாம் நமக்கு ஒருத்தர் மேல மட்டும்தேன் தோணும் அதுதேன் காதல். .

இந்த காலத்து காதல் விவகாரமெல்லாம் எனக்கு தெரியாதுலே. . நா சொல்றது என்னோட 20 வருசத்து காதலை. . ”

என எழில் முடிக்க அவனையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள் பொழில். கண்ணி அவளிடம்,

“அண்ணி அண்ணணே சைட் அடிச்சது போதும் இப்போ அண்ணன் சொன்ன அதே விஷயத்தை உங்க பாணில ஒரு எழுத்தாளரா சொல்லுங்க பாப்போம். . ரொம்ப நாளா உங்ககிட்ட நா கேக்க நினைச்து இது. . ப்ளீஸ் ப்ளீஸ். . ”

“ம்ம் சொல்லிட்டா போச்சு. . ”,என்றவள் சில நொடிகள் எடுத்து யோசிக்க ஆரம்பித்தாள். பின் தயாரானவளாய் குரலை சரிசெய்தவள் மென்மையாய் கூற ஆரம்பித்திருந்தாள்.

அவள் நினைவில் நீயும் உன் நினைவில் அவளும் அவரவர் வாழ்க்கை பயணத்தில் உங்களுக்கான சுய கோட்பாடுகளோடு நதியென இழுத்துச் செல்லப்படும் போது எதிர்பாராதனிமையில் நேரெதிரில் சந்திக்க நேர்ந்தாலும் அந்த தனிமையும் உங்களை தவறுசெய்ய யோசிக்கவிடாமல் இருக்குமானால் அந்த பேரன்பே காதல். .

கட்டி அணைப்பதும் முத்தமிடுவதும் காதலின் வெளிப்பாடு எனில் எந்த சூழலிலும் சுய கட்டுப்பாடுகளை இழக்காத காதல் பேரன்பின் வெளிப்பாடு

என்று முடித்தவள் தன்னவனைப் பார்க்க நிறைவான புன்னகை அவனிடத்தில். அனைவருமே கைத்தட்டி அவர்களின் பாராட்டுகளைத் தெரிவிக்க உள்ளிருந்து வந்த பாக்கியத்தின் குரலில் அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கூட்டத்தை கலைத்துச் சென்றனர்.

தனதறைக்கு வந்தவள் உடைமாற்றி அயர்வாய் கட்டிலில் அமர அதியமானிடம் பேசிவிட்டு பின்னே வந்தவன் ஒருநொடியில் தன்னை சரிசெய்து வந்து அவளருகில் அமர்ந்தான்.

ஏன் அரசி ரொம்ப சோர்வா தெரியுத?”

இல்ல இன்னைக்கு பூராவும் அலைஞ்து என்னவோ போல இருக்கு. . உனக்கு டயர்டாவே இல்லையா?”,என்ள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

எனக்கெல்லாம் நல்ல காலத்துலயே தெரியாது அதுவும் இன்னைக்கு சுத்தம் தூக்கமே வராது. . ”

சாய்ந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றும் கூறாமல் மீண்டும் தலை தாழ்த்திக் கொண்டாள்.

ஆனாலும் எப்படி உனக்கு எழுதுற ஆர்வம் வந்தது. . நா சொன்னே அதே விசயம்தேன் ஆனா நீ சொல்லும்போது ரொம்ப அழகா தெரிஞ்சுது. . ”

ம்ம் நீ உன் மனசுல உள்ளதை வெளிசாயம் பூசாம சொல்ற. . நா கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலையெல்லாம் பார்த்து சொல்றேன் அவ்வளவுதான் வித்தியாசம். . ”

ம்ம். . ஆமா காலையில இருந்து அத்தனை தடவை மாமா மாமானு கூப்ட்டு சுத்தின இப்போ என்ன மொட்டை மொட்டையா பேசுற. . ”

நீ ஏன் இப்படி எல்லாத்தையும் கவனிக்குற?”

நாதேன் சொல்லிட்டேன்ல உன் விசயத்துல எல்லாமே தனிதேன் சொல்லு. . ”

தெரில கூப்பிடனும்னு தான் நினைக்குறேன் ஆனா வர மாட்டேங்குது. . ”

ம்ம் வராது நா கேக்குறப்போ எல்லாம் வரவே வராது. . சரி நீ ஒண்ணும் கூப்ட வேணாம் முதல்ல தூங்கு. . காலையில பேசிக்கலாம். . ”,என்றவன் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்து அவளருகில் படுத்து வழக்கம் போல் அவள் கையை எடுத்து தன் மேல் வைத்துக் கொண்டவனின் புறம் திரும்பியவள்,

குட்நைட் மாமா. . ”,என சொற்களுக்கு வலிக்காமல் கூற அந்த இரவு விளக்கின் வெளிச்சத்திலும் அத்தனை மலர்ச்சி எழிலின் முகத்தில்.

சரியான ராங்கி டீ நீ. . ”

ஆமா உன்கிட்ட அப்படிதான். . ”

ம்ம் இந்த தைரியம்தேன் அப்போ இருந்தே என்னை உன்பக்கம் இழுத்துதுனு நினைக்கேன். . ”

ஏன் அப்படி?”

ம்ம் வீட்டுக்கு மூத்தவன் மத்ததுங்க எல்லாம் ரொம்பவே சின்னது அதனால எதிர்த்து கேட்க ஆள் கிடையாது. நா வச்துதேன் சட்டம் அந்தமாதிரி. . ஆனா என்னையும் பதிலுக்கு பதில் பேசி வெறுப்பேத்துன ஒரு ஆளு நீ மட்டும்தேன். முத்துகூட கேப்பான் ஏம்ல அந்த பிள்ளைகிட்ட வம்பு பண்ணிட்டே அலையுதனு. . நானும் சும்மா இருக்கணும்னு தேன் நினைக்கேன் ஆனா முடிலலேனு சொல்லுவேன். . ”

ம்ம்

என்ன ம்ம்?”

தூக்கம் வருது. . ”

தூங்கு. . ”

ஆனா தூங்க பிடிக்கல. . கொஞ்ச நேரம் நீ எதாவது பேசு நா தூங்குறேன். . ”

சரிதேன் நா என்ன உனக்கு ரேடியோ பெட்டியா??”

ப்ளீஸ் மாமா. . ”

கிழிஞ்சுது இனி இதை சொல்லியே காரியம் சாதிப்ப போலேயே. . சரி தூங்கு என்றவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க சில நிமிடங்களில் அவனை பார்த்தவாறே உறங்கிப் போனாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு முதல் முறையாய் அவளை ஆராயத் தோன்றியது. சிறு நெற்றி அதில் கலைந்து கிடக்கும் கற்றை முடி. . சின்ன கண்கள் லேசாய் சப்பை மூக்கு. . அழகிய உலர் திராட்சையாய் சின்னஞ்சிறு உதடுகள். . குண்டு கன்னம் சற்றே  பூசிய உடல்வாகு. .

ஏதோ சிந்தனையில் லேசாய் அவள் கன்னம் வருட இன்னுமாய் அவனருகில் ஒண்டியவளை அணைத்தவாறே தூக்கத்தை கொண்டுவர முயன்றவனுக்கு ஆனந்தத்தின் காரணமாய் தூக்கம் கண்ணாமூச்சி காட்ட ஆரம்பித்திருந்தது.